ஆபத்தான மருந்துகளை விற்க தமிழகத்தைக் குறிவைக்கும் அமெரிக்க நிறுவனங்கள் !#Alert

சென்னையில், ஒரு தனியார் மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றுபவர் திவ்யா... நடிகர் சத்யராஜின் மகள். ஊட்டச்சத்து தொடர்பான குறும்படங்கள் எடுப்பது, மருத்துவ முகாம்கள் நடத்துவது... என விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதுதான் இவருடைய முக்கியப் பணி. திவ்யா, இந்திய பிரதமர் மோடிக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதினார். பல ஊடகங்களில் அது பரபரப்புச் செய்தி ஆனது. பிரதமருக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது?

மருந்து, மாத்திரைகள்

சில நாள்களுக்கு முன்னர் திவ்யாவின் கிளினிக்குக்கு அமெரிக்க மருந்து கம்பெனியைச் சேர்ந்த சிலர் வந்திருக்கிறார்கள். மல்டிவைட்டமின் (Multivitamin) மருந்துகள், உடல் எடையைக் குறைக்கும் (Fat burner) உடல் எடையைக் கூட்டும் (Weight/Muscle gainer) சில மருந்துகளைக் காண்பித்திருக்கிறார்கள். மருத்துவ ஆலோசனைக்கு அவரிடம் வருபவர்களுக்கு அந்த மருந்துகளைப் பரிந்துரிக்கும்படி கேட்டிருக்கிறார்கள். அந்த மருந்துகளைப் பார்த்து திவ்யாவுக்கு ஏற்பட்டது அதிர்ச்சி, காரணம், அவற்றில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் ஸ்டீராய்டுகளே அதிகம். திவ்யா அவற்றை வேண்டாம் என மறுக்க. வந்தவர்கள் விடாமல், லஞ்சம் தர முயன்றிருக்கிறார்கள். அவர் பிடிவாதத்தைப் பார்த்து, மிரட்டிவிட்டும் சென்றிருக்கிறார்கள்.

இது தொடர்பாகவும், மருத்துவத்துறையில் உள்ள பல்வேறு சிக்கல்களைப் பற்றியும்தான் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் திவ்யா. அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கியமான மூன்று விஷயங்கள்...

ஸ்டீராய்டு அதிகமுள்ள மாத்திரைகள்

ஸ்டீராய்டு அதிகமுள்ள மாத்திரைகளால் அதிகப் பசி, கண்பார்வை மங்குதல். கல்லீரலில் பாதிப்புகள், மனநலம் தொடர்பான பிரச்னைகள் எல்லாம் ஏற்படும். நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும்.

கால்சியம், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, டி போன்ற ஊட்டச்சத்துகளை நம் உடல் ஏற்பதைத் தடுக்கும். வெறும் வயிற்றில் இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது வயிற்று எரிச்சல் உண்டாகும். வயிற்றில் புண், அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வைட்டமின் அதிகமான மாத்திரைகள் வாயுக் கோளாறுகளை ஏற்படுத்தும். சிறுநீரகக்கல் உண்டாகும். நிம்மோனியா காய்ச்சல் முதல் இதய பாதிப்புகள் வரை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

மாத்திரைகள்

தடைசெய்யப்பட்ட மருந்து விற்பனை

வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பல மருந்துகளை இந்தியாவில் விற்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. உடல்நலப் பாதிப்புகள் சரியாக வேண்டும் என்றுதான் மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறோம். இந்தத் தடைசெய்யப்பட்ட மருந்துகளோ ஏற்கெனவே இருந்ததைவிட அதிகமான பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்திவிடும்.

மருத்துவமனைகளின் லாபநோக்கம்

உடல்நலம் சரியான பின்னரும் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் வீணாகத் தங்கவைக்கப்படுகின்றனர். ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் சிகிச்சைக்கு வந்தால், அவர்களுக்குத் தொடர்பே இல்லாத சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

மருத்துவ முறைகேடு (Medical Malpractice), மருத்துவ அலட்சியம் (Medical Negligence)... இதற்கெல்லாம் நம் நாட்டில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனைக்கு நம்பிக்கையோடும் தைரியத்தோடும் செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும்.

இது பற்றி திவ்யாவிடம் பேசினோம். ``ஸ்டீராய்ட்ஸ், ஹைப்பர்விட்டமினோசிஸ் பற்றி விரைவில் வொர்க் ஷாப் ஒன்றை நடத்தத் திவ்யா சத்தியராஜ்திட்டமிட்டிருக்கிறேன். இது போன்ற மாத்திரைகள் உண்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி மக்களுக்கு அதிகமாக விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும் என்பது என் ஆசை. அப்போது விரிவாக நீங்கள் இதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.

வெளிநாடுகளில் மருத்துவரைச் சந்திப்பதற்கு முன்னர், பெரும்பாலானவர்கள் தங்களுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது என்பதை இணையத்தில் படித்து, தெரிந்துகொண்ட பிறகுதான் மருத்துவரைச் சந்திக்கிறார்கள். அதற்கான சிகிச்சை, மாத்திரைகள் பற்றியும் தெரிந்துகொள்கிறார்கள். ஆனால் நம் நாட்டிலோ சிறு பிரச்னை என்றாலும், மருத்துவரைத் தேடித்தான் ஓடுகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அத்தனை சோதனைகளையும் எந்த மறுப்பும் இன்றி அப்படியே செய்கிறோம். இதில் மாற்றம் வரவேண்டும். குறைந்தபட்சம் அந்த மருந்துகளைப் பற்றியாவது நாம் தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். அதற்கு திவ்யாவின் எதிர்காலத் திட்டங்கள் உதவும் என்றே தோன்றுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!