வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (27/07/2017)

கடைசி தொடர்பு:18:02 (27/07/2017)

தவறி, தடுமாறி விழவைக்கும் முதுமைத் தள்ளாட்டம்... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

``பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு...’’, ``படிக்கட்டுல ஏறப் போனாங்க பாட்டியம்மா... அப்பிடியே கீழ விழுந்துட்டாங்க...’’ இப்படியெல்லாம் சொல்லியபடி, வீட்டில் இருக்கும் முதியவரை அழைத்துக்கொண்டு தினமும் மருத்துவமனைப் படியேறுகிறவர்கள் ஏராளம். தவறிக் கீழே விழுந்த அனுபவம் நம் எல்லோருக்குமே இருக்கும். சைக்கிள் பழகும்போது, அவசரமாக பேருந்தைப் பிடிக்க ஓடும்போது, திடீரென செருப்பு அறுந்து போகும்போது, விளையாட்டின்போது... எனக் கீழே விழுவதற்கு எத்தனையோ காரணங்கள். ஆனால், முதியவர்கள் தவறிவிழுந்தால், தசைப்பிடிப்பு, சுளுக்கு, எலும்பு முறிவு, நினைவு பிறழ்தல்... என என்னென்னவோ பிரச்னைகளை அவர்களுக்குக் கொண்டுவந்து தந்துவிடும். அது, உடல்நலத்தை மட்டுமல்ல... வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு அவர்களை முடக்கிப் போட்டுவிடும். சரி... முதியவர்கள் தடுமாறி விழுவதைத் தவிர்க்க முடியுமா... முதுமை மற்றும் பலவீனம் காரணமாக கீழே விழாமல் தங்களைத் தாங்களே அவர்களால் பாதுகாத்துக்கொள்ள முடியுமா? ``முடியும்’’ என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரமேஷ் கண்ணா. அது குறித்து விரிவாகப் பேசுகிறார் இங்கே...  

முதியவர்கள் தவறி விழுவதற்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், 'இந்தியாவில் குளியலறை / கழிப்பறை மற்றும் ஈரம் மிகுந்த தரைகளில் விழும் முதியவர்களின் எண்ணிக்கையே மிக அதிகம்’ என்கிறது ஓர் ஆய்வு.தவறி, தடுமாறி விழவைக்கும் முதுமைத் தள்ளாட்டம்... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

தவறிவிழ வேறு சில காரணங்கள்...

முதுமை

பார்வைக் குறைபாடு.
கால் தசைகள் வலுவின்மை.
உடல் சமநிலையில் மாற்றம் (Imbalance).
உணர்ச்சி குறைந்தபோன பாதங்கள்.
மறதி.
மயக்கம்.
தலைசுற்றல்.
நரம்புக் கோளாறுகள்.
உடல் ஊனம்.
மயக்கம் அளிக்கக்கூடிய மருந்துகளை உட்கொள்ளுதல்.
ரத்த அழுத்தம் குறைதல்.
ரத்த சர்க்கரை அளவு குறைதல் மற்றும் எலும்புத் தசை தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட உடல் உள்புறக் காரணிகள்.
ஈரப்பதம் மிகுந்த தரைகள். 
எளிதில் நகரக்கூடிய தரை விரிப்புகள் / கால் மிதிப்புகள்.
நடக்கும் பாதையில் மேடு, பள்ளம்.
சமநிலையற்ற தரை.
வெளிச்சமற்ற அல்லது வெளிச்சம் குறைந்த வீட்டின் பகுதி.
சரியாக பொருந்தாத காலனிகள். 
இது போன்ற வெளிப்புறக் காரணிகளாலும் கீழே விழும் விகிதம் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.

முதியோருக்கு ஆதரவுக்கரம்

60 வயதைக் கடந்த அனைவருமே தாங்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் குறித்து மருத்துவரிட ஆலோசனை பெறவேண்டியது மிக அவசியம். 

முதியவர்கள் கீழே விழுவதைத் தவிர்த்துக்கொள்ள பொதுவான சில ஆலோசனைகள்... 

* நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் (குறிப்பாக கால்களுக்கு) மற்றும் சமநிலைப் பயிற்சிகள் (Balanacing excercise) போன்றவை தசைகளின் வலுவைக் காக்கும். கீழே விழுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும்.

* கண் பரிசோதனையை வருடத்துக்கு ஒரு முறை அல்லது தேவையைப் பொறுத்து கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும்.

* மயக்கம் தரக்கூடிய தூக்க மருந்துகளை உட்கொள்ளுதல், கடினமான வேலைகள், நடப்பது, படி ஏறி இறங்குவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தால், அதன் விளைவாக மயக்கம் அல்லது தலைசுற்றலை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். 

இருப்பிட கட்டமைப்பில் மாற்ற வேண்டியவை...

கழிவறை / குளியலறையில் வழுக்காத ரப்பர் விரிப்புகள் போர்த்திய தரையை உபயோகிக்க வேண்டும்.

கைப்பிடிப்பான்களை (ஆதரவுக்காகப் பிடித்துக்கொள்ளும் பிடி) கழிவறை அருகிலும் குளியலறை அருகில் பொருத்தியிருக்க வேண்டும். 
டாய்லெட் ஃப்ரேம்ஸ் (Toilet frames), டாய்லெட் ரெய்ஸுடு சீட் (Toilet raised seat), ஷோவர் சேர் (Shower chair) போன்றவை உடல் சமநிலைப் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் உபயோகமானவை.

மிகவும் வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளைப் பயன்படுத்தப்பட வேண்டும்.

அன்புக்கரம்

படிகள்
கைப்பிடி கண்டிப்பாக படிகளின் இருபக்கமும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இறங்கும்போது, வலி மிகுந்த அல்லது பாதிக்கப்பட்ட காலை முதலில் வைத்து இறங்க வேண்டும்.
ஏறும்போது, வலியற்ற அல்லது பாதிக்கப்படாத காலை முதலில் வைத்து ஏற வேண்டும்.

மற்றவை
வீட்டின் நடைபாதைகளில் தேவையற்றப் பொருள்களை அகற்றுவது நல்லது. உதாரணமாக புத்தகம், துணிகள், மின்சாதனப் பொருள்கள் மற்றும் நாற்காலிகள் போன்றவை.

மெத்தை கட்டிலின் நுனியில் விலகாமல் இருக்கிறதா என ஒவ்வொரு முறை எழும்போதும் அமரும்போதும் சரிபார்க்க வேண்டும்.

வெளிச்சம் குறைவான இடங்களிலும், மின்வெட்டின்போதும் நகர்வதை அல்லது நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி அல்லது தினமும் பயன்படுத்தும் பொருள்களை (செல்போன், மூக்குக் கண்ணாடி, மாத்திரை டப்பாக்கள் போன்றவை) உங்கள் அருகாமையில் சுலபமாக எடுக்கும் விதத்தில் வைத்துக்கொள்வது நல்லது. கூடுமானவரை எந்தப் பொருளையும் இடுப்பு உயரத்துக்கு மேல் வைப்பதைத் தவிர்க்கவும்.

மேலே சொல்லப்பட்ட ஆலோசனைகளைத் தவிர்த்து, அவரவரின் மருத்துவ பிரச்னைகளுக்கு ஏற்ப வாக்கிங் ஸ்டிக் அல்லது வாக்கர் உபயோகித்தல், சரியான காலணிகளை அணிதல், எலும்பு வலுவடைய வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்ளுதல், எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறுதல், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களைத் தவிர்த்தல், சாலைகளில் மேடு அல்லது பள்ளம் பார்த்து சரியாக நடத்தல், கூடுமானவரை ஈரம் மிகுந்த தரைகளில் நடப்பதைத் தவிர்த்தல் போன்றவை முதியவர்களைக் கீழே விழுவதில் இருந்து பாதுகாக்கும்!


டிரெண்டிங் @ விகடன்