`யோகாசனம்’ தெரியும்... `கொசுவாசனம்’ தெரியுமா? | A Story Of Mosquito

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (28/07/2017)

கடைசி தொடர்பு:15:14 (28/07/2017)

`யோகாசனம்’ தெரியும்... `கொசுவாசனம்’ தெரியுமா?

பிளக் பாயின்ட்டில் பொருத்தப்பட்டிருக்கிறது லிக்விடேட்டர். மெல்லிய விளக்கொளியில் சுடர்விட்டு, கொசுவை விரட்டும் ரசாயனத்தை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. பறந்து வருகிற ஒரு கொசு, `நான் வந்துட்டேன்...’ என வில்லன் அறிவிப்பதுபோல லிக்விடேட்டருக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, தன் வேலையைப் பார்க்கக் கிளம்புகிறது. இந்த லிக்விடேட்டர்களால் கொசுக்களுக்கு ஆபத்தோ இல்லையோ, நிச்சயமாக மனிதர்களுக்கு ஆபத்து என்பது தனிக்கதை. `கொசுவை அடிக்கிற மாதிரி ஊதித் தள்ளிட மாட்டேன்..?’ என்று விளையாட்டுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதை அடிப்பதோ, விரட்டுவதோ அத்தனை சுலபமான காரியமில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும். இப்போதெல்லாம் இவற்றை ஒழிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுவது ’மின்சார பேட்.’ ஆனால் ஏபி டி.வில்லியர்ஸ்போல 360 டிகிரியில் மஸ்கிட்டோ பேட்டை வைத்துச் சுழற்றினாலும் அவை தப்பித்துவிடுகின்றன. பூனைகளுக்கு அதிகளவில் இருக்கும் ரெஃப்ளெக்ஸ் (Reflex), ஈக்விலிபிரியம் (Equlibrium) போன்றவை இவற்றையும் தொற்றிக்கொண்டன என்று தோன்றுகிறது. உடல் மீது அமரும் அவற்றை அடிக்கிறேன் என்று ஆவேசப்பட்டு நம்மை நாமே அடித்துக்கொள்ளும் நிகழ்வுகள்தான் நடக்கின்றனவே ஒழிய, இவற்றை ஒழிக்க முடிவதே இல்லை. எனவே இவை குறித்து கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் நாம். 

கொசு பேட் 

தினசரி வேலைகளில் ஒன்று!

எண்ணிக்கையில் உச்சத்தை அடைந்துவிட்டன கொசுக்கள். தினமும் மூன்று வேளை உணவு உண்பதுபோல, இவற்றோடு போராடுவதும் தினசரி வேலையாகவே மாறிவிட்டது. யோகா... ஏதோ ஒரு ஆசனம் செய்கிறோம்... அப்போதுகூட, `யோகாசனம் தெரியும்... கொசுவாசனம் தெரியுமா?’ என்று சொல்லாமல் சொல்லி, நமக்கு இடையூறு தந்து, நம் ஆசன நிலையையே மாற்றி அமைக்கும் அளவுக்கு சக்திபடைத்த யோகா மாஸ்டர்களாக மாறிவிட்டன இவை.  ’தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினி கரப்பான் பூச்சியை துரத்தும்போது, வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் துவம்சம் செய்வார். அதுபோல, இவற்றை விரட்டும்போது நம் வீட்டுப் பொருள்களுக்கும் எதிர்காலத்தில் சேதம் நேரலாம்... கவனம்!

தூய்மை துயர் துடைக்கும்!

சமீபகாலமாக டெங்கு குறித்த அச்சம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சூழலில், இவற்றின் பெருக்கத்தைத் தடுக்கும் முயற்சியை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். இவை நம்மை கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகளைச் செய்யவேண்டியது அவசியம். நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவது ஒன்றுதான் இவற்றை முடக்குவதற்கான முதல்படி... நினைவில்கொள்வோம்! 

ஒத்துழைப்போம்... ஒழிப்போம்!

சுகாதாரக் குழு, நம் வீடுகளைச் சுற்றித் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்துகிறார்களா..? நாம் ஒவ்வொருவருமே அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டியது மிக மிக அவசியம். `நீரைச் சேமிக்கிறேன்’ என்று, கொசுக்களும் புழுக்களும் வாழக்கூடிய நீரைச் சேமிப்பது மிகப்பெரிய விபரீதம். வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தேங்காய் சிரட்டைகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள், டயர்கள், பழைய பாத்திரங்கள் போன்றவற்றில் நீரைத் தேங்கவிடுவது குற்றமல்ல... மிகப்பெரிய குற்றம். பல கொலைகாரர்கள் உருவாக நாம் வழிவகை செய்கிறோம் என்றுகூட இதை எடுத்துக்கொள்ளலாம். 

கொசுக்கள் உருவாகும் இடம் 

வீட்டுக்குத் தேவையான பொருள்களை மட்டும் வைத்துக்கொண்டு, பயன்படாத பொருள்களை அப்புறப்படுத்துவது நல்லது. கண்டதையும் போட்டு அடைத்து, வீட்டின் இட அடர்த்தியை அதிகரிக்கும்விதமாக, இவற்றுக்கு மறைவிடத்தை உருவாக்கித்தரக் கூடாது. சூரிய ஒளி உள் நுழையாத வகையில் கட்டமைக்கப்படும் வீடுகளில் இவை உருவாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. நோய் வருமுன் பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம். சற்று யோசித்துப் பார்த்தால், இவற்றின் பெருக்கத்துக்கு நாமும் ஒரு காரணமாகிறோம். 

யாருக்கு பாதிப்பு?

இவை பெருகுவதற்கு நாமே காரணமாக இருந்துவிட்டு, அதற்குப் பின்னர் சுருள்களையும், லிவிடேட்டர்களையும், க்ரீம்களையும் நம்பியே வாழ்க்கையைக் கடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. கொசுவத்திச் சுருளிலிருந்து வெளிவரும் புகையின் அசைவுகளுக்கு ஏற்ப, நடனமாடும் அளவுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொண்டுவிட்டன இவை. இறுதியில் வேதியியல் கலவை நிறைந்த புகையாலும், தெளிப்பான்களாலும் பாதிக்கப்படுவது மனித இனம்தான். தெளிப்பான்கள், க்ரீம்கள்… இவற்றோடு வரும் துண்டுச் சீட்டுகளை தயவு செய்து படித்துப் பார்க்கவும். 

விபரீதத்தை சுவாசிக்கிறோம்!

வீட்டின் கதவுகளையும் சாளரங்களையும் இறுக்கமாக மூடிவிட்டு, கொசு அழிக்கும் மருந்துகளை வீடு முழுக்கத் தெளிப்பதால், அதன் தாக்கம் நெடுநாள்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். மாநகராட்சியின் கொசு வண்டி, தெருக்களில் புகையை கக்கிக்கொண்டு வரும்போது, புகையைத் தாங்க முடியாமல் தெறித்து ஓடும் சிறு வயது நினைவுகள் ஞாபகம் இருக்கலாம். ஆனால் இப்போது, அடைத்துக்கொண்ட வீடுகளில் நாமே கொசு வண்டி அளவுக்கு மருந்தைத் தெளித்துவிட்டு, எங்கே தப்பித்து ஓடுவது என்று தெரியாமல் திணறுகிறோம். இறுதியில் நாம்தான் விபரீதங்களை சுவாசிக்கவேண்டியிருக்கும். 

கொசு

நன்னீர் கொசுக்கள்

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் அவ்வளவாக இவை இருந்ததாக நினைவில்லை. ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் கொசுக்களின் ஆதிக்கம்! மழையால் தேங்கிய பழைய நீரிலும் சாக்கடைகளிலும் உருவான கொசுக்கள் இன்று நன்னீரிலும் உருவாகும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஒரு சாதாரணக் கொசு, எத்தனை வகையான நோய் உண்டாக்கும் வைரஸ்களை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது என்பது வியக்கவேண்டிய விஷயம். மழைக்காலம் வந்துவிட்டால் போதும், தண்ணீரோடு சேர்த்து கொசுக்களும் வந்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று கால வேறுபாடெல்லாம் கொசுக்கள் பார்ப்பதில்லை. வெயில் காலமோ மழைக் காலமோ, தங்களுக்குச் சாதகமான சூழல் அமைந்தால், கொசுக்கள் பிறப்பு எடுத்துவிடுகின்றன.

வந்துவிட்டது கொசு!

சமீபத்திய கூக்குரல் இப்படித்தான் கேட்கிறது. ’டெங்கு வந்துவிட்டது!’, `ஜிகா வந்துவிட்டது…’, `மர்மக் காய்ச்சல் வந்துவிட்டது…’ இதெல்லாம் உண்மையல்ல. ’கொசு வந்துவிட்டது’ என்பதே உண்மை. கொசுக்களின் பெருக்கத்தை அழிப்பது மட்டும்தான் இப்போதைய அவசரத் தேவை. 

மஸ்கிட்டோ காயில் 

வியாபாரத் தந்திரம்

திரைப்படங்களில் வரும் புகைபிடிக்கும் காட்சிகளில், ’புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது’ என்ற வாசகம் திரையின் கீழ் ஒளிபரப்பப்படும். ஆனால், இதுபோல ’கொசுவத்திப் புகை உடல் நலத்துக்கு தீங்கு’ என்று யாரும் ஒளிபரப்புவதில்லை. இது, அறியாமையா அல்லது வியாபாரத் தந்திரமா?

வீடுகளில் மின்சாரம் இல்லாவிட்டாலும் யூபிஎஸ் (UPS) உதவியுடன் மின் லிக்விடேட்டர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் நஞ்சை வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. நாமும் நஞ்சோடு வாழ்க்கையை ஓட்டுகிறோம். எல்லாம் சரி, கொசுக்களின் பாதிப்பிலிருந்து பின் எப்படித்தான் தப்பிப்பது? மீண்டும் இயற்கை முறைகளைப் பின்பற்றுவதான் இந்தக் கேள்விக்கான பதில்! நோய் தாக்காத அளவுக்கு வலிமை தரும் உணவு, அந்தந்த பருவ காலத்துக்கு ஏற்ற உடை, இயற்கை அமைப்புக்கு தகுந்த இருப்பிடம், இயற்கை கொசு விரட்டிகளை பயன்படுத்துவது, கொசு வலை உபயோகிப்பது இவைதான் நல்லது. 

தீர்வு

நல்ல வேளையாக வேப்பிலைக்கு காப்புரிமை கேட்டவர்களை எதிர்த்துப் போராடி இயற்கை ஆர்வலர்களின் துணையோடு வென்றுவிட்டோம். இல்லையென்றால், கொசுக்களுக்கு வேப்பிலையால் புகைப்போடக்கூட, நாம் பிற நாடுகளையே சார்ந்திருக்கவேண்டியிருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்