Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேப்பர் கப்பில் டீ, காபியா? மஞ்சள்காமாலை, வயிற்றுப்புண், புற்றுநோய்... கவனம் பாஸ்!

paper cuppaper cup

டீக்கடைக்குப் போய் `அண்ணே... மூணு டீ!’ என்று சொன்னால் போதும். டீக்கடைக்காரர் டீயை அழகாக ஆற்றி, கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, மேலே சிறிது பால் நுரை, டிக்காக்‌ஷன் சேர்த்துக் கொடுப்பார். இந்த அருமையான பழக்கம் இன்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. பெரும்பாலான கடைகளில் வரிசையாக பேப்பர் கப்களை வைத்து, மொத்தமாக டீயை ஊற்றிக் கொடுத்துவிடுகிறார்கள். சாதாரண டீக்கடை தொடங்கி பிரமாண்டமான ஐ.டி நிறுவன கேன்டீன் வரை இப்படித்தான் டீயும் காபியும் விநியோகிக்கப்படுகின்றன. திருமணம் உள்ளிட்ட விருந்துகளில்கூட பாயாசம், காபி, டீ... உள்ளிட்ட பானங்களுக்கு இவைதான் பயன்படுகின்றன. இந்த `யூஸ் அண்ட் த்ரோ’ குவளைகள் ஒரு வகையில் வசதி என்பதை மறுப்பதற்கு இல்லை. சிலரோ கடைகளில் வழங்கப்படும் கண்ணாடி டம்ளர்களைவிட இவை ஹைஜீனிக் என்று கருதுகிறார்கள். ஆனால், `பேப்பர் கப் புற்றுநோயை ஏற்படுத்தும்’ என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகிக்கொண்டிருக்கிறது. இது உண்மைதானா... நம் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் இதில் இப்படி ஓர் ஆபத்தா? பொதுநல மருத்துவர் அருணாச்சலத்திடம் கேட்டோம்...

``பேப்பர் கப்புகளில் காபி, தேநீர் போன்ற சூடான பானங்களைப் பருகக் கூடாது’’ என்பவர், அப்படிக் குடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் விவரிக்கிறார்...மருத்துவர் அருணாச்சலம்

"பேப்பர் கப், டம்ளர் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றும்போது கரைந்து, அது ஒழுகிவிடாமல் இருக்க மெழுகு தடவப்படுகிறது. பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகுதான் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. `இது பல பின்விளைவுகளை உண்டாக்கும்’ எனச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதாவது, டீ, காபி, சூப் போன்ற சூடான பானங்களை அருந்தும்போது, இந்த மெழுகும் அந்த பானத்துடன் கலந்து நம் வயிற்றுக்குள் சென்றுவிடும். இதனால் தேவையற்ற உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

என்னென்ன பாதிப்புகள்?

`தொடர்ச்சியாக, வெகு நாள்களுக்கு இதில் சூடான பானங்களைக் குடித்துவந்தால், அதிலுள்ள மெழுகு கரைந்து, நம் உடலுக்குள் சென்று, மஞ்சள்காமாலை, வயிற்றுப்புண், புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்’ என்கின்றன சில ஆய்வுகள். குறிப்பாக, வயதானவர்களுக்கு இந்த அபாயம் மற்றவர்களைவிட அதிகம்.

இதைப் பயன்படுத்தும் இளம் வயதினருக்கு உடல்பருமன், சர்க்கரைநோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். இது, பெண்களுக்குப் பல்வேறு ஹார்மோன் பிரச்னைகளை உண்டாக்குவதால், பருவமடைவதில் சிக்கல், மார்பகப் புற்றுநோய் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

0மஞ்சள் காமாலை

பேப்பர் கப்பால் மட்டும் அல்ல. இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர், பிளாஸ்டிக்கால் ஆன பிளேட், பாத்திரம், டம்ளர் போன்ற பொருள்களால்கூட இது போன்ற பிரச்னைகள் ஏற்படும். பிளாஸ்டிக் பேப்பர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஹோட்டல்களில் சாம்பார், ரசம், சட்னி போன்றவற்றைக் கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள்... அனைத்துமே தவிர்க்கப்படவேண்டியவை.

உணவு வகைகளில், காரத்தன்மை அதிகமாக இருந்தால், அது பிளாஸ்டிக்குடன் சேர்ந்து நச்சுத்தன்மை உடையதாக மாறும். அதாவது, பிளாஸ்டிக் பொருளில் சில வேதிப் பொருள்கள் இருக்கின்றன. அதேபோல, உணவுப் பொருள்களிலும் சில வேதிப்பொருள்கள் இருக்கின்றன. இவைதான் உணவு நச்சுத்தன்மை உடையதாக மாறுவதற்குக் காரணம்.

இட்லித் தட்டில் துணிக்குப் பதிலாக, பிளாஸ்டிக் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இட்லியால் புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. இதற்கு நேரடியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றாலும், பிளாஸ்டிக் பாட்டில்களைத் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பயன்படுத்தினால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடும் என்கின்றன சில ஆராய்ச்சிகள்.

வயிற்றுப்புண்

மாற்று என்ன ?

நம் வசதிக்காகப் பயன்படுத்தும் பொருள்தான் பேப்பர் கப். ஆனால், அந்த வசதியே நம் உடல்நலத்துக்கு எதிராகத் திரும்புகிறது என்றால், நாம் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டியது அவசியம். எனவே முடிந்தவரை பேப்பர் கப்பைத் தவிர்த்துவிட்டு, சில்வர், பித்தளை வகை டம்ளர்களைப் பயன்படுத்துவது சிறந்து.

டம்ளர்

சூடான பானத்தை பேப்பர் கப்பில் அருந்தக் கூடாது. இந்த விஷயத்தில் எவ்வளவு உஷராக இருக்கிறோமோ அதேபோல இன்னொரு விஷயத்திலும் கவனம் தேவை. பல ரோட்டோர டீக்கடைகளில், தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதிலேயே 100 டம்ளர்களை வரைகூடக் கழுவுவார்கள். அது போன்றக் கடைகளில் டீ அருந்துவதைத் தவிர்ப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது’’ என்கிறார் மருத்துவர் அருணாச்சலம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement