ஆண்மைக்குறை போக்கும், இல்லறம் இனிக்கச் செய்யும் இயற்கையின் கொடை செண்பகப்பூ!

செண்பகப் பூ... கேட்கும்போதே ரம்மியமாக இருக்கிறதல்லவா?

மைக்கேலிய செம்பகா... இது செண்பக மரத்தின் தாவரவியல் பெயர். செண்பகம் என்ற பெயரில் ஒரு பறவை இருப்பது கூடுதல் தகவல்.

மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் தானாகவே வளரும் செண்பக மரம், மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும் நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது.

செண்பக மரம்

இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும், `சௌபாக்ய விருட்சம்' என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டுள்ள இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளம் சேரும் என்பது ஐதீகம். இவற்றை அடிப்படையாகக் கொண்டே சிவன் கோயில்கள் பலவற்றில் செண்பக மரம் தல விருட்சமாக வளர்க்கப்படுகின்றன. திருத்தென்குடித்திட்டை, திருஇன்னம்பர், திருச்சிவபுரம், திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம் போன்ற சிவன் கோயில்களிலும் திருச்சேறை, திருநந்திபுர விண்ணகரம் ஆகிய திருமால் கோயில்களிலும் செண்பக மரங்கள் தல விருட்சமாக உள்ளன.

செண்பகம்

செண்பக மரம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இலைகள் நீண்டு வளரக்கூடியவை. இலைகளின் மேற்புறம் பசுமையாகவும் பின்புறம் ரோமங்கள் நிறைந்திருப்பதாலும் காற்றில் கலந்திருக்கும் தூசுகளை அகற்றும் தன்மை படைத்தவை. மஞ்சள் நிற மலர்களின் வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதோடு ரம்மியமான ஒரு சூழலை உருவாக்கும். இதைச் சுவாசிப்பதன்மூலம் நம்மை மெய்மறக்கச் செய்யும்.

30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த மரங்களில் பூக்கள்தான் சிறப்பு. ஆகவே மலருக்காக வீடுகள் மற்றும் கோயில் நந்தவனங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் இலை, பூ, விதை, வேர். பட்டை ஆகியவற்றுக்கு மருத்துவக்குணங்கள் உள்ளன.

செண்பக மரத்தின் இலைகளைத் தேநீராக்கி குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். மேலும் பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டும். செண்பக இலைகளைக் கொண்டு பசியின்மை, வயிற்றுவலி, மாதவிலக்குப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ஓர் எளிய மருந்து தயாரிக்கலாம். செண்பக இலைகளைத் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். அதில் 2 ஸ்பூன் அளவு சாறு எடுத்து ஒரு துண்டு லவங்கப்பட்டைச் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள், வயிற்றுவலி, வயிற்றுப்புண் சரியாகும்.

செண்பகப் பூக்கள் தூக்கத்தைத் தரக்கூடியவை. தூக்கமின்மை மற்றும் மன உளைச்சலால் அவதிப்படுபவர்களுக்கு எளிய மருந்து தயாரிக்கலாம். இரண்டு செண்பகப் பூக்களுடன் அரை டீஸ்பூன் கசகசா, அரை டீஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து மையாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பால் சேர்த்து வடிகட்டி இரவு தூங்கப்போகும் முன் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு தூக்கம் வரும். இதைத்தொடர்ந்து மன அழுத்தம் நீங்கும். அத்துடன் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்துவதோடு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

செண்பகப் பூ வலி நிவாரணியாகவும் செயல்படக்கூடியது. செண்பகப் பூக்களை அரைத்து பசையாக எடுத்துக்கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதை வலி, வீக்கம், கைகால் எரிச்சல், உடல் எரிச்சல், முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும் தலைவலிக்குப் பூசி வந்தால் பலன் கிடைக்கும்.

செண்பகப் பூ

கண் நோய்க்கும் இது ஓர் அற்புத மருந்தாகும். செண்பகப் பூக்களுடன் அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து தண்ணீர் விட்டு மையாக அரைத்து கண் இமைகளின் மேலும் கீழும் பற்று போட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பலன் கிடைக்கும். இதேபோல் செண்பகப்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரால் கண்களைக் கழுவலாம். இந்தத் தண்ணீருடன் திரிபலா சூரணத்தைக் கலந்தும் கண்களைக் கழுவலாம். இதுபோன்ற செயல்களால் `மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் மட்டுமன்றி கண் சிவத்தல், கண்ணில் நீர்வடிதல் சரியாகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க செண்பகப் பூக்களை கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வரலாம். செண்பகப் பூக்களை நிழலில் உலர்த்திப் பொடி செய்து ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இது பித்தத்தைக் குறைப்பதுடன் அதனால் ஏற்படும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

செண்பகப் பூவை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் குடித்து வந்தால் ஆண்மைக்குறைவு நீங்குவதோடு காய்ச்சல் குணமாகும். இந்தக் கஷாயம் சிறுநீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்தும். செண்பகப் பூவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல், தலைவலி, கண் நோய்கள் குணமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!