Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணமதிப்பு நீக்கம், நீட், ஜிஎஸ்டி, ரேஷன் மானியம் கட்... என்னவெல்லாம் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறோம் நாம்?

மோடி அரசின் மூன்றாண்டுச் சாதனையில் ஒன்று இந்தியாவின் பங்குச் சந்தையின் மதிப்பை 50 லட்சம் கோடியாக உயர்த்தியது. இதன்மூலம் டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழுமங்கள் தனித்தனியாக ஒரு லட்சம் கோடி வருவாயை ஈட்டி சாதனை படைத்திருக்கின்றன. ஆனால் சாமானியனுக்கு..?

பண மதிப்பு நீக்கம்

கடந்தாண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீர் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் மூலமாக கறுப்புப் பணம் முழுமையாகக் கண்டறியப்படும் என்றும் இந்தியா வல்லரசு நாடாகும் என்றும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.  இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசம் கொடுத்தார்கள். அதன்படி வெயில், மழை எனப் பாராமல் சிறுகச் சிறுக சேமித்தப் பணத்தை மாற்ற வங்கி வாசலில் காத்துக் கிடந்தார்கள் ஏழை எளிய நடுத்தர மக்கள். 

கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள் தங்களிடமிருந்த கோடிக்கணக்கான பணத்தை எப்படி மாற்றினார்கள்? பல கோடி மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுடன் அரசியல் தலைவர்களின் மகன்கள், உறவினர்கள் வீடுகளில் கைப்பற்றப்பட்டன.

ஆரம்ப நிலையில் நாள் ஒன்றுக்கு 4000 ரூபாய்தான் மாற்ற முடியும் என்கிற நிலை இருந்தபோதே லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளுடன் போஸ் கொடுத்தனர் சில பெரும்புள்ளிகள். எனில், இந்தத்  திடீர் அறிவிப்பு உழைக்கும் அப்பாவி மக்களுக்கு மட்டுமே அதிர்ச்சியாக இருந்தது. 

மகளின்,  திருமணச் செலவுகளுக்காக காலம் முழுவதும் உழைத்து 500, 1000 நோட்டுகளாக வைத்திருந்த பெற்றோர்கள் பண மதிப்பு நீக்க அறிவிப்பைப் பார்த்த அடுத்தகணமே அதிர்ந்து போனார்கள். அரசு மாற்று வழிகளைச் சொன்னாலும் அறிவிப்பு வந்த நேரத்தில், 'எப்படிக் கல்யாணம் செய்து வைக்கப்போகிறோம்' என்று ஒருகணம் பயந்துபோனார்கள். மருத்துவமனையில் கணவனைச் சேர்த்திருக்கும் நடுத்தர குடும்பப் பெண் ஒருவர், கணவனின் அறுவை சிகிச்சைக்காகக் கட்டணம் செலுத்துகிறார். மருத்துவமனையின் கவுன்டரில் உள்ளவர் அதை வாங்க மறுத்து, '100 ரூபாய் நோட்டுகளாகக் கொண்டு வாருங்கள்' என்று  சொன்ன அந்தக் கணம் அந்தப் பெண்மணியின் மனம் எவ்வளவு துடித்திருக்கும். இதுபோன்று பல்வேறு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.  

நீட் பாதிப்பால் எழுதப்பட்ட ரத்தக் கடிதம்

நடுத்தர மக்களின் மேல் நிகழ்ந்த அடுத்த தாக்குதல், நீட் தேர்வு. போதாக்குறைக்கு மாநில அரசு, 'நிச்சயமாகத் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்காது' எனக் கடைசி வரை சொல்லிக்கொண்டிருந்தது. "நீட் தேர்வு நடக்காது, முன்பு போலவே  நாம் +2-வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடலாம்" என்று நினைத்தார்கள் மாணவர்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. 'இரவு பகல் பாராமல் படித்து, +2-வில் அதிக மதிப்பெண் பெற்று தலைமுறைக் கனவை நனவாக்குவா(ன்)ள் தங்கள் பிள்ளை'  என்று கனவு கண்ட நடுத்தர மக்களின் மனநிலை எப்படியிருக்கும்?

ரத்தத்தில் கையெழுத்துப் போட்டு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதும் அளவு ஒரு மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது நீட் தேர்வு. 

அடுத்ததாக திடீர் அறிவிப்பாக வந்தது ஜிஎஸ்டி. இதுவரை  இருந்த வரி நிர்ணய முறைகள் அனைத்தையும் மாற்றி ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய வரிவிதிப்பு ஜூலை 1, 2017 முதல் அமலுக்கு வந்தது.

ஜிஎஸ்டி வந்தால் நாடு சுபிட்சமாகும்... அத்தியாவசியப் பொருள்களின்  விலை குறைந்துவிடும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், 5 ரூபாய் விற்ற கடலை மிட்டாய் 7 ரூபாய் விலை ஏறிவிட்டது. ஒரு பொருளும் விலை குறைந்தபாடில்லை. வாரத்தின் 6 நாள்கள் வீட்டுச் சமையலறையில் கிடந்து அல்லலுற்று ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என்று நினைத்தால் சாப்பிட்டதில் பெரும்பகுதியை ஜிஎஸ்டி வரியாக தனியே தர வேண்டியிருக்கிறது.  

ஜி.எஸ்.டி

நேர்முக வரி என்பது நிரந்தர வருமானமுடைய உயர் நடுத்தர மற்றும் உயர் வகுப்பினருக்கு விதிக்கப்படுவது. மறைமுக வரி என்பது, நேரடியாக வெளியில் தெரிவதில்லை. பொருள்கள் வாங்குவதன் மூலம் மக்களிடமிருந்து பெறப்படுவது. இந்திய நிதித்துறையின் 2015-ம் ஆண்டு விவரப்படி இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு வரிகளின் மூலமாக கிடைத்த வருமானத்தில் 67 சதவிகிதம் மறைமுக வரி மூலமாகவும், மீதமுள்ள 33 சதவிகிதம் நேர்முக வரிகளின் மூலமாகவும் வந்தவை. எனவே, இதுபோன்ற வரிவிதிப்புகளின் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான் என்பது நிரூபணமாகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் ஏற்பட்ட திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள்ளானார்கள். 

இப்போது அடுத்த அடி...  ரேஷன் கார்டுக்கு வைக்கப்பட்ட செக்.  

உலக வர்த்தக ஒப்பந்தத்தின்படி இனி விவசாயிகளிடமிருந்து நெல்,கோதுமை போன்றவற்றை அரசு கொள்முதல் செய்யாது. இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காது. இதன்மூலம் விவசாயத்தை உயிர்மூச்சாகக் கொண்ட ஒரு நாட்டின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இதன் காரணமாக இந்தியாவில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு ஜீவாதாரமாக இருக்கும் பொதுவினியோகத் திட்டம் முடிவுக்கு வந்து விடும் என்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் நீக்கப்படும் என்கிறார்கள். 

ரேசன் கடை

'தொடர்ச்சியாக, அடிமேல் அடி... உரிமைகளும் சலுகைகளும் எவ்வித முன்னறிவிப்புகளும் இல்லாமல் மக்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது. இது பொருளாதாரப் பாதிப்புகளை மட்டுமன்றி மக்களை உளவியல் பாதிப்புகளுக்குள்ளும் தள்ளுகிறது' என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

இதுகுறித்து மனநல மருத்துவர் மோகன வெங்கடாச்சலத்திடம் பேசினோம்.மருத்துவர் மோகன வெங்கடாச்சலம்

"புகைப்பழக்கத்தை நிறுத்தவேண்டும் என்றால்  படிப்படியாகச் செய்யமுடியாது.  புகைப்பழக்கமோ, மதுப்பழக்கமோ உடனடியாக (abrupt) நிறுத்த வேண்டிய ஒன்று. மதுவும், புகையும் இதுவரை ஏற்படுத்திய பாதிப்புகளுக்குச் சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளவேண்டும். அதேசமயம் விடுபட நினைத்த அடுத்தகணமே நிறுத்திவிட வேண்டும். சில விஷயங்களை உடனடியாகச் செய்யவேண்டும். சிலவற்றை பொறுமையாகத்தான் செய்யவேண்டும். 

ஆனால், சில விஷயங்களை உடனடியாக நிறுத்தும்போது (Abrupt cessation) பாதிப்புகள் உண்டாகும். அதுபோன்ற ஒன்றுதான் மக்கள் இதுநாள் வரை அனுபவித்த சலுகைகளைப் பறிப்பது. அதுவும் திடீரென்று தடாலடியாகப் பறிப்பது. இதுபோன்று  திடீர் அறிவிப்புகள் இப்போது ஒரு டிரெண்டாக உள்ளது. அரசின் சமீபத்திய செயல்பாடுகளும் அந்த வகையில்தான் இருக்கின்றன. 

திடீரென்று ஒரு சூழல் மாறும்போது மக்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டிஸ்ஆர்டர் (adjustment disorder) எனும் பாதிப்பு உண்டாகும். உடனடியாக, ஒரு புதிய விஷயத்துக்குத் தங்களைத் தகவமைத்துக்கொள்ள மிகுந்த சிரமம் ஏற்படும். அது அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்தால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கக்கூடிய அறிவிப்புகள் வரும்போது அது மனதளவில் பல்வேறு பாதிப்புகளையே உண்டாக்கும்.

உதாரணமாக ரேசன் கார்டு இல்லை என்னும்போது ரேசன் பொருளை நம்பி வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரமே சிதைந்து போகும். இது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தரும். தன்னம்பிக்கை குறையும். நிதிநெருக்கடிக்கு ஆளாகி மனச்சோர்வு (Depression), மனஅழுத்தம், மனப்பதட்டம் (Anxiety) ஆகியவற்றை உண்டாக்கும். திடீரென்று மக்களின் மாத வருமானத்தில் துண்டு விழும்போது அதைச் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். 

ரேசன் கார்டு

இதுபோன்ற மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களை அணுகும்போது படிப்படியாகத்தான் (Gradual desensidation) செய்ய வேண்டும். மக்களுக்குத் திட்டங்களைப் பற்றிய பயத்தைப் போக்கி மனதளவில் தயார்செய்த பின்புதான் திட்டங்கள், சட்டங்கள் இயற்றப்படவேண்டும். மக்களை சோதனைப் (Experiment) பொருளாக நினைத்து திணிப்பதைத் தவிர்க்கவேண்டும்" என்கிறார்.

ஒரு நாட்டின் மிகப் பெரிய வளமாகக் கருதப்படுவது மனித வளமே. ஆனால், வளர்ச்சி என்கிற பெயரில் இதுபோன்ற உடனடி அறிவிப்புகள் , மனிதவளத்தையே சீரழிக்கும் விதமாக இருக்கின்றன. ஒரு நாட்டின் முன்னேற்றமோ, வளர்ச்சியோ மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது..! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement