எச்சரிக்கை... தரமற்ற நாப்கின்களால் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் ஏற்படலாம்! #Alert #NeedToKnow | Low quality Sanitary napkins is dangerous

வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (09/08/2017)

கடைசி தொடர்பு:16:58 (09/08/2017)

எச்சரிக்கை... தரமற்ற நாப்கின்களால் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் ஏற்படலாம்! #Alert #NeedToKnow

ல்லாவற்றிலும் ஆண், பெண் சம உரிமை என்று நித்தமும் போராடுவதைக் காட்டிலும், இயற்கை விதிகளை உணர்ந்து, நடைமுறைக்கு ஏற்ப உரிமைகள் கொடுக்கப்படுவதும், பெறப்படுவதுமே ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதில் அதிக நம்பிக்கைகொண்டவள் நான். பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ படிக்கும் பெண் பிள்ளைகளின் உடல் அசெளகரியங்களைக்கூட யோசிக்க முடியாமல், வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் முழு வெள்ளை உடையைச் சீருடையாக அணிந்துகொண்டு வரச் சொல்லும் இந்தக் காலத்தில், மலையாளப் பத்திரிக்கையான மாத்ருபூமியில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய விடுப்பு முறை ஒன்று என்னை ஆச்சர்யப்படுத்தியது. `அங்கு பணிபுரியும் பெண்களின் மாதவிடாயின் முதல் நாள் அன்று அவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. 

நாப்கின்

இருபாலருக்கும் மாதத்தின் எல்லா நாள்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை உணர்ந்த ஒரு நல்ல முயற்சியாக இதைப் பாராட்டத் தோன்றியது. சில தலைமுறைகள் வரை பெண்களின் பூப்பெய்தும் வயது, சராசரியாக 15-ஆக இருந்தது. இப்போதெல்லாம் 10, 11 வயது குழந்தைகூடப் பூப்பெய்யும் சூழலுக்குள் (உடலளவில் மட்டுமே) தள்ளப்படுகிறார்கள். 

ஜங்க் ஃபுட், அடிக்கடி உணர்ச்சிவசப்படவைக்கும் மீடியாக்கள், உடல் உழைப்பின்மை, படிப்பு மற்றும் குடும்ப அன்பின் குறைபாடுகளால் உருவாகும் மனச்சோர்வு என எத்தனையோ இதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், பல இடங்களில், இதைப் பற்றிய சிந்தனைகூட இல்லாமல் இருப்பது வருத்தமாகவும் இருக்கிறது. மாதவிடாய் குறித்த நிலை இப்படியிருக்க, ஒரு பெண் தன் வாழ்நாளில் 16,800 மாதவிடாய் பட்டைகளைப் (Sanitary Pads) பயன்படுத்துவதாகச் சில புள்ளியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

நாப்கின்களின் விகிதாசாரத்தையும் மக்கள்தொகையையும் கணக்கிடும்போது, அனைவருக்கும் `ஆர்கானிக்’ எனச் சொல்லப்படும் இயற்கையான நாப்கின்கள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. (பொதுவாகவே, இப்போது பல இடங்களிலும் `இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது’, `ஆர்கானிக்’ என்பதெல்லாம் வர்த்தக ஈர்ப்பாக மாறியிருந்தாலும்) மிக அவசியமான ஒன்றின் அவசியம் இன்னும் போய்ச் சேரவில்லை. உண்ணும் உணவில் கெமிக்கல் எனச் சொல்லி பயந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மாதவிடாய் பட்டையின் பிரச்னைகள் குறித்து யார் வருத்தப்பட முடியும்... பெண்களைத் தவிர!

நாப்கின்

உண்மையில், பெண்களின் ஆரோக்கியம் குறித்த அக்கறை அவர்களின் வாழ்க்கைச் சூழழைத் தாண்டி சிந்திக்கப்படுகிறதா எனக் கேட்டால், மனவருத்தத்துடன் `இல்லை’ என்றோ அல்லது `சிந்திக்கும் சூழலை இழந்து கொண்டிருக்கிறோம்’ என்றோதான் சொல்லத் தோன்றுகிறது. பெண்களைப் பன்முகத் திறமைசாலிகளாக உணர்ந்துகொண்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான், அதிக நோய்களுக்கு ஆளாகும் தலைமுறையாகவும் மாறிக்கொண்டிருக்கிறோம். 

ஒரு டஜன் குழந்தைகள் பெற்ற மரபைக்கொண்ட இந்த மண்ணில்தான் இன்று குழந்தையின்மை தலைவிரித்தாடுகிறது. போதாக்குறைக்கு, பூப்பெய்திய நாள் முதல் கிட்டத்தட்ட பத்தில் ஆறு பேருக்காவது மாதவிடாய் சுழற்சியில் குறைபாடுகள் இருக்கின்றன. பத்தில் எட்டுப் பேருக்காவது லைஃப் ஸ்டைல் டிசீஸாக ரத்தச்சோகை உருவாகிறது. 

மருத்துவரிடம் போகும் பலரில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பெண்கள், பி.சி.ஓ.எஸ் (Polycystic ovary syndrome - PCOS) பிரச்னையுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பையில் நீர்கட்டிகள் இருக்கும் பிரச்னை. இதன் விளைவாக, உடல்பருமன், குழந்தைப்பேற்றில் சிக்கல்கள், படபடப்பு போன்ற பல இன்னல்கள் உருவாகின்றன. முன்னர் இதன் சதவிகிதம் நிச்சயம் பாதியாகக்கூட இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இன்று இது பழகிப் போன ஒன்றாக மாறிவிட்டது. `பி.சி.ஓ.எஸ்-தானே... அது பெரும்பாலும் எல்லாருக்கும் இருக்கும்’ எனப் பெண்கள் கூட்டத்தில்கூட அது போக்குக்காட்டிச் செல்கிறது.

இத்தனை உடல் பிரச்னைகள் பெண்களுக்கு இருக்க, நாப்கின்கள் குறித்த மேற்கத்திய விவாதங்களைப் பார்க்கிறபோது, அன்றைய நாளில் நம் முன்னோர்கள் பருத்தி ஆடைகளைக்கொண்டு உபயோகப்படுத்திய நாப்கின்களில் இருந்த ஆரோக்கியத்தின் பின்னணி விளங்குகிறது. 

இந்திய நாட்டிலும் ஏறத்தாழ எல்லாப் பெண்களும் வேலைக்குச் செல்லும் நிலை அவசியமாக்கப்படுகிறது, இதில் துணி நாப்கின் சாத்தியமில்லை என நினைத்தால், குறைந்தபட்சம் இந்த கெமிக்கலின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் எண்ணமாவது பெண்களுக்கு வர வேண்டும். 

நாப்கின்கள்

முப்பதாயிரம் ரூபாய்க்கு மாத பட்ஜெட் போடும் பெண்கள்கூட 30 ரூபாய் நாப்கின்களைத் தேடுகிறார்கள் என்பதே நிதர்சனம். `யூஸ் அண்ட் த்ரோதானே...’ என பிளாஸ்டிக் கப்புகளைப்போலக் குறைந்த செலவில் இதைச் சமாளிக்கத் திட்டமிடுகிறோம். (ஜிஎஸ்டி பற்றி இங்கு யோசிக்க வேண்டாம்). 

சில நாப்கின்களில் கிட்டத்தட்ட நான்கு பிளாஸ்டிக்கின் திறன் இருப்பதாக மேற்கத்திய ஆராய்ச்சிக் கருத்துகள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால், சுற்றுப்புறத்துக்கு மட்டும் தீங்கு என்பதல்ல... சுயத்துக்கும் இது உகந்ததல்ல எனத் தோன்றுகிறது.

`வேறு வழி இல்லை என்று ஏற்றுக்கொள்பவர்கள் என்ன செய்யலாம்?’ எனக் கேட்டால், `ஒரு நாளைக்கு இரண்டு நாப்கின்களை உபயோகிக்கும் இடத்தில் நான்காக உபயோகம் செய்யுங்கள். குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்துக்கு ஒரு பட்டையை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள் நாப்கின்கள், பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் சிலர். 

`அதிக நேரம் ஒரே பட்டையை உபயோகிப்பதால், `டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்’ (Toxic shock syndrome) ஏற்பட்டு உயிரழப்புக்கூட நேரும்’ என்கிறது இது தொடர்பான ஆய்வு. ஆனால், நம் விளம்பரங்களைப் பாருங்கள்... `நீண்ட நேரம் தாங்கக் கூடியது..!’, `இரவு முழுக்க ஒரே நாப்கின் போதும்...’ என விதவிதமாகச் சொல்லி ஈர்க்க முயல்கின்றன. ஆக, விற்பனைக்கும் ஆரோக்கியத்துக்கும் இங்கு தொடர்பில்லை. எனவே, `நம் ஆரோக்கியம் நம் கையில் மட்டுமே இருக்கிறது’ என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். 

தொடுவதற்குச் சாதாரணமாக இருக்கும் நாப்கின்கள் பல வேதியியல் மாற்றங்களுக்குப் பின்னரே உருவாக்கப்படுகின்றன. அதே சமயம் பெண் உடம்பில் மிக சென்சிட்டிவ்வான பகுதிக்கு இது உகந்ததா என்பதை அவரவர் உடல் திறனைப் பொறுத்து, யோசித்து, தேர்வு செய்யுங்கள். ஒவ்வாமை ஏற்படுத்தும் நாப்கின்களை அவசரத்துக்குக்கூட அனுமதிக்காதீர்கள். எல்லா பெண்களுக்கும் எல்லா நாப்கின்களும் பொருந்தாது என்பதுதான் உண்மை. ஒரு வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் ஒரே வகை நாப்கினை உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன். அம்மா, பெண்ணோ அல்லது அக்கா, தங்கையோ உடல் வகை அறிந்து தேர்வுசெய்து பழகுங்கள். காரணம், பெண்களை அதிகம் அச்சுறுத்தும் பல நோய்கள் இந்த மாதவிடாய் காலத்தில்தான் தொற்றிக்கொள்ளத் துடிக்கும். இயல்பாகவே இருக்கும் உதிரப்போக்கும், உழைப்பின் களைப்பும் சேரும்போது நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருக்கும். எனவே, அந்த நேரங்களில் அதிக கவனம் தேவை. இதை உணர்ந்தே மாதவிடாய் காலங்களில் ஓய்வு அளிக்க உருவான சடங்கு, பின்னாளில் சடங்காக மட்டுமே மாறி சங்கடத்தை உருவாக்கியதை நினைவில்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

பெண்களின் நோய்க்கான பல காரணிகளில் சரியாகத் தேர்வு செய்யப்படாத நாப்கின்களும், அதிக நேரம் சுகாதாரமற்று உபயோகிக்கும் நாப்கின்களின் நச்சுத் தன்மையும் சேர்ந்து உடலில் பல நோய்களுக்குக் காரணியாக மாறுவதாக GABLIN-ன் ஆய்வு அறிவுறுத்துகிறது.  

நோய்களில் மனிதகுலத்தின் இன்றையச் சவால்களில் புற்றுநோயும் ஒன்று. பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் இரண்டாவதாக இடம் பிடித்திருப்பது `சர்விகல் கேன்சர்’ (Cervical cancer) எனப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய். சில சூப்பர் அப்சார்பென்ட் பட்டைகளில் இருக்கும் செல்லுலோஸ் (Cellulose), சர்விக்கல் கேன்சருக்கான பல உபயங்களை வழங்குவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது மட்டுமல்ல Tampons-ல் இருக்கும் சில கெமிக்கல் மற்றும் நச்சுச்சேர்க்கை, பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் அசாதாரணத் திசு வளர்ச்சியையும் உருவாக்குகின்றனவாம். ஆனால், வணிக விளம்பரங்களில் இது குறித்து ஏதேனும் எச்சரிக்கை வாசகம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

`வாசனைக்கான டியோடரன்ட் மலட்டுத் தன்மையையும் வழங்கலாம்’ என்கிறார்கள் சில மருத்துவர்கள். வெகுநேரம் ஈரம் இல்லாமல் இருக்கும் தன்மைக்காகவே இந்தப் பட்டைகள் வாங்கப்படுகின்றன. ஈரத்தன்மை குறைந்து உருவாகும் வெப்பநிலை வேறுபாட்டால் பூஞ்சைகள், பாக்டீரியாக்களின் உற்பத்தியும் அதிகம் உருவாகும். இதுதான் அரிப்பு, எரிச்சல் இன்ன பிற தொற்றுகளை எளிதாகப் பரவச்செய்து பெண்களின் ஆரோக்கியத்துக்குத் தொடர் இன்னல்களைத் தந்து கொண்டிருக்கிறது.

நாப்கின்

இயற்கையான மாற்றங்களை ஏற்றுக்கொள்வோம். உடலின் மீது அக்கறை செலுத்த இயற்கை கொடுத்த இந்த மூன்று நாள்களைக்கூட `நேரமில்லை’, `வசதியில்லை’, `இயலாமை’ எனச் சொல்லி மாதத்தின் மற்ற நாள்களைப்போல மாற்றிக்கொள்ள முயல்கிறோம். 

ஆனால், `நான் ஒரு பெண்! என் உடலில் ஏற்படும் இயற்கையான மாறுதல் இது. இதற்கான ஆரோக்கியமான சூழல் எனக்காகவும், என்னைத் தொடர்ந்து வரப்போகும் பெண்களுக்காகவும் உருவாக்கப்பட வேண்டும்’ என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் அழுத்தமாக உணரப்பட வேண்டும். பேலன்ஸிங் (Balancing) என்பது உயரமான ஒன்றின் உயரத்தைக் குறைப்பதோ அல்லது பருமனான ஒன்றின் எடையைக் குறைப்பதோ அல்ல... மற்றொன்றையும் அதற்கு இணையாக ஈடுகட்டுவது.

மாற்றம் என்பது தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். ஆகவே சானிடரி பேட்களின் தேவை ஆரோக்யத்துக்குப் பங்கம் விளைவிக்காதபடி இருக்க வேண்டும், ஒரு பெண்ணுக்கு இருக்கும் உண்மையான ஆரோக்கியம், அந்த மூன்று நாள்களில்தான் இருக்கிறது, எனவே ஆரோக்கியம் என்பதே அடிப்படைத் தேவை. முதலில் அடிப்படைவசதியைத் தேடி முன்னேறுவோம். எப்படி வாழ்க்கையின் தேவைக்காக ஆதி மனிதனான நாம், மரப்பொந்து, குடிசை, மாடி வீடு... என மாறினாலும், இன்னமும் அதை அலங்காரம் செய்ய மரங்களையும், ஓடுகளையும், கற்களையும் வீடுகளில் பதித்து அழகுபடுத்தி வாழ்கிறோமோ அப்படியே இதுபோன்ற விஷயங்களிலும் முன்னேற வேண்டும். பெண்களுக்கான மாதநாள்களில் ஒருநாள் விடுமுறை என்பது பெண்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான ஒன்று என்று புரிந்துகொள்ளுதல், ஒரு நிறுவனத்துக்கான நல்ல முன்னெடுப்பு என்பதையும் தாண்டி, மாத்ருபூமி நிறுவனம் செய்வது, ஒரு சமூக மாற்றத்துக்கான முன்மாதிரி முன்னெடுப்பு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்