Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொஞ்சம் உடற்பயிற்சி... நிறைய நம்பிக்கை... சுகப்பிரசவம் சாத்தியம்!

தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைத்ததில் சிசேரியன் அறுவை சிகிச்சைகளுக்கு முக்கியப் பங்குண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால், தேவையில்லாமல் செய்யப்படும் சிசேரியன்கள்தான் இப்போதைய பேசுபொருள். முடியாத நிலைமைகளில் கர்ப்பிணியை அறுவை சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்துவதில் தவறு கிடையாது. அனைத்து சூழ்நிலைகள் சுகப்பிரசவத்துக்கு தகுந்ததாய் இருந்தும், சிசேரியனுக்கு பரிந்துரைப்பதுதான் மிகப் பெரிய துரோகம்… மருத்துவரை நம்பி வந்த ’தாய்மைக்கு’ செய்யும் நம்பிக்கை துரோகம். அரசு மருத்துவமனைகளை விட பலமடங்கு அதிக எண்ணிக்கையில் தனியார் மருத்துவமனைகளில்தான் சிசேரியன் அறுவைகள் அரங்கேறுகின்றன என்கிறது கருத்துக்கணிப்பு. 

கர்ப்பிணி

நாள்காட்டி பிரசவம்:

சுகப்பிரசவத்தின் மூலம் இயற்கையாக குழந்தை பிறந்ததை வைத்து, நேரம் குறித்த காலம் மாறி, நாள்காட்டியில் நல்ல நேரம் பார்த்து சிசேரியன் செய்துகொள்வது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம். இயற்கையின் சட்டைக் காலரைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டு, செயற்கைக்கு சிவப்புக் கம்பளம் விரித்து உள்ளே வரவேற்கும் மேற்குறிப்பிட்ட செயல் தவறிலும் தவறு. பிறக்கும் குழந்தைக்கும் ஈன்றெடுத்த தாய்க்கும் நாமே ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பதாக ஆகிவிடும். பெரும்பாலான மேலை நாடுகளில் அவசியமிருந்தால் அன்றி, அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் வழிகாட்டுவதில்லை. பாரம்பர்யத்துக்கு பெயர் போன நமது நாட்டில்தான் சிசேரியன்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. எப்போது தொலைத்தோம் நமது பாரம்பர்யத்தை? 

எடைக் கட்டுப்பாடு சுகப்பிரசவத்துக்கு உதவும்:

மகப்பேறு காலம் முழுவதும் முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, கர்ப்பிணியின் உடல் எடை மற்றும் கருப்பைக்குள் வளரும் சிசுவின் எடையினையும் அளவுக்கு மீறி அதிகரித்தால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் தடைபடும். அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு, தேவைக்கேற்ப ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். 

கருப்பைக்குள் உடற்பருமன்:

’உடற்பருமன்’ தொந்தரவு சென்ற நூற்றாண்டில் நாற்பது வயதிற்கு பின் எட்டிப்பார்த்தது. ஆனால், இன்று கருப்பையிலிருந்து புறவுலகை எட்டிப்பார்க்காத குழந்தைக்கே உடற்பருமன் உண்டாகும் சூழ்நிலை இருக்கிறது. பிரசவத்தின்போது அதிக எடையில் சிசு வளர்ந்திருந்தால், பிரசவ பாதையில் வெளிவருவதில் அதிக சிரமம் உண்டாகும். இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நான்கு கிலோ, நான்கரை கிலோ என்ற எடையில் குழந்தைகள் பிறப்பதைப் பார்க்கலாம். காரணத்தை ஆராய்ந்தோமா?

சுகப்பிரசவம்

அறியாமை:

கருப்பையினுள் குழந்தை ஊட்டமுடன் வளர்வதற்கு சத்துப் பவுடர்களும் டானிக்குகளும் தேவையா என்பதை சிந்தித்து உட்கொள்ள வேண்டும். சத்துக்குறைபாடு உள்ள ஒருவர், தேவைப்படும் மருந்துகளை எடுக்கலாம். ஆனால் கருப்பையில் குழந்தை உருவாவது உறுதியானவுடனே, எந்த எந்த மருந்துகளை வாங்கி சாப்பிடலாம் என்று பட்டியல் போடுவது அறியாமை. வளைகாப்பு நடக்கும்போது, பழங்களையும் பாரம்பர்ய இனிப்புகளையும் வழங்குவதற்குப் பதிலாக, இரும்புச் சத்து டானிக்குகளையும் புரதச்சத்து நிறைந்த பவுடர்களையும் நிறைமாத கர்ப்பிணியின் முன் அடுக்கி வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. கணவன்மார்கள் மனைவிக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த மாதுளைகளும், பேரிச்சைகளும் இன்று மருந்துகளாகவும் மாத்திரைகளாகவும் உருமாறிவிட்டன. 

எளிய பயிற்சிகள்:

லாப நோக்கமுள்ள மருத்துவமனைகள், சுகப்பிரசவத்தையும் அறுவைப் பிரசவமாக மாற்றிவிடுகின்றன என்பதே குற்றச்சாட்டு. உண்மையும் கூட… சரி அனைத்து சிசேரியன்களுக்கும் லாப நோக்கமுள்ள மருத்துவமனைகள் மட்டும்தான் காரணமா? இல்லை. சில கர்ப்பிணிகளின் வாழ்க்கை முறையும் காரணம். கர்ப்பம் அடைந்தவுடன் முற்றிலுமாக ஓய்வு எடுப்பது அவசியமில்லை. சிறுசிறு வேலைகளை தாரளமாக செய்யலாம். எளிய நடைப்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சிகளின் மூலம் பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். சுகப்பிரசவத்திற்கென பிரத்யேக ஆசனங்கள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். முக்கியமாக பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, மனதை சாந்தப்படுத்துவதற்கு உதவும். மேலும், உடல் திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவையும் தடையின்றி சேர்க்கும்.

  கர்ப்பிணி

ஆலோசனை:

கர்ப்பகாலம் தொடங்கிய உடனே, அதைச் சார்ந்த சந்தேகங்களையும், கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் பற்றியும் அனுபவமுள்ளவர்களிடம் அறிவுரை கேட்பது நல்லது. அவ்வப்போது உண்டாகும் குறிகுணங்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதும் அவசியம். மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டில் இருக்கும் முதியவர்களிடத்திலும் (வீட்டு மருத்துவர்) ஆலோசனைகளைப் பெறலாம். பிரசவகாலம் நெருங்கும்போது ஏற்படும் பதற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் குருதியழுத்தமும் சுகமகப்பேற்றிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும். சீரான மனநிலையும் முக்கியம்.

எச்சரிக்கை:

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்துகொள்ளலாம். உண்மை காரணங்களில் மகவையும் தாயையும் காப்பற்ற சிசேரியன் சிகிச்சைகள் உதவும். 

பிரசவம் நெருங்கும்போது, கர்ப்பிணிக்கும் சிசுவுக்கும் எந்த தொந்தரவுகளும் இல்லையெனில், சிசேரியன் பற்றி நினைக்கவே தேவையில்லை. அப்படிப்பட்ட சூழலை உருவாக்குவது கர்ப்பிணிகளின் கையில்தான் இருக்கிறது. சுகப்பிரசவத்துக்குத் தகுந்த உடல்எடை, அதிகுருதி அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் இல்லாத நிலை, பிரசவத்தை எதிர்கொள்ள மனம் போன்றவை இருந்தால் போதும். சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு அவசியம் இருக்காது. கர்ப்ப காலம் தொடங்கியவுடனே சுகப்பிரசவம் தான் என்று மனதில் நிலைநிறுத்திக் கொண்டு, அதற்கு தேவைப்படும் வாழ்க்கை முறைகளை மேற்கொண்டால் சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். சுகப்பிரசவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். அரசு மருத்துவமனைகளும் சளைத்தவை அல்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement