அரசு மருத்துவமனைகளின் இன்றைய நிலை... விகடன் சர்வே முடிவுகள்! #VikatanSurveyResults | Current status of government hospital in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (11/08/2017)

கடைசி தொடர்பு:15:49 (11/08/2017)

அரசு மருத்துவமனைகளின் இன்றைய நிலை... விகடன் சர்வே முடிவுகள்! #VikatanSurveyResults

தரமான கல்வி, சிறந்த மருத்துவம் இரண்டும், தம் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை. அந்த அடிப்படையில் தமிழகத்தில் திட்டமிட்டு மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டன. இன்றைய நிலையில்,  ஆர்டிஐ மூலம் நாம் பெற்ற தகவல்படி, தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் 37 மருத்துவமனைகளும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் 303 மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. இவை தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. 2015-16-ம் ஆண்டில் மட்டும் மருத்துவக் கல்வி இயக்கக மருத்துவமனைகளில் 2 கோடியே 82 லட்சத்து 82 ஆயிரத்து 153 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 77 லட்சத்து 25 ஆயிரத்து 942 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத அளவுக்கு வெகுநுட்பமான அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் நடந்திருக்கின்றன.

இந்த அளவுக்கு கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையாகவும், உயிராதாரமாகவும் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் சூழல் குறித்து ஏராளமான புகார்கள் உள்ளன. உண்மையில், அரசு பொது மருத்துவனைகளின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன? அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்களுக்கு என்ன மாதிரியான அனுபவங்கள் ஏற்படுகின்றன? சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகள் எவை? மருத்துவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது.. இப்படி பல்வேறு கேள்விகளை முன்வைத்து விகடன் ஒரு விரிவான சர்வேயை நடத்தியது. 

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை

இந்த சர்வேயில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தார்கள். சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், மக்களின் கருத்துகளும் கீழே!

* 'நீங்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு 'ஆம்' என்று 83.1 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இல்லை என்று வெறும் 16.9 சதவிகிதத்தினர் மட்டுமே கூறியுள்ளனர்.

சர்வே

 

* 'அரசு மருத்துவமனைக்குச் செல்ல ஏன் அதிகம் விரும்புவதில்லை?' என்ற கேள்விக்கு, 'அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது' என்று 43.2 சதவிகிதத்தினரும், 'போதுமான சிகிச்சை வசதிகள் இல்லை என்பதால் அரசு மருத்துவனைக்குச் செல்ல விருப்பமில்லை' என்று 31.5 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். 

சர்வே 2

‘போதிய பொருளாதார வசதி உள்ளதால், அங்கு போக விருப்பமில்லை’ என 8.1 சதவிகிதத்தினரும், 'அங்கு அளிக்கப்படும் சிகிச்சையின்மீது நம்பிக்கை இல்லாததால் போக விரும்பவில்லை' என 17.2 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

* 'அரசு பொது மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்' என்ற கேள்விக்கு 'தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வசதியில்லை என்பதால்தான் செல்கிறோம்' என பாதிக்கும் மேற்பட்டோர் கூறியுள்ளனர். அதில் சிலர் மட்டும், 'எங்கள் பகுதி மருத்துவமனை சிறந்தது' என பெருமையாக மருத்துவமனைகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

விகடன் சர்வே முடிவு

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு பொது மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைமை மருத்துவமனைகளோடு செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களில் உள்ள சில அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

* 'நீங்கள் சென்ற அரசு பொது மருத்துவமனைகளில் நவீன மருத்துவத் தொழில்நுட்ப வசதி (எக்ஸ்ரே, இசிஜி, ஸ்கேன்...) இருக்கிறதா?' என்ற கேள்விக்கு, `வசதி இருந்தது, பயன் பெற்றேன்' என்று 44.5 சதவிகிதத்தினர் தெரிவித்திருந்தாலும் அதற்குச் சற்றே இணையாக 31.8 சதவிகிதத்தினர் `வசதி இருந்தும் அது பயன்பாட்டில் இல்லை' என்று தெரிவித்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் டெக்னீசியன் இல்லாததால் வெளியிடங்களுக்குச் சென்று எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து வர வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், போதிய மருத்துவர்கள் இல்லை, பெட் வசதி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

விகடன் சர்வே

குறிப்பாக, 'மாமல்லபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக இருந்தபோதிலும் அங்கு பெரும்பாலும் இரவுநேர மருத்துவர் இருப்பதில்லை. மேலும், அங்கு ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே என எந்த வசதியும் இல்லை என்பதால் அருகில் உள்ள செங்கல்பட்டு மருத்துவமனைக்குச் சென்றால் அங்குள்ள துப்புரவுப் பணியாளர்கள் மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளதாகவும், ஏழைகளின் உயிர் அத்தனை கேவலமாகப் போயிற்று' என்று வருத்ததோடு ஒரு வாசகர் தெரிவித்துள்ளார்.

விகடன் சர்வே முடிவு

* 'அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு `இல்லை' என்றே 80.5 சதவிகிதத்தினர் குறிப்பிட்டுள்ளனர். 19.5 சதவிகிதத்தினர் மட்டுமே உள்நோயாளியாக தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதில், சிறுநீரகம், இதயப் பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களே அதிகமாக உள்ளனர்.

விகடன் சர்வே முடிவு

 

* 'எந்த அரசு மருத்துவமனையாவது சிறப்பாகச் செயல்படுகிறது என நினைக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு `இல்லை' என்றே 66.7 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். `ஆம்' என்று 33.3 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்ட மருத்துவமனைகளில் பெரும்பாலும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாகவே உள்ளன என்பது சோகம்.

விகடன் சர்வே முடிவு

 

* 'அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் உங்கள் அனுபவத்தில் எப்படி?' என்ற கேள்விக்கு `கண்டுகொள்வதே இல்லை' என்று அதிகமானோர் (48.4 சதவிகிதத்தினர்) தெரிவித்துள்ளனர். கனிவாக நடந்துகொள்கிறார்கள் என 17.7 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.  அதையடுத்து `சில மருத்துவர்கள் மட்டும் நன்றாக கவனிக்கிறார்கள்' என்று 33.9 சதவிகிதத்தினர் குறிப்பிட்டிருந்தனர். 


விகடன் சர்வே முடிவு

* `இந்த அரசு மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை சூப்பர் என எதையாவது பரிந்துரைப்பீர்களா? என்று கேட்டிருந்தோம் அதற்கு `இல்லை' என்றே 76 % பேர் குறிப்பிட்டிருந்தனர். 24 சதவீதம் பேர் `ஆம்' என்று கூறியுள்ளனர்.


விகடன் சர்வே முடிவு

அவர்கள் குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளில் அதிகம் பதிவு செய்யப்பட்ட சில மருத்துவமனைகளின் பெயர்கள் இங்கே...

சிறுநீரகப் பிரச்னை - சென்னை ராஜீவ்காந்தி, ராயப்பேட்டை, மதுரை ராஜாஜி மற்றும் தர்மபுரி அரசு பொது மருத்துவமனைகள்.

புற்றுநோய் சிகிச்சை - சென்னை பல்நோக்கு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை

கண் தொடர்பான பிரச்னை - கோவை மற்றும் கடலூர் அரசு மருத்துவமனை.

இதயம் - கோவை அரசு பொது மருத்துவமனை.

அவசர சிகிச்சைப் பிரிவு - தேனி, தஞ்சாவூர் அரசு பொது மருத்துவமனைகள்.

எலும்பு மருத்துவம் - சென்னை ராஜீவ்காந்தி மற்றும் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைகள்.

பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு - சென்னை எழும்பூர், திருச்சி, தஞ்சை மற்றும் கோவை அரசு பொது மருத்துவமனைகள்.

காசநோய் - சைதாப்பேட்டை மற்றும் செங்கிப்பட்டி அரசு பொது மருத்துவமனைகள்.

ஹெர்னியா - தஞ்சாவூர் மருத்துவமனை.

அவசர சிகிச்சை - தேனி மற்றும் தஞ்சாவூர் அரசு பொது மருத்துவமனைகள்.

சித்தா - தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனை.

பல் மருத்துவம் - சென்னை பிராட்வே பல் மருத்துவமனை.

பாம்புக்கடி - தாராபுரம் அரசு மருத்துவமனை
 

* 'அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக லஞ்சம் கொடுத்ததுண்டா?' என்ற கேள்விக்கு `ஆம்' என்று 42.2 சதவிகிதத்தினரும் `இல்லை' என்று 57.8 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். `ஆம்' என்று தெரிவித்தவர்களில் டோக்கன் வாங்குவதில் தொடங்கி, நோயாளியை அழைத்துச் செல்லும் தள்ளுவண்டியைத் தள்ள, நோயாளியைப் பார்க்க, கட்டுப்போட, மாத்திரை வாங்க, பிரசவம் பார்க்க, பிரேத பரிசோதனை செய்ய என பெரும்பாலானவற்றுக்கு லஞ்சம் கேட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

விகடன் சர்வே முடிவு
 

* அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை வசதி பற்றி கேட்டதற்கு, `பயன்படுத்த உகந்ததாக இல்லை' என்று 71.4 சதவிகிதத்தினரும் `பரவாயில்லை' என்று 26.8 சதவிகிதத்தினரும், ‘சிறப்பாக உள்ளது’ என்று 1 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

விகடன் சர்வே முடிவு

*அவசரக் காலத்தில் அரசு மருத்துவமனை உங்களுக்குக் கை கொடுத்துள்ளதா?' என்ற கேள்விக்கு `ஆம்' என்று 38.8 சதவிகிதத்தினரும் `இல்லை' என்று 61.2 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.


விகடன் சர்வே முடிவு

இதில் விஷக்கடி, விபத்து போன்ற நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை சிகிச்சை பெரிதும் உறுதுணையாக இருந்ததாக பெரும்பாலானோர் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வேயில் பங்கேற்காதவர்கள் தங்களது மருத்துவமனை அனுபவம் குறித்து பகிர்ந்துகொள்ள விரும்பினால், கமெண்ட்டில் பதிவிடலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close