வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (13/08/2017)

கடைசி தொடர்பு:08:28 (13/08/2017)

மரணமில்லாப் பெருவாழ்வு... உடல் உறுப்பு தானம் எங்கே, எப்படி செய்யலாம்? #WorldOrganDonationDay

உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புஉணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த, ஆண்டுதோறும், ஆகஸ்ட் 13-ம் தேதி, உடல் உறுப்புதான தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை' என்பார்கள். அதுபோல, உடல் உறுப்புதானத்தில் விழிப்புஉணர்வு சுடரை ஏற்றி வைக்கத் தூண்டுகோலாக அமைந்தது ஹிதேந்திரன் மரணத்தில் அவரது பெற்றோர் எடுத்த முடிவு. 

உடல் உறுப்பு தானம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்களான அசோகன்-புஷ்பாஞ்சலி தம்பதியினர்தான் அந்த பெருமை மிகு பெற்றோர். தாங்கள் பார்த்துப் பார்த்து வளர்த்த மகன், விபத்தில் மூளைச்சாவு அடைந்ததும், அந்த நெருக்கடியான நேரத்திலும் அவருடைய உறுப்புகளை தானமாக கொடுக்க அந்த தம்பதி எடுத்த முடிவே, காலம் கடந்து அவர் பெயர் சரித்திரத்தில் இடம்பெற காரணமாகின.

தமிழகத்தில் உறுப்பு தானங்களின் விபரங்கள்

2008-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு உடல், உறுப்பு தானம் பற்றிய விழிப்புஉணர்வு அதிகமானது. கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில், தமிழகம்தான் இந்திய அளவில் முதலிடம் பெற்றது. 

2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை தமிழகத்தில் 1001 பேர் உறுப்பு தானம் செய்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து, 5610 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதில், இதயம் - 326, நுரையீரல் - 181, கல்லீரல் - 942, சிறுநீரகம்- 1815, இரைப்பை - 17, சிறுகுடல் -2, இதய வால்வு- 727, கண்விழித்திரை- 1529, தோல் - 67, ரத்த குழாய்கள் -2, எலும்பு- 1, ஹிதேந்திரன்முதுகெலும்பு -1 தானம் செய்யப்பட்டுள்ளன.  

இது ஒருபக்கம் என்றால் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்ற செய்தியும் கவலை அளிக்கவே செய்கிறது. இதற்கு, மேற்கத்திய நாடுகளில், இறப்புக்குப்பின் தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் கொடுக்க, 80 சதவிகிதத்தினர் வரை உறுதி எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், நம் நாட்டில், இது, 1 சதவிகிததுக்கும் குறைவாகவே உள்ளது என்கிறது ஓர் ஆய்வு.

இதற்கு உடல் உறுப்பு குறித்த முழுமையான விழிப்புஉணர்வு இன்னமும் பரவலாகவில்லை என்பதே முக்கியக் காரணம். குறிப்பாக, உடல் உறுப்பு தானம் செய்ய எங்கு பதிவுசெய்ய வேண்டும், எந்த உறுப்புகளை எல்லாம் தானம் செய்யலாம்? அதற்கான நடைமுறைகள் என்னென்ன?  ஒவ்வோர் உறுப்பையும் தானம் செய்வதற்கான கால வரையறை என்ன...? என எல்லாக் கேள்விகளுக்கும் விடை காணலாம்!

மூளைச்சாவடைந்தவர்களிடம் தானமாக பெறக்கூடிய உறுப்புகள்


மூளைச்சாவடைந்தவர்களிடம் இருந்து

மூளைச்சாவடைந்தவரிடமிருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம், இரைப்பை, சிறு குடல், குரல்வளை, பெண்களாக இருந்தால் கருப்பை,  கண்கள்,  காதின் நடுஎலும்புகள், எலும்புகள், குருத்தெலும்பு, தோல்கள்,  நரம்புகள்,  தமனிகள், கைகள்,  கை மற்றும் கால் விரல்கள், தோல் ஆகியவற்றை தானமாக பெறலாம்.

உயிரோடு இருப்பவர்கள் எந்தெந்த உறுப்புகளை தானம் செய்யலாம்


உயிரோடு வாழ்பவர்களிடருந்து

உயிரோடு வாழ்பவர்களும் உறுப்பு தானம் செய்ய முடியும். இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலில் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தில் ஒரு பகுதி, ரத்தம், எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை அவர்கள் தானம் செய்யலாம். அப்படி தானம் செய்யும்போது தனது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும், வாழும் மீதிகாலம் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்பதும் அவசியமில்லை.

மரணமடைந்தவர்களிடமிருந்து தானமாக பெறக்கூடிய உறுப்புகள்


இயற்கை மரணமடைந்தவர்கள்

இயற்கையாக மரணமடைந்தவர்களிடம் இருந்து கண்விழித்திரை, இதய வால்வுகள், தோல்கள், எலும்புகள், அதை பாதுகாக்கும் தசை நார்கள், குருத்தெலும்பு, நரம்புகள், தமனிகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம். 
அதேபோல, மரணமடைந்தவர்களின் உடலை ஆராய்ச்சிக்காக கொடுக்கலாம். எந்தவித மரணமாக இருந்தாலும், எலும்புகளையும், திசுக்களையும் எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். இப்படி ஒருவரிடமிருந்து 25 வகையான உறுப்புகளையும் திசுக்களையும் தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேருக்குத் தன் உறுப்புகளை தானமாக தர முடியும்.

உறுப்புகள் தானம் பதிவு செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விருப்பப்பட்டால், அவர் இருக்கும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, அதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த விணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம்.  அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம். இன்னொரு வழிமுறையும் உண்டு. உறுப்பு தானம் செய்ய விரும்புவோர் ‘டோனர் கார்டு’ எனும் அடையாள அட்டையை  தமிழக அரசு இதற்கென்றே அமைத்துள்ள (www.tnos.org, www.transtan.org)  என்ற  இணையதளத்துக்குப் போய் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

டோனர் கார்ட்


இந்த அட்டையில் பெயர்,  ரத்தப் பிரிவு, சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள், தோல்... என எந்த உறுப்பைத் தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக்கும்.  உடல் உறுப்பு தானம் செய்யப் பதிவு செய்துகொண்டவர்கள் கண்டிப்பாகத் தங்கள் குடும்பத்தினரிடம், அவரது விருப்பத்தைத் தெரிவித்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான்  இறப்புக்குப் பின்னர் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் உறுப்பு கேட்டு வரும்போது, குடும்பத்தினரின் சம்மதம் கிடைப்பதிலோ, உறுப்பைப் பெறுவதிலோ ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க முடியும்.

பின்பற்றப்படும் நடைமுறைகள்...

அரசு, தனியார் என எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும், அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையம் வழியாகத்தான் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படும். அதாவது, மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானம் செய்பவர்களையும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களையும்  இந்த ஆணையம்தான் ஒருங்கிணைக்கிறது. உறுப்பு தானத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் இருக்கவும் தமிழக அரசின் உறுப்பு தானத் திட்டம் 2008-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 60-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இணைந்துள்ளன. இந்த மருத்துவமனைகளில் யாருக்கேனும் மூளைச் சாவு ஏற்பட்டால், உடனே உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தெரிவிப்பார்கள். இக்குழுவில் உள்ளவர்கள் அந்த மருத்துவமனைக்குச் சென்று, மூளைச் சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி, அவர்களின் சம்மதம் கிடைத்ததும் அதற்கான உறுதிமொழிக் கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள். உடல் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகள், மருத்துவமனை மூலமாக ஏற்கெனவே, இந்தத் திட்டத்தினரிடம் ரூ.1,000 கட்டணம் செலுத்திப் பதிவு செய்திருப்பார்கள். 

இறந்த ஒருவரின் உடலை உடல் உறுப்பு தானத்துக்காகவோ, உடல் தானத்துக்காகவோ பெறுவதில் உள்ள சிக்கலைவிட, மூளைச் சாவடைந்தவரிடம் இருந்து பெறுவதில் அதிகமான சிக்கல்கள் உள்ளன. 

மூளைச்சாவு உறுதி செய்வது எப்படி?

ஒருவர் மூளைச் சாவடைந்தார் எப்படி உறுதி செய்வார்கள்?

விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்த நிலையில் ஒருவரின் உடல் செயலற்றுப்போவதை, டாக்டர்கள் 'கோமா நிலை' என்கிறார்கள். இதில், தன்னிலைக்கு மீண்டு வரக்கூடிய நிலை மற்றும் மீண்டுவர முடியாத நிலை என இரண்டு வகைகள் உள்ளன. இதில் மீண்டு வர முடியாத நிலைதான் `மூளைச்சாவு’ எனப்படுகிறது. மூளைச்சாவுக்கு சாலை விபத்துகளே பெரிதும் காரணமாகின்றன. 
மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் துடித்தாலும் அவரால் சுயமாக மூச்சுவிட முடியாது. எனவேதான் மூளைச்சாவு என்பது மரணமடைந்ததற்குச் சமம் என்கிறார்கள். மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு, செயற்கை சுவாசம் கொடுக்கப்படாவிட்டால், சில மணி நேரங்களில் இறந்துவிடுவார்.  செயற்கை சுவாசக்கருவி (Ventilator) மூலம் பிராண வாயு அளிக்கப்பட்டு மூளை தவிர மற்ற உறுப்புகள் தற்காலிகமாக பாதுக்காக்கப்படுகின்றன. அந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தித்தான், ஒருவர் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து இன்னொருவருக்குப் பொருத்துகிறார்கள். 

அதே நேரத்தில் ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என வெறுமனே ஒரு டாக்டர் அறிவித்துவிட முடியாது. அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது, ஒரு நபர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிசெய்வதற்கு நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு சான்று அளிக்க வேண்டும். மூளைச்சாவு அடைந்த நபர் எந்த மருத்துவமனையில் இருக்கிறாரோ, அந்த மருத்துவமனை நிர்வாகத்தில் இருக்கும் ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்த நபருக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவமனையில் இருக்கும் மற்றொரு மருத்துவர்... ஆகியோர் முன்னிலையில் நரம்பியல் நிபுணர் அல்லது நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மூளைச்சாவு அடைந்த நபரைப் பரிசோதிப்பார். அனிச்சைச் செயல்கள் (Brainstem Reflexes) பரிசோதிக்கப்பட்டு அவைகளை நிரந்தரமாக செயலிழந்ததைச் சுமார் 6 மணி நேர இடைவெளியில் இரண்டு தடவை உறுதி செய்வார்கள். அதற்குப் பிறகு சுவாச நிறுத்த பரிசோதனை என்ற ஒன்றையும் செய்து (Brain Death) மூளைச்சாவை உறுதி செய்வார்கள். இப்படி, பலகட்டப் பரிசோதனைகளைச் செய்துதான் ஒருவர் மூளைச்சாவு அடைந்திருக்கிறாரா, இல்லையா என்பது முடிவு செய்யப்படும். 

மூளைச்சாவு அடைந்தவரின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், எலும்புகள், தோல் ஆகியவற்றையும் மற்றவர்களுக்குப் பயன்படுத்தலாம். அதேநேரத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகளைப் பதப்படுத்தி வைத்திருக்கவும், பயன்படுத்தவும் அதற்கென உரிய காலக்கெடு வரையறுக்கப்பட்டிருக்கிறது. மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள்ளாக பிறருக்கு பொருத்தப்பட வேண்டியது அவசியம்.  

உடல் உறுப்புகளை தானம் செய்யவதற்கான காலக்கெடு


இதயம்  - 6 மணி நேரம் வரையிலும், சிறுநீரகம்  (Kidney) - 72 மணி நேரம் வரையிலும்,  கல்லீரல்  (Liver) - 24 மணி நேரம் வரையிலும்,  நுரையீரல்  (Lungs) - 4 - 6 மணி நேரம் வரையிரலும்,  கணையம் (Pancreas) - 24 மணி நேரம் வரையிலும், கண் விழித்திரை (Corneas) - 14 நாள்கள் வரையிலும், எலும்பு மஜ்ஜை (Bone Marrow) -5  நாள்கள் வரையிலும், தோல் (Skin) - 5 வருடங்கள் வரையிலும், எலும்பு (Bone) -  5 வருடங்கள் வரையிலும், இதயத்தின் வால்வுகள் ( Heart valves) - 10 வருடங்கள் வரையிலும் பதப்படுத்தி வைத்திருந்து மற்றவருக்குப் பயன்படுத்த முடியும்.

விழிப்புஉணர்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுவோர் உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமிருந்தால்  அதை ஓட்டுநர் உரிமத்திலேயே குறிப்பிடும் வசதி செய்யப்பட உள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவரும் இந்தக் கோரிக்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, ஓட்டுநர் உரிமத்தில் அவர்கள் தெரிவிக்கும் ஒப்புதலே அவர்களின் உடல் உறுப்புகளை தானமாகப் பெறுவதற்கு போதுமானது. இதனால் உறவினர்களிடம் அனுமதி பெறுவதற்கான நேரத்தை மிச்சப்படுத்தி உறுப்புகளை வீணாக்காமல் பயன்படுத்த முடிவும்.

அடுத்தாக, உடல் உறுப்பு தானம் நமது நாட்டில் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில்  உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகள் மூலம் உடல் உறுப்புதானத்தை மேலும் ஊக்குவிக்க முடியும்.

சுகாதாரத்துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இயக்கம் சுதந்திரமாக செயல்பட தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், உடல் உறுப்பு தானம் செய்யக்கூடியவரின் குடும்பம் அல்லது வாரிசுகளுக்கு இறந்தவரின் இழைப்பை ஈடுகட்டும் வகையில் அரசு சார்பில் நிவாரணம், வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்றவை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும்,  சமூக ஆர்வலர்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகிறது. 

இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கும்போது, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க உதவும். அது பல பேரின் உயிரினைக் காப்பாற்றும்.⁠

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்