மலச்சிக்கல்... மூட்டு வலி... ஆண்மைக்குறை போக்கும் பேரீச்சை!

அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய சத்துகள் நிறைந்த பழம் பேரீச்சை.  'Phoenix Dactylifera' என்ற தாவரவியல் பெயரைக் கொண்டது பேரீச்சை. செந்தணலில் சிதைந்து சாம்பலானாலும் மறுபடியும் எழுந்து பறக்கும் பறவையான பீனிக்ஸ் பறவை, 500 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடியது என்று கிரேக்க இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது.அதைப்போலவே பேரீச்சை மரமும் நெருப்பில் பாதிப்புக்குள்ளானாலும்கூட மீண்டும் வளரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் பேரீச்சைக்கு 'பீனிக்ஸ்' என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

பேரீச்சை

வெப்ப மண்டலத்தில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பேரீச்சையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி5 மற்றும் ஏ1, சி மற்றும் புரதச்சத்துகள், நார்ச்சத்துகள்  மட்டுமல்லாமல் இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், சர்க்கரை போன்ற சத்துகளும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக பேரீச்சையில் உள்ள சர்க்கரை எளிதில் உடம்பில் சேரக்கூடியது என்பதால், உடனடி சக்தியும் தெம்பும் தரக்கூடியது. எளிதாக செரிமானம் ஆகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரை நிறைந்தது பேரீச்சை. மேலும், சூரிய சக்திகள் இருப்பதால் இது மனித தசைகளை வலுப்படுத்தக்கூடியது. இதன் அடிப்படையில்தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிடுகிறார்கள்.

பேரீச்சம் பழத்தை அரைத்து பாலுடன் கலந்து ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உள்ளது. இதன் அடிப்படையில் பெருங்குடல் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை முக்கியப் பணியாற்றுகிறது. மேலும் இதில் உள்ள டேனின்ஸ் என்னும் நோய் எதிர்ப்புப்பொருளானது நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண் பார்வைக் கோளாறு நீக்குவதுடன் குடல் ஆரோக்கியம், சரும நலன் காக்கிறது.

ரத்த இழப்பை ஈடுகட்டவும் சிவப்பணுக்களை அதிகரிக்கவும் பேரீச்சம்பழச்சாறு உதவும். இரவு உணவு உண்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 3 பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெதுவெதுப்பான தண்ணீரைக் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும். பேரீச்சம்பழத்தில் சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம், மூட்டுவீக்கம் குணமாகும்.  தினமும் 4 பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, அஜீரண பேதி, மலச்சிக்கல், அமீபியா தொந்தரவு போன்ற வயிற்றுக் கோளாறுகள் வராது.

பேரீச்சம் பழத்தின் கொட்டையை வறுத்துப் பொடி செய்து பால், சர்க்கரை சேர்த்து காபி போல அருந்தி வந்தால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். இதேபோல் கொட்டைகளை நீக்கி வெறும் பழங்களை பாலில் போட்டுக் காய்ச்சி ஆறியதும் குடித்து வந்தால் சளி, இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை பால் சேர்த்து அரைத்துக் குடிக்கக் கொடுத்து வந்தால் ஊட்டச்சத்து கிடைக்கும். கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்கள் காலை, மாலை என இந்த பேரீச்சம்பழப் பாலை அருந்தி வந்தால் எலும்பு வலுவடையும். குறிப்பாக முதியோரைத் தாக்கும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுவதோடு, அவர்களுக்கு வரும் வேறு பல இன்னல்களையும் நீக்கும். மேலும், இளைப்பு நோயைக் குணப்படுத்துவதோடு முதியோருக்கு ஏற்ற ஓர் உணவு. 

பேரீச்சை

ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதுதொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு எலும்புத் தேய்மானம், கால்சியம் சத்துக் குறைபாடுகள் ஏற்படும். ஆகவே தினமும் காலை, மாலை நேரங்களில் வெறும் வயிற்றில் மூன்று பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இதுபோன்ற பிரச்னைகள் குறையும். மெனோபாஸ் காலகட்டத்தில் அதாவது 45 முதல் 52 வயது வரையிலான காலகட்டத்தில் பெண்களின் எலும்புகள் பலவீனமாவதோடு கை, கால் மூட்டுகளில் வலி ஏற்படும். அவற்றை சரிசெய்ய பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பழத்துடன் பால் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். இது பொதுவான உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.

பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பைச் சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு ஞாபக சக்தி அதிகரிக்கும், கைகால் தளர்ச்சி நீங்கும். ஆட்டுப்பாலுடன் பேரீச்சம் பழத்தைச் சேர்த்து இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் மேம்படும்.  பேரீச்சையுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

கண்ணாடி பாட்டிலில் விதையில்லாத பேரீச்சம் பழங்களைப் போட்டு சுத்தமான தேன் ஊற்றி மூன்று நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தினமும் காலை மூன்று பழங்களும் இரவில் மூன்று பழங்களும் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாய் அடைப்பு நீங்கி விடும். கருவுற்ற தாய்மார் தினமும் நான்கைந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!