ஆயுர்வேத மருந்துகள் ஆபத்தானவையா... மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? | Benefits of Ayurvedic

வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (16/08/2017)

கடைசி தொடர்பு:15:55 (16/08/2017)

ஆயுர்வேத மருந்துகள் ஆபத்தானவையா... மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

யுர்வேதம் கி.மு. 600-ம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப்பழமையான மருத்துவ முறை. நோய்களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்யும் இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும் மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம் சொல்கின்றது. ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றும் நம்பப்படுகிறது. 
இச்சூழலில், ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அண்மைக்காலமாக பரவலாக செய்திகள் வருகின்றன. மேலும், ஆயுர்வேத மருந்துகளில் நேரடியாக கனிமங்கள், ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன. 

Ayurvedic

ஆயுர்வேத மருந்துகளில் ரசாயனங்கள் இருப்பது உண்மையா..? 
சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனையின் ஆயுர்வேத உதவி மருத்துவ அலுவலர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம். 

டாக்டர் பாலமுருகன்“ஆயுர் என்றால் வயது, வாழ்க்கை; வேதம் என்றால் அறிவியல். மனிதன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? வாழக்கூடாது என்று சொல்வதே ஆயுர்வேதம். ஆகவே இதை மருந்து என்று சொல்வதைவிட 'வாழ்வியல் தத்துவம்' என்று சொல்வதே சரியானதாக இருக்கும். நோய் வரும்பட்சத்தில் அதிலிருந்து தப்பிக்கவும் நோயைத் தடுக்கவும் குணமாக்கிக் கொள்ளவும் ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய வழிகள் உள்ளன.

ஆண், பெண், குழந்தை என ஒவ்வொருவருக்கும் மருந்துகள் வித்தியாசப்படும். வாழும் சூழலைப் பொறுத்தும், மனோபாவம், தொழில், உடல்வாகு, ஜீரண சக்தி, உடலின் தன்மையைப் பொறுத்தும் மருந்துகள் வித்தியாசப்படும். இவை அனைத்தையும் கண்காணித்தே மருந்து கொடுக்கப்படும். நோயைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்ல... நோய் குணமானதும் அது மீண்டும் வராமல் தடுக்கவும் மருந்து தரப்படும். அது உள் மருந்து, புறமருந்து என அமையும்.

மருந்துகளைச் சாப்பிடும்போது சில வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மேலும் ஆயுர்வேதக் கோட்பாடுகளை பின்பற்றினால் நிச்சயம் முழுமையான பலன் கிடைக்கும். மற்றபடி ஆயுர்வேத மருந்து என்றில்லை, எந்தவொரு மருந்தையும் தவறான நபருக்கு தவறான மருந்து கொடுத்தால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் திரிபலா சூரணம், நெல்லிக்காய் லேகியம், அஸ்வகந்தா லேகியம் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது. ஆனால், ஒருசில மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் முறையாக உட்கொள்ள வேண்டும். அந்த மருத்துவர் தகுதிவாய்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

Ayurvedic

மனிதர்களுக்கு மட்டுமின்றி மரங்கள், விலங்குகளுக்கும்கூட ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் ஆயுர்வேத மருந்தைச் சாப்பிட்டவருக்கு பிரச்னை ஏற்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. யாரோ ஒருவருக்கு பிரச்னை ஏற்பட்டது என்பதற்காக ஒட்டுமொத்த ஆயுர்வேத மருத்துவத் துறையின்மீது குற்றம் சுமத்தக்கூடாது. சம்பந்தப்பட்ட நோயாளி முறையாக அந்த மருந்தைப் பின்பற்றாமல் இருந்திருக்கலாம். அல்லது மருந்து செய்ய பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில்கூட தவறு நேர்ந்திருக்கலாம். இதை விட்டு விட்டு ஆயுர்வேத மருத்துவத்தின்மீது தவறு சொல்வது சரியல்ல.

ஆயுர்வேத மருத்துவம் பழமையானது. ஆனாலும், எந்தவொரு மருந்தும் அதைத்  தயாரிக்கும் நிறுவனமே பொறுப்பு. ஆகவே அந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனம் தகுதிவாய்ந்த நிறுவனமா என்பதைப் பார்க்க வேண்டும். தாதுக்கள், மெர்க்குரி, ரத்தினங்கள் சேர்க்கப்பட்ட மருந்துகள் உள்ளன. அவை ஆயுர்வேத சாஸ்திரப்படி பல நூற்றாண்டுகளாக முறைப்படி தயாரிக்கப்பட்டு வருகின்றன. பஸ்ப, செந்தூரங்கள் என எதுவாக இருந்தாலும் அவை எந்தக்கேட்டையும் ஏற்படுத்தாது.

வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு மருந்து நிறுவனத்துக்கும் குவாலிட்டி கண்ட்ரோல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அரசு அனுமதி வழங்கும். இல்லையென்றால் அனுமதி ரத்து செய்யப்பட்டுவிடும்.

Ayurvedic

எனவே, ஆயுர்வேத மருத்துவம் பற்றி வரும் செய்திகளை நம்பத்தேவையில்லை. எங்கோ நடந்த ஒரு தவறைச் சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த ஆயுர்வேத மருத்துவத்தையும் குற்றம் சாட்டுவது தவறு. பொதுவாக எல்லா மருத்துவத்திலும் சில நேரங்களில் சில தவறுகள் நடக்கின்றன. ஆனால், நமது பாரம்பர்ய மருத்துவத்தில் தவறு நடக்கும்போது மட்டும் அதை பெரிதுபடுத்தி விடுகிறார்கள்.

சித்தா, ஆயுர்வேத மருத்துவம் என்பது நமது நாட்டு மருத்துவம் என்பதை உணராமல் பலர் பேசிவருகிறார்கள். தவறான எந்த ஒரு மருந்தையும், தத்துவங்களையும் நாம் போதிக்கவில்லை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஆயுர்வேத மருத்துவத்தின் குறிக்கோளாகும். அதனால் எந்த ஒரு நோயாக இருந்தாலும் நமது பாரம்பர்ய மருத்துவங்களில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் அலோபதி மருந்துகளைச் சாப்பிடும்போது ஆயுர்வேத மருந்துகளையும் சேர்த்தே சாப்பிடலாம். அதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. அதேநேரத்தில் Unlisence Product மருந்துகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்