சரும நோய்களைத் தீர்க்கும், மனதுக்கு இதம் தரும்... ஆயுர்வேத ஆடைகள்! | Health benefits of wearing ayurvedic clothes

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (17/08/2017)

கடைசி தொடர்பு:11:40 (17/08/2017)

சரும நோய்களைத் தீர்க்கும், மனதுக்கு இதம் தரும்... ஆயுர்வேத ஆடைகள்!

யுர்வேத  சோப், ஆயுர்வேத க்ரீம், ஆயுர்வேத மருந்து தெரியும்..! ஆயுர்வேத ஆடைகள் தெரியுமா? என்ன... ஆயுர்வேத ஆடையா? என்றுதானே கேட்கிறீர்கள். ஆமாம்... உடம்பை பூப்போல பாதுகாப்பதோடு, சரும நோய்க்கு மருந்தாகவும் ஆடைகள் இருக்கின்றன என்று சொன்னால் நம்ப சற்று சிரமமாகத்தான் இருக்கும். இப்போது பரவலாக சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன ஆயுர்வேத ஆடைகள்! எப்போதும் போல, இந்த நல்ல விஷயத்தையும் தொடங்கி வைத்தது, கேரளாதான்.

ஆயுர்வேத ஆடைகள்

இன்று நாம் உபயோகிக்கும் உடைகள் அனைத்தும் செயற்கை சாயம் பூசப்பட்டவை. இந்த செயற்கை உடைகள் அழகை கொடுத்து, கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்தாலும் அவை நமது உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. 

இந்தியாவில் 1856-ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் தான் 'சின்தடிக்' வேதிப்பொருள்கள், மற்றும் 'டாக்ஸிக்' வேதிப்பொருள்களால் உருவான உடைகள் அறிமுகமாயின. அதற்கு முன்பு வரை, நம் மூதாதையர்கள் உடம்புக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கையான ஆடைகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். 

குறிப்பாக, அரசர்கள் இயற்கை வண்ணங்களால் சாயமேற்றப்பட்ட, மூலிகைகளால் தோய்க்கப்பட்ட உடைகளைத்தான் பயன்படுத்தினார்கள். குளிருக்கு ஒரு மாதிரியான ஆடைகளையும், வெயிலுக்கு ஒரு மாதிரியான ஆடைகளையும் அக்கால உடைஉற்பத்திக் கலைஞர்கள் தயாரித்தார்கள். உடலை மூடுவதற்காக மட்டுமன்றி, மனதை அமைதிப்படுத்தவும், சரும நோய்கள் வராமல் காக்கவும் உடைகள் பயன்படுத்தப்பட்டன. 

ஆடை தயாரிக்கும் முறை

ரசாயனக் குவியலாக ஆடைகள் மாறிவிட்ட இன்று, நம் மூதாதையர்களுடைய ஆயுர்வேத ஆடைத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்திருக்கிறது கேரள அரசு. 

கேரளா, எப்போதுமே இதுமாதிரியான பண்பாடு சார்ந்த விஷயங்களில் மிகவும் முற்போக்காக செயல்பட்டு வருகிறது. 1956 -க்கு முன்னிருந்த திருவாங்கூர் ராஜாக்களின் காலத்திலிருந்தே உள்ளூர் உற்பத்தி பெரிதும் உற்சாகப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு இறக்குமதி முற்றிலுமாக தடுக்கப்பட்டது. இன்றளவுக்கும் கேரள அரசின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. 2006-ம் ஆண்டு ஆயுர்வேத ஆடை தயாரிக்கும்  திட்டத்தை அறிமுகப்படுத்தியது கேரள அரசு. ஆனால், அந்தத் திட்டத்தின் ஆயுள் ஒரு வருடம் மட்டும்தான் நீடித்தது. அதன்பிறகு பெரிய அளவில் அத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் அன்று அரசு அறிமுகப்படுத்தியதை இறுகப்பிடித்து இன்று உலக அளவில் ஆயுர்வேத ஆடைகளைப் பிரபலப்படுத்தி இருக்கிறார் ஓர் இளைஞர். பாலராமபுரத்தைச் சேர்ந்த அவரது பெயர் சுஜிவ்.

சுஜிவ்வின் குடும்பம் 63 வருடமாக கைத்தறி ஆடை தயாரிக்கும் தொழிலைச் செய்து வருகிறது. கேரள அரசு, உதவியோடு தொடக்கத்தில் ஆயுர்வேத உடைகளைத் தயாரித்தார் சுஜிவ். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மார்க்கெட் ஆகவில்லை. வண்ணங்களிலும், செயற்கைகளிலும் மயங்கிய மக்கள், பாரம்பர்யமான மருத்துவ ஆடைகளை வாங்கத் தயாராக இல்லை. 

ஆடைகள்

இ்ந்நிலையில் சுஜிவ்வுடன் கைகோத்தார் இயற்கை ஆர்வலரான குமார். பாரம்பர்யம் மீது இருந்த ஈர்ப்பினால், பன்னாட்டு நிறுவனத்தில் தான் பார்த்த  வேலையை விட்டுவிட்டு முழுமையாக ஆயுர்வேத ஆடை ஆராய்ச்சியில் இறங்கினார் அவர். இருவரும் கைகோத்து ஆயுர்வேத ஆடைகளுக்கு டிரேட் மார்க் அங்கீகாரத்தைப் பெற்றார்கள். பழங்காலச் சாயமேற்றும் முறைகளேயே சிறிதும் மாற்றாமல் அப்படியே பயன்படுத்தினார்கள். ஆயுர்வேத ஆடைகளின் சந்தை விரிந்தது. தேவைகள் அதிகமாயின. 

பாலராமபுரத்திலிருந்து முழுமையாக தனது சாயப்பட்டறையை ஈரோட்டுக்கு மாற்றினார் சுஜிவ். ஆயுர்வேத ஆடை உற்பத்தியைப் பரவலாக்கும் நோக்கத்தில் இயற்கை சாயம் ஏற்றும் நுட்பத்தையும் ஆடை தயாரிப்பு முறைகளையும் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்கள். இன்று இந்தியாவைத் தாண்டி இந்த ஆயுர்வேத உடைகள் ஜெர்மன், ஜப்பான், இலங்கை, அயர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணிக்கின்றன. 

ஆயுர்வேத மூலிகைகள்

இந்த இயற்கை ஆயுர்வேத உடைகள் துளசி,மஞ்சள்,கடுக்காய்,செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்,வெங்காயத் தாழ், மாதுளை, மாட்டுக் கோமயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. காய்கறிகள், இலை, தழைகள், மரப்பட்டைகள், பழங்களில் இருந்து வண்ணம் எடுக்கிறார்கள். ஆடைகள் மட்டுமன்றி பெட்ஷீட்டுகளும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகை ஆடைகள் உடலுக்குக் குளிர்ச்சி தருகின்றன. குழந்தைகள் ஆடையை வாயில் வைத்து கடித்தால் கூட எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. மனதிற்கும் இதமாக இருக்கும் என்கிறார்கள். தவிர, சரும நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கும் என்கிறார்கள். முக்கியமாக இந்த ஆடைகளால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இல்லை. தயாரிக்கும்போது வெளியாகும் கழிவுகள் மற்றும் தண்ணீரை விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள். 

வேட்டிகள்

துணி உற்பத்தி என்பது மிக பிரமாண்டமான வர்த்தகமாக மாறியிருக்கிறது. பாரம்பர்யமாக துணி உற்பத்தி செய்தவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் உலகம் இயற்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இது நல்ல சூழல். நம் மூதாதையர்கள் கற்று வைத்திருந்த, இயற்கைக்குப் பாதகமில்லாத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதுமாதிரியான ஆடைகளைப் பெருமளவு தயாரித்தால் மிகப்பெரிய வணிக வாய்ப்புகள் உருவாகும். என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் இது பற்றிய விழிப்பு உணர்வு அதிகரிக்க வேண்டும். அரசாங்கங்கள் இதை ஊக்குவிக்க வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close