வெளியிடப்பட்ட நேரம்: 09:56 (18/08/2017)

கடைசி தொடர்பு:09:56 (18/08/2017)

டெங்கு, பன்றிக்காய்ச்சல், ஜிகா, சிக்குன்குன்யா வரிசையில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்... உஷார்!

ற்கனவே,  மலேரியா, டெங்கு, ஜிகா, சிக்குன்குன்யா என காய்ச்சல்கள் வரிசை கட்டி அடித்துக் கொண்டிருக்கின்றன  இந்தக் காய்ச்சல்களால் உருவான பீதியே இன்னும் அடங்காத நிலையில், புதுவரவாக வந்துள்ளது  ஜப்பானிய மூளைக் காய்ச்சல். இந்தக் காய்ச்சலால் நாடு முழுவதும்  903 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 90-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜப்பானிய மூளைக் காய்ச்சல்

அதென்ன  ஜப்பானிய மூளைக் காய்ச்சல்..? அதன் அறிகுறிகள் என்னென்ன..? எப்படி பரவும்..? யாருக்கெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது?  

பொதுநல மருத்துவர்  அமுதகுமாரிடம் கேட்டோம். டாக்டர் அமுதகுமார்

"இந்தக் காய்ச்சல் `ஜாப்பனீஸ் என்கெஃ பலைடிஸ் வைரஸ்' (Japanese Encephalitis Virus) என்ற ஒரு வகை வைரஸால் ஏற்படுகிறது.  இது கியூலெக்ஸ் (Culex) என்னும் ஒரு வகை கொசுக்களால் பரவுகிறது.  ஜப்பானில் முதன்முறையாக  1871- ம் ஆண்டு இந்த வைரஸ் பரவியது. அதனாலேயே, இந்த வகைக் காய்ச்சலை 'ஜப்பானிய மூளைக் காய்ச்சல்'  என்கிறார்கள்.

உலக அளவில், இந்த வைரஸ் காய்ச்சலால் ஆண்டுக்கு சுமார்  68 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 30 சதவிகிதத்தினர் இறக்கின்றனர். குறிப்பாக, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியங்களில் உள்ள  இந்தியா, நேபாளம், சீனா, வங்காள தேசம், இலங்கை, வியட்நாம், பிலிப்பைன்ஸ், வடகொரியா, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 நாடுகளில், 30 கோடிக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 

எப்படிப் பரவுகிறது?

கிராமப்புறங்களில் உள்ள ஆறு, கண்மாய், கிணறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் இந்த வகைக் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.  இந்தக் கொசுக்களுக்கு மிகவும் பிடித்தது பன்றிகள் மற்றும் பறவைகளின் ரத்தம். அவற்றைக் கடிப்பதன் மூலம் கொசுக்களின் உடலில் உள்ள  வைரஸின் வீரியம் அதிகரிக்கிறது. பன்றிகளையோ, பறவைகளையோ கடிக்காமல் இந்தக் கொசுக்கள் நேரடியாக மனிதர்களைக் கடித்தால் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே இந்த வைரஸ் கிருமியை அழித்துவிடும்.  பறவைகள் மற்றும் பன்றிகளைக் கடித்துவிட்டு மனிதர்களைக் கடித்தால் பாதிப்பு அதிகமாகும்.   

ஏரி

நகரங்களைவிட கிராமங்களில்தான் இந்த வைரஸின் தாக்கம் அதிகம். பெரும்பாலும், 15 வயதுக்கு உட்பட்ட  குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது.  

அறிகுறிகள்

இந்த வைரஸானது, மனித உடலுக்குள் சென்ற  5 முதல் 15 நாள்களில்  பாதிப்பின் அறிகுறிகள் தென்படும். வழக்கமான வைரஸ் காய்ச்சல்களைப் போல, இந்த வகைக் காய்ச்சலும் வரும். தலைவலி, காய்ச்சல், வாந்தி, உடல் சோர்வு,  படபடப்பு, மூட்டுவலி, மன அழுத்தம் போன்ற அறிகுறிகள் தென்படும். இத்தகைய சூழலில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லையென்றால் மூளையில் வீக்கம், பக்கவாதம் போன்றவை ஏற்படுவதோடு  மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

சிகிச்சைகள்

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸை முற்றிலுமாக அழிக்க மருந்துகள் இல்லை. நோயாளிகள் முதல்கட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர். ரத்தத்தில் உள்ள அணுக்களின் அளவு மற்றும் மூளைத் திரவம் (Cerebrospinal fluid) ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோயின் தீவிரம் தீர்மானிக்கப்படும். காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருந்துகளும் வலிநிவாரணி மாத்திரைகளும் தரப்படும். 

கொசுக்கள்

தடுப்பு நடவடிக்கைகள்

இந்த வகைக் காய்ச்சலுக்கு உலக அளவில் 'இன் ஆக்டிவேட்டட் மவுஸ் பிரெய்ன் டிரைவ்டு வேக்ஸின்ஸ்'  (Inactivated mouse brain-derived vaccines), 'இன்ஆக்டிவேட்டேடு வெரோ செல் டிரைவ்டு வேக்ஸின்ஸ்' (Inactivated Vero cell-derived vaccines), 'லைவ் அட்டானுயேட்டட் வேக்ஸின்ஸ்' (Live attenuated vaccines), 'லைவ் ரீகாம்பினன்ட் வேக்ஸின்ஸ்' (live recombinant vaccines) என நான்கு வகைத் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் மூன்றாவது வகையான 'லைவ் அட்டேனேடு வேக்ஸின்ஸில்- எஸ் ஏ 14-14-2 (SA 14-14-2)' எனப்படும் தடுப்பு மருந்துதான்  அதிக வீரியம் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தடுப்பு மருத்து  சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

1957-ம் ஆண்டு தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில், முதன்முறையாக இந்தக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. அப்போது, உயிரிழப்புகள் அதிகரித்ததால், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு, பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

தடுப்பூசி

சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த வைரஸ் தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்ளலாம்.  குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் கொசுப் பெருக்கம் அதிகம் உள்ள நீர் நிலைகளுக்கு அருகில் போகாமல் இருப்பது நல்லது. உடலை முழுவதும் மூடும் விதத்தில் உள்ள ஆடைகளை அணிவது நல்லது. கொசுக்கள் உருவாகாதவாறு சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன் கொசு விரட்டிகளையும் பயன்படுத்தித் தற்காத்துக் கொள்ளலாம் " என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்