கீழாநெல்லி பேராசிரியருக்கு அப்துல்கலாம் விருது! | Dr. S. P. Thyagarajan Invented medicine for jaundice

வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (18/08/2017)

கடைசி தொடர்பு:15:32 (18/08/2017)

கீழாநெல்லி பேராசிரியருக்கு அப்துல்கலாம் விருது!

தமிழக அரசு வழங்கும் அப்துல் கலாம் விருது  இந்தாண்டு டாக்டர் எஸ்.பி.தியாகராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் ‘வைரோஹெப்’ என்ற மருந்தை கீழாநெல்லி தாவரத்தில் இருந்து கண்டுபிடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது

விருது பெற்ற டாக்டர் எஸ்.பி.தியாகராஜன், சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்தவர். தற்போது சென்னை போரூர் ஶ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக முதன்மைப் பேராசிரியராகவும் ஆய்வுத்துறைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

டாக்டர் தியாகராஜனிடம் பேசினோம். உற்சாகமாகப் பேசினார்.

“50 ஆண்டுகாலமாக மருத்துவக் கல்வித் துறையில் பணியாற்றி வருகிறேன். பி.எச்டி மைக்ரோபயாலஜி, எம்.டி மாற்று மருத்துவம், டி.எஸ்ஸி மைக்ரோபயாலஜி முடித்திருக்கிறேன். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், மருத்துவம் சார்ந்த நுண்ணுயிரியல் துறையின் உதவி பேராசிரியராக பணியைத் தொடங்கிய நான், அதன்பிறகு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள ஆரம்பித்தேன். அப்போது அங்கு குடல் மற்றும் வயிறு சார்ந்த சிறப்பு மருத்துவத் துறையின் தலைவராக இருந்த டாக்டர் மதனகோபால் எனக்கு பெரிதும் உதவினார். குறிப்பாக மஞ்சள் காமாலை நோயை இயற்கை மருத்துவத்தில் அறிவியல் பூர்வமாக குணப்படுத்துவது பற்றிய எனது ஆராய்ச்சிக்கு அவர் பல்வேறு உதவிகளைச் செய்தார். அந்த ஆராய்ச்சியின்போது நிறைய தகவல்கள் கிடைத்தன.

கீழா நெல்லி


பொதுவாக, மஞ்சள்காமாலையை உண்டாக்கும் வைரஸ் கிருமிகள், தண்ணீரால் பரவக்கூடிய கிருமிகள், எச்.ஐ.வி கிருமி பரவுவதைப் போன்றே பரவும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் கிருமிகள் தொடர் நோயை ஏற்படுத்தி கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்தக் கிருமிகள்  நீண்ட நாள்கள் உடலில் தங்கினால் கல்லீரலில் புற்று நோய் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆகவே ரத்தத்தில் அந்தக் கிருமிகள் இருக்கிறதா என்பதை அறிய ரத்த தானம் செய்வோரின் ரத்தத்தை பரிசோதித்தோம். மேலும், அப்போது ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளை அழிக்க கீழாநெல்லியை மருந்தாகப் பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது. ஆராய்ச்சியில் இறங்கினோம். வைரஸ் கிருமிகளை வளர்க்க முடியாது என்பதால் கிருமி பரவிய ரத்தத்தை, ஆய்வுப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டோம்.

கீழாநெல்லியின் சாறு (Extract) மஞ்சள்காமாலை நோய்க் கிருமியை அழிப்பதை இந்த ஆய்வில் கண்டறிந்தோம். இந்த ஆய்வு இந்திய மருத்துவ ஆய்வு இதழில் (IJMR)பிரசுரமானது. அதைப்படித்த, ஹெபடைடிஸ் வைரஸைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் பிளம்பெர்க் என்பவர் என்னுடன் தொடர்பு கொண்டார். அந்தத் தருணத்தில் நம்மிடம் ஆராய்ச்சியை விரிவுபடுத்தும் அளவுக்கு தொழில்நுட்பம் இல்லை. அதனால், டாக்டர் பிளம்பெர்க் துணையோடு அமெரிக்கா சென்று இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தோம். 1972 முதல் 1982-ம் ஆண்டு வரை இந்த ஆராய்ச்சி நடந்தது. கீழாநெல்லியை சுத்தப்படுத்தி அதிலுள்ள வீரியத்தை தனிமைப்படுத்தி மருந்தாக்கினோம்.

இதற்கிடையே சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரமணியில் உள்ள, அடிப்படை பட்ட மேற்படிப்பு நிலையத்தில் பதவி உயர்வு பெற்றேன். விருதுஅதில் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி நுண்ணுயிரியல் துறை உள்ளது. அதில், முழுநேர இணைப் பேராசிரியராக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். டாக்டர் பிளம்பெர்க் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் லொக்கர்னினி ஆகியோருடன் இணைந்து இந்த கீழாநெல்லி ஆய்வினை தொடர்ந்தோம். 
மனிதர்களைப் போலவே, வாத்துகளுக்கும் கல்லீரல் பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு. அப்படி பாதிப்புக்குள்ளான வாத்துக்களை கண்டறிந்து கீழாநெல்லி மருந்தைக் கொடுத்தோம். நல்ல குணம் தெரிந்தது. இது எங்கள் ஆராய்ச்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி. இதை உடனடியாக மனிதனுக்குக் கொடுத்தால் பக்க விளைவை ஏற்படுத்தலாம் என்பதால் எலிகளுக்குக் கொடுத்து சோதனை செய்தோம். எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை. எங்களது இந்த மருத்துவ ஆராய்ச்சி மக்களுக்குத் தெரிய வந்ததையடுத்து எங்களைத் தேடி வந்தனர்.

6 மாத காலம் ஹெபடைடிஸ் வைரஸ் இருந்தால் பின்னாட்களில் அது கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது மருத்துவரீதியான உண்மை. ஆகவே ரத்த தானம் செய்பவர்களில்  6 மாதம் நோய் பாதித்த 90 பேரின் ரத்தத்தை எடுத்துக்கொண்டு அதில் 45 பேருக்கு கீழாநெல்லி மருந்தைக் கொடுத்தோம். மீதமுள்ள 45 பேருக்கு வேறுவிதமான மருந்துகளைக் கொடுத்தோம். அப்போது கீழாநெல்லி மருந்து கொடுத்ததில் 60 சதவீதம் பேருக்கு கிருமி நீங்கியது தெரியவந்தது. மருத்துவத் தாவரத்தில் இருந்து நோய் குணப்படுத்தப்பட்டது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இது உலக நாடுகளுக்குத் தெரியவந்ததையடுத்து 25 நாடுகள் இந்த ஆராய்ச்சிக்கு உதவின. இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் காப்புரிமை பெற முடிவு செய்து 1986-ம் ஆண்டு காப்புரிமைக்காக விண்ணப்பித்தோம். இதைக் கேள்விப்பட்டு சில மருந்து நிறுவனங்கள் மருந்து தயாரிக்க முன்வந்தன. அதன்பேரில் அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். அந்த மருந்துக்கு ‘வைரோஹெப்’ (Virohep) என்று பெயரிட்டோம். மூலிகைகளின் வீரியத்தைத் தனிமைப்படுத்தி மருந்தாக்கியது இதுதான் முதல்முறை என்பதால் இதன்படி மற்ற மருந்துகளையும் தயாரிக்க இந்த ஆய்வு வழிவகுத்தது. எங்களது இந்த ஆராய்ச்சிக்கு விருதுகள் வந்து குவிந்தன” என்றார்.
மஞ்சள் காமாலைக்கு மருந்து கண்டுபிடித்த டாக்டர் தியாகராஜன், சென்னை போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இந்திய மருத்துவ ஆய்வுக்குழுவை உருவாக்கி ‘ஆயுஷ்’ அனுமதியுடன் மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார். சர்க்கரை நோயின் விளைவுகளைக்  குணப்படுத்த மருந்து பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இன்னும் ஓராண்டில் அந்த மருந்து விற்பனைக்கு வர இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்