350 ஆண்டுகளாக சென்னைதான் இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்! சுவாரஸ்யத் தரவுகள் #Chennai378 | India's medical capital is chennai 350 years old history! Interesting data

வெளியிடப்பட்ட நேரம்: 20:57 (19/08/2017)

கடைசி தொடர்பு:07:30 (20/08/2017)

350 ஆண்டுகளாக சென்னைதான் இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்! சுவாரஸ்யத் தரவுகள் #Chennai378

சென்னையை 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்' என்று பெருமையாகக் குறிப்பிடுகிறோம். இந்தப் பெருமை இன்றோ, நேற்றோ கிடைத்ததில்லை. 350 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 'இந்தியாவின் மருத்துவ தலைநகரம்' சென்னைதான். சென்னையில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டி, அதைச்சுற்றி தங்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்கிக் கொண்டனர். ஆங்கிலேயர்களின் கூட்டம் பெருகத்தொடங்கியதும் தேவைகளும் பெருகத்தொடங்கின. குறிப்பாக, சென்னையின் வெயில் அவர்களை பெரிதும் வதைத்தது. வியர்வை, கொப்புளங்கள், கட்டிகள் என பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள், தங்களுக்காக ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

மருத்துவத் தலைநகரம்

1664-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி கோட்டைக்குள்ளேயே ஒரு மருத்துவமனையை கட்டினர். இது தான் இந்தியாவில் தோன்றிய முதல் அலோபதி மருத்துவமனை. இதை நிர்வகித்து மேம்படுத்தியவர் சர் எட்வர்ட் விண்டர். 1690-ம் ஆண்டு இந்த மருத்துவமனை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. 1772-ம் ஆண்டு கோட்டையில் இருந்து மாறி, தற்போது இருக்கும் சென்ட்ரல் பகுதிக்கு வந்தது. அப்போது வரை அந்த மருத்துவமனை ராணுவ மருத்துவமனை என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. 1835-ம் ஆண்டுக்குப் பிறகு  மருத்துவக்கல்லூரியாகவும் மாறியது. 1850-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்  மருத்துவமனை என்ற பெயரைப் பெற்றது. அதுமட்டுமல்ல. இந்தியாவின் முதல் மருத்துவக்கல்லூரி என்ற பெயரையும் பெற்றது.

1875-ல் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்னொரு பெருமையும் கிடைத்தது. ‘மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப்’ என்ற இங்கிலாந்து பெண்மணி இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். மருத்துவத் துறையில் பெரும் வளர்ச்சியை எட்டியிருந்த இங்கிலாந்திலேயே பெண்கள் மருத்துவம் பயில முடியாத சூழலில் சென்னைதான் அவருக்கு டாக்டர் பட்டத்தை தந்தது. 'மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப்', தன்னை மருத்துவராக்கிய சென்னைக்கு பதில் உதவி செய்வதற்காக திருவல்லிக்கேணியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையை தொடங்கினார். இது பெண் மருத்துவரால் பெண்களுக்காக தொடங்கப்பட்ட சிறப்பான  மருத்துவமனை என்பது ஒரு பெருமையான விஷயம்.

1912-ம் ஆண்டு இங்கு படித்த டாக்டர் முத்துலட்சுமி தான், அடையார் புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கினார். உலக அளவில் அதிகமான பெண் மருத்துவர்களை உருவாக்கிய ஒரே மருத்துவ கல்லூரி என்ற பெயரையும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி பெற்றது. 1938-ம் ஆண்டு இந்த மருத்துவ கல்லூரியின் தலைமை பொறுப்பை டாக்டர் ஆற்காடு லட்சுமணசாமி ஏற்றார். இந்த மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற வெள்ளையர் அல்லாத முதல் இந்தியர் இவர் தான். இவர் எழுதிய மருத்துவப் புத்தகங்கள் இன்றும் லண்டன் பல்கலை கழகங்களில் நூலாக உள்ளன. இவரின் சிலை இன்றும் கல்லூரி வளாகத்தில் இருக்கிறது. 1897-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக ‘கம்பவுன்டர்’ என்ற மருத்துவ உதவியாளர் படிப்பை உருவாக்கியதும் இந்த மருத்துவக்கல்லூரிதான். 

முத்துலட்சுமி ரெட்டி

இவ்வளவு சிறப்பு மிக்க மருத்துவமனை, இன்று சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை என்ற பெயரில் சென்னையின் பெருமைமிகு அடையாளமாக இருக்கிறது. 350 ஆண்டுகளை கடந்து ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக வளர்ந்திருக்கும் இந்த மருத்துவமனை பல லட்சம் உயிர்களை காப்பாற்றி கரைசேர்க்கும் உயிர் மையமாக விளங்கி வருகிறது என்றால் மிகையல்ல.


டிரெண்டிங் @ விகடன்