வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (21/08/2017)

கடைசி தொடர்பு:10:51 (22/08/2017)

சூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்குமா? #SolarEclipse

ந்திய நேரப்படி இன்று இரவு  10.18 சூரிய கிரகணம் தொடங்குகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியாது. அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில மாகாணங்களில் சூரிய கிரகணத்தின் முழுத் தாக்கத்தையும்  உணரவும், பார்க்கவும் முடியும். ஆயினும் அந்த இயற்கை நிகழ்வின் தாக்கம் புவியெங்கும் இருக்கும் என்பதால், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. 

சூரிய கிரகணம்

கிரகணங்கள் பற்றி பல்வேறு கற்பிதங்கள் உண்டு. கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது;  வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விஞ்ஞான உலகம் கிரகணத்தை வேறுமாதிரிப் பார்க்கிறது. 

கிரகணங்களால் நம் உடல்நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது;  அந்த இயற்கை நிகழ்வை பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

கிரகணங்களைப் பற்றி, நம் நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறாக இருக்கின்றன. மருத்துவம் எதிர்மறையான இன்னொரு கருத்தில் நிற்கிறது. அதையெல்லாம் அலசும் முன்பு, சூரிய கிரகணம் என்றால் என்ன  என்பதைப் பார்த்து விடுவோம். 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால் பூமியின் பார்வையில் இருந்து சூரியன் மறையும். இதுவே 'சூரிய கிரகணம்'. 

இந்த ஆண்டில், இதற்கு முன்பு மூன்றுமுறை கிரகணம் ஏற்பட்டது. பிப்ரவரி 11 -ம் தேதி சந்திர கிரகணம்;  பிப்ரவரி 26-ம் தேதி சூரிய கிரகணம்; ஆகஸ்ட் 7-ம் தேதி சந்திரகிரகணம்.  இதில் ஆகஸ்ட் 7- ம் தேதி ஏற்பட்ட சந்திரகிரகணத்தை மட்டுமே இந்தியாவில் காண முடிந்தது. 

பிப்ரவரி 26-ம் தேதி ஏற்பட்ட சூரியகிரகணத்துக்கும், இன்று ஏற்படப் போகும் சூரியகிரகணத்துக்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. பிப்ரவரி 26-ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது சூரியனின் மையப்பகுதி மட்டுமே நிலவால் மறைக்கப்பட்டது. ஆனால், இன்று ஏற்பட இருக்கும் கிரகணத்தில், சூரியனை  நிலவு முழுவதுமாக மறைக்கிறது. 

இதுபோன்ற முழு சூரிய கிரகணம், 1955-ம் ஆண்டு ஏற்பட்டது. அதன்பின் இப்போதுதான் அப்படியான சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் உள்ள 14 மாகாணங்களில் இந்தக் கிரகணக் காட்சி தெரியும் என்றும், உலகின் 30 கோடி மக்கள் இதைக் காண முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதைக் காண முடியாது.  

ஒரே நேர்கோட்டில்

கிரகணத்தின்போது, சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது குறித்து, மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், எழுத்தாளருமான தா.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம். தா.வி.வெங்கடேஷ்வரன்

" கிரகணத்தன்று மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனில் இருந்து  புறஊதாக் கதிர்கள் வெளியேறிக் கொண்டுதான் இருக்கின்றன,. ஆனால் அவை, பெரும்பாலும் பூமிக்கு வருவதே இல்லை.  வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்திலேயே அது தடுக்கப்பட்டுவிடும்.  

கி.பி 430 -லேயே,  'கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு' என்று கண்டறிந்து சொல்லியுள்ளார் ஆரியப்பட்டர். அதனால், கிரகணம் குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. 

கிரகணம் நடைபெறும் நேரத்தில் சூரியனின் புறவளி மண்டலமாகிய 'கரோனா ' நம் கண்ணுக்குத் தெரியும். இது மயில் தோகையை விரிப்பதுபோல் அழகாக இருக்கும். பார்ப்பதற்கு இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  

சூரிய கிரகணத்தால்  பல நன்மைகளும் உண்டு. இந்தநேரத்தில் மட்டுமே சூரியனைச் சுற்றி ஏற்படும் சூரியகாந்த அலைகளைப் பார்க்க முடியும். இதை வைத்து விண்வெளியின் வானிலையைச் (Space weather) சரியாகக் கணிக்கமுடியும். இது பல விண்வெளி ஆய்வுகளுக்கு உதவிக்கரமாக இருக்கும். 

கிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியன் மட்டும் அல்ல, வெல்டிங் வெளிச்சம், குண்டு பல்பின் வெளிச்சம் போன்ற பிரகாசமான ஓளியை  எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது, நம் கண்களில் உள்ள  நிறமி பாதிக்கப்படும். 

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

இதுபற்றி, பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (Nimhans) ஒரு ஆய்வை மேற்கொண்டது. மனநலம் பாதித்தவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தனர். முதல் குழுவிடம், என்று அமாவாசை, பௌர்ணமி  என்பது சரியாகச் சொல்லப்பட்டது. இரண்டாவது குழுவிடம் தவறான நாள்கள் சொல்லப்பட்டன. மூன்றாவது குழுவினரிடம் அமாவாசை, பௌர்ணமி பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இறுதியாக மூன்று குழுவினரையும் ஆய்வுசெய்தனர். 

அதில் முதல் குழுவில் இருந்தவர்களுக்கு அமாவாசை, பௌர்ணமியன்று நடவடிக்கைகளில் வேறுபாடு இருந்தது. இரண்டாவது குழுவில் தவறாக சொல்லப்பட்ட நாளில் அவர்களின் நடவடிக்கைகளில் மாறுபாடு இருந்தது. மூன்றாவது குழுவினரிடம் பெரியளவில் எந்த மாற்றங்களும் இல்லை. இறுதியில், அந்த நாள்களுக்கும், இவர்களின் நடவடிக்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கண்டறியப்பட்டது. இது கிரகணத்துக்கும் பொருந்தும், காலம் காலமாக விதைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளின்  விளைவு இது..." என்கிறார் வெங்கடேஷ்வரன்.

இன்று ஏற்பட உள்ள சூரிய கிரகணத்தைப் பார்க்க, சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் சக்திவேல், "சூரிய கிரகணத்தை அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்புச் செய்கிறார்கள். அதை இணையத்தின் மூலம் சென்னையில் காண்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. வேளச்சேரி செக்போஸ்ட் அருகே, நேரு நகரில் உள்ள நேரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இன்று இரவு 10 மணி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாணவர்கள் உள்பட அனைவரும் இதைப் பார்க்க வரலாம்" என்றார்.

கிரகணம் ஆரம்பமாகும் நேரம் : இரவு 10.18 

நிலவு, சூரியனை முழுவதுமாக மறைக்கும் நேரம் : இரவு  11.56

நிலவு, முழுவதுமாக சூரியனில் இருந்து விலகும் நேரம் : காலை (22.8.17) 01.31.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்