Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாதவிடாய்க் கோளாறு நீக்கும், மலச்சிக்கல் போக்கும் மஞ்சணத்தி!

மஞ்சணத்தி என்ற பெயர்  கொஞ்சம் அந்நியமாகத் தெரியலாம். காடுகளிலோ மலைகளிலோ வளரக் கூடிய செடி  என்று கருதலாம். ஆனால், அது சர்வசாதாரணமாக நம் வீட்டுத் தோட்டங்களிலும் வேலி ஓரங்களிலும் செழித்து வளரும் ஒரு மரம்.  தரிசு நிலங்களிலும்கூட இந்த மஞ்சணத்தியைப் பார்க்கலாம். எதற்கும் பயன்படாது என்று நாம் சீண்டாமல் விட்டு வைத்திருக்கிற மஞ்சணத்தி, இயற்கையின் பெரும் கொடை என்று சொன்னால் மிகையாகாது.  

மஞ்சணத்தியின் மருத்துவக் குணங்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ஜீவா சேகர்.


மஞ்சணத்தி

"மஞ்சோனா, மஞ்சள் நீராட்டி, நுணா, நோனி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Morinda Tinctoria. சங்க காலத்தில் தலைவியும் தோழியும் குவித்து விளையாடிய 99 வகை மலர்களில் மஞ்சணத்திப் பூவும் ஒன்று. இலக்கியம் அப்பூவை, 'தணக்கம் பூ' என்று பாடுகிறது.

மஞ்சணத்தி  மரம் மிகவும் லேசானது; ஆனால் நார்ப்பகுதி மிகவும் வலிமையானது. அந்தக் காலத்தில் நீர் இறைக்கும் கமலையில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்பட்டிருப்பது  இந்த மரத்தால் செய்யப்பட்டதே. இம்மரத்தில் செய்யப்படும் கட்டில்களில் படுத்தால் நிம்மதியான உறக்கம் வரும் என்று இயற்கை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள்கள் இந்த மரத்தில்தான் செதுக்கப்படும்.

நோனி


மாவிலையைப் போன்ற இலைகளைக் கொண்டிருந்தாலும் எதிரடுக்கு வடிவில் இலைகள் காணப்படும். வெள்ளை வெளேர் என்று பூக்கள் பூத்திருக்கும். காய்கள் முடிச்சு போட்ட மாதிரி இருக்கும். பச்சை நிறக் காய்கள் பழமானதும் கறுப்பு நிறமாகி விடும். சுமார் 15 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த மரத்தின் உள்புறம் மஞ்சள் நிறமாக இருக்கும். அதனால்தான் இதை 'மஞ்சணத்தி' என்று சொல்கிறார்கள். இதில் செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புகள் இயற்கையாகவே இருக்கின்றன. இந்த மரத்தின் பழத்தைச் சாப்பிடலாம். ஆனால்  நாக்கு கறுத்து விடும். 
மஞ்சணத்தி, வெப்பம் தணிக்கும்; வீக்கம் கரைக்கும்; மாந்தம் போக்கும்; கல்லீரல் - மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கும்; பசியைத் தூண்டும்; தோல் நோய் போக்கும்.இன்றைக்கும் கிராமங்களில் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், பேதியை நிறுத்த மஞ்சணத்தி இலையில் கஷாயம் செய்து கொடுக்கிறார்கள். மஞ்சணத்தி இலையின் நடு நரம்புகளை எடுத்துவிட்டு அதனுடன் துளசி, கரிசலாங்கண்ணி, மிளகு, சுக்கு சேர்த்துக் கஷாயம் செய்து வடிகட்டி குழந்தைகளின் வயதுக்கேற்றபடி கால் சங்கோ(பாலாடை), அரை சங்கோ கொடுத்து வந்தால் மாந்தம், பேதி குணமாகும். இதேபோல் மஞ்சணத்தி இலையை மையாக அரைத்துப் புண், ரணம், சிரங்குகளில் வைத்துக் கட்டினால் குணமாகும். இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இடுப்புவலி உள்ள இடங்களில் பூசினால் பலன் கிடைக்கும்.  காயை அரைத்துச் சாறு எடுத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டை நோய்கள் நீங்கும்.

மஞ்சணத்தி


ஒரு பங்கு மஞ்சணத்தி இலைச்சாற்றுடன் நொச்சி, உத்தாமணி, பொடுதலை ஆகிய மூன்று இலைகளின் சாறுகளையும் தலா ஒரு பங்கு சேர்த்து மூன்று முதல் நான்குவேளை கொடுத்து வந்தால் எல்லாவிதமான மாந்தமும் நீங்கும். குளிர் காய்ச்சலுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது இது. மஞ்சணத்தியின் பட்டை சிறிதளவு எடுத்துக் கொண்டு அரை ஸ்பூன் சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். அதை வடிகட்டி சுமார் 50 மி.லி அளவு காலை மற்றும் இரவு உணவுக்கு முன்  அருந்தி வந்தால் காய்ச்சலைத் தடுப்பதுடன் வயிற்றுக் கோளாறுகளைக் குணப்படுத்தும். 
மஞ்சணத்தியின் காயும், இலையும் மாதவிடாய்க் கோளாறுகளைக் குணப்படுத்தக்கூடியவை. மஞ்சணத்தி இலையை பசையாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, அதே அளவு அதன் காயையும் அரைத்துச் சேர்த்து சிறிது மிளகுத்தூள், கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். அதில் 50 முதல் 100 மி.லி வரை எடுத்து 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கிவிடும். இதைச் சர்க்கரை நோயாளிகள் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுக்குள் வரும்.


காயுடன் சம அளவு கல் உப்பு சேர்த்து அரைத்து அடையாகத் தட்டி காய வைத்து அரைத்தால் பல்பொடி தயார். இதைக் கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும். அத்துடன் பல் வலி, பல் அரணை, வீக்கம், ரத்தக்கசிவு போன்றவை சரியாகும். இதன் வேரைக் கஷாயம் செய்து குடித்து வந்தால் சுகபேதியாகும். இது எந்தவிதச் சிரமத்தையும் ஏற்படுத்தாமல் மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்யும்.
ஒரு கிலோ மஞ்சணத்திப் பட்டையை இடித்து அதைவிட நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி 8-ல் ஒரு பங்காக வற்றும் அளவு காய்ச்ச வேண்டும். அதனுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து தைலப் பதமாகும் வரை காய்ச்ச வேண்டும். இந்தத் தைலத்தை வாரம் ஒருநாள் தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இது கழலைக் கட்டிகள், முறைக் காய்ச்சல், படை நோய்கள் போன்றவற்றைக் குணமாகும்". 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement