வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (22/08/2017)

கடைசி தொடர்பு:08:42 (22/08/2017)

நிக்காலோ மானுச்சி, மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப், முத்துலட்சுமி... சென்னையின் மாண்பை உயர்த்திய மருத்துவர்கள்! #Chennai378

ன்னலம் கருதாது மக்கள் சேவையையே கடமையாகக் கருதி பணிபுரிந்த பல மகத்தான மருத்துவர்கள் சென்னையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் செய்த மகத்தான பணிகள், சென்னையை உயர்த்தி வைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையல்லை.  டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் ரங்காச்சாரி, டாக்டர் குருசாமி, டாக்டர் லட்சுமணர், டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி, டாக்டர் நிக்காலோ மானுச்சி (Niccolao manucci), டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், டாக்டர் என். ரங்கபாஷ்யம், டாக்டர் ஏ.எஸ்.தம்பையா, டாக்டர் மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப் (Mary Ann Dacomb Scharlieb) என சென்னையில் சேவையாற்றிய மருத்துவர்களின் பட்டியல் நீள்கிறது. 

நிக்காலோ மானுச்சி

மருத்துவ தொழில்நுட்பங்கள்  பெரிய அளவில் வளராத காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு இவர்கள் செய்த சேவை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. அதன் காணமாகவே, இன்றும் சிலைகளாகவும், தெருக்களின் பெயராகவும் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த மருத்துவர்கள். இந்த தியாக மருத்துவர்களால் உருவான பல மருத்துவமனைகள் இன்றைக்கும் தங்கள் அடையாளங்களை இழக்காமல் செயல்பட்டு வருகின்றன. 

சென்னையின் மருத்துவ வளர்ச்சியை தொடங்கி வைத்தவர்களின் பட்டியலில் மிகவும் முன் நிற்பவர் டாக்டர் முத்துலட்சுமி. நாட்டின் முதல் பெண் மருத்துவர், மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினர், மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையின் முதல் பெண் துணை சபாநாயகர், சென்னை மாநகராட்சியின் முதல் கவுன்சிலர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர். ஆதரவற்ற பெண்களுக்கான அவ்வை இல்லத்தை நிறுவியவர் என இவரது பங்களிப்பும் பெருமைகளும் நீண்டுகொண்டே செல்கின்றன. பெண்கள் படிப்பதே தவறு என்றிருந்த காலகட்டத்தில் இவர் மருத்துவம் பயின்று மருத்துவமனையையும் நிறுவிய சாதனை மகத்தானது. நாட்டிலேயே புகழ்பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மூலம் ஆண்டுதோறும் பல ஆயிரம் மக்கள் காப்பாற்றப்படுகிறார்கள். 535 பேர் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறும் வகையில் சேவையாற்றி வரும் இந்த மருத்துவமனை இன்றும் டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் பெருமையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. 

டாக்டர் முத்துலட்சுமி

இத்தாலியில் பிறந்து, அவுரங்கசீப் காலத்தில் அவரின் படை வீரராக வாழ்ந்து, சென்னைக்கு வந்து குடியேறி மிகச்சிறந்த மருத்துவராக விளங்கியவர் தான் நிக்காலோ மானுச்சி (Niccolao manucci). 1670-ம் ஆண்டு முதல் 1678-ம் ஆண்டு வரை லாகூரில் மருத்துவராக பணியாற்றினார். அலோபதி முதல் யுனானி மருத்துவம் வரை பயின்று சேவை புரிந்தார். தனது திருமணத்துக்குப் பிறகு சென்னை பிராட்வேயில் குடியேறிய இவர், பின்னர் பரங்கிமலையில் வாழ்ந்தார். காய்ச்சலுக்கு இவர் அளித்த வித்தியாசமான மருந்து அப்போது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாதரச கலவைகொண்ட ஒரு கல்லை உரசி அந்த மருந்தை மானுச்சி பயன்படுத்தினார். இதனால் அந்தக்கல் 'மானுச்சி கல்' என்றே அழைக்கப்பட்டது. இவர் அப்போது எழுதிய மருத்துவக் குறிப்புகள் பல காலம் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கும்பகோணத்தில் 1882-ம் ஆண்டு பிறந்தவர் ரங்காச்சாரி. இவரது தந்தை கிருஷ்ணமாச்சாரி நேப்பியர் பாலம் மற்றும் சென்ட்ரல் அரசு பொதுமருத்துவமனை போன்ற கட்டடங்களைக் கட்டியவர்.  1904-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை நிறைவு செய்த டாக்டர் ரங்காச்சாரி 1917-ம் ஆண்டு எழும்பூரில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் நிர்வாகத்தின் செயல்பாடுகள் பிடிக்காததால் 1922-ம் ஆண்டு அரசுப்பணியை விட்டுவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில்  மருத்துவமனையை உருவாக்கி சேவை செய்யத் தொடங்கினார்.  மருத்துவ சிகிச்சை வாய்க்காத எளிய மக்களைத் தேடிச்சென்று சிகிச்சையளித்தார். இவரது மறைவுக்கு பிறகு 1939-ம் ஆண்டு சென்னை அரசு பொதுமருத்துவமனை வாசலில் இவருக்கு ஒரு சிலை அமைக்கப்பட்டது. 

மகத்தான மருத்துவர்கள்

1938-ம் ஆண்டு சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் டாக்டர் சர் ஆற்காடு லட்சுமணசாமி. இவரின் தலைமைக்குப் பிறகுதான் சென்னை அரசு பொது மருத்துவமனை பெரும் வளர்ச்சியை எட்டியது. இவர் எழுதிய பல புத்தகங்கள் இன்றும் லண்டன் பல்கலைக்கழகத்தில் பாடங்களாக உள்ளன. 

'மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப்' (Mary Ann Dacomb Scharlieb) என்ற  இங்கிலாந்து பெண் மருத்துவம் பயில ஆசைப்பட்டார். ஆனால்  அந்த காலத்தில் அனைத்து நாடுகளிலும் ஆண்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இங்கிலாந்திலும் அதுதான் நிலை. இதனால் அவர்  இந்தியாவுக்கு வந்து சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். தன்னை மருத்துவராக்கிய சென்னைக்கு கைமாறு செய்ய எண்ணிய இவர், ராணி விக்டோரியாவிடம் அனுமதி பெற்று பெண்களுக்கான பிரத்யேக மருத்துவமனை ஒன்றை எழுப்பினார். உலகின் பெண் மருத்துவரால் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனை என்று சிறப்புப் பெற்ற அந்த மருத்துவமனைதான்  தற்போது கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை (கோசா மருத்துவமனை) என்று அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனை ஆரம்பத்தில்  நுங்கம்பாக்கத்தில்தான் இருந்தது. இட வசதி வேண்டி 1890-ம் ஆண்டு  பிரிட்டிஷ் அரசு இந்த மருத்துவமனைக்காக சேப்பாக்கத்தில் ஒரு இடத்தை வழங்கி, ரூ10,000 நன்கொடையும் கொடுத்தது. 

டாக்டர் குருசாமி, சென்னை கண்ட அற்புதமான கண் மருத்துவர். இவரின் மனிதநேயமிக்க மருத்துவ சேவையால்தான் இன்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வாயிலில் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் டாக்டர் குருசாமி சாலை என்ற பெயரும் இவரது சேவைக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்