யோக மருத்துவம், நீர் மருத்துவம், மண் மருத்துவம்... சென்னையில் பாரம்பர்ய சிகிச்சைகளை வழங்கும் அரசு மருத்துவமனைகள்! #Chennai378

நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்ட சென்னையில் மருத்துவ வசதிகளுக்குக் குறைவில்லை. அதிலும் நமது இந்திய பாரம்பர்ய மருத்துவம் சார்ந்த மருத்துவமனைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை நமது பாரம்பர்ய மருத்துவமுறைகளை மக்களுக்கு மிகச்சிறப்பாக வழங்கி வருகிறது. அம்மருத்துவமனையை ஒரு சுற்று சுற்றி வந்தோம். 

சென்னை மருத்துவமனை

ஓர் இடத்தில் கறிவேப்பிலை ஜூஸ், லெமன் ஜூஸ், பேரீச்சை ஜூஸ், பீட்ரூட் சாலட், வெஜ் சாலட்...  என நீண்ட நெடிய மெனு பட்டியலைப் பார்த்தோம். அதைப் பார்த்ததும் ஏதோ இயற்கை உணவகத்துக்குள் நுழைந்தது போன்ற உணர்வு எழுந்தது. ஆனால், அது நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுப் பட்டியல். அதுமட்டுமல்ல... மண்பானைக் குடிநீர், இயற்கை உணவு, மண் குளியல், நீராவிக் குளியல், யோகா சிகிச்சை என எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. 

உணவு சிகிச்சை

யோக சிகிச்சை, உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, நிற சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்கு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை என உடல் நலன் காக்கும் எளிமையான புத்துணர்வூட்டும் சிகிச்சைகள் அனைத்தும் இங்கு இலவசமாக அளிக்கப்படுகின்றன. சென்னையில் ஒருபக்கம் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையில் வயது வித்தியாசம் இல்லாமல் ஆண்களும் பெண்களும் யோகா செய்துகொண்டிருக்கிறார்கள். வந்த நோயைக் குணப்படுத்தவும், நோய்கள் வராமல் தடுக்கவும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். மேலும் நோய்களுக்கே ஏற்ப மூச்சுப்பயிற்சி, எனிமா சிகிச்சை என சிகிச்சைகள் வேறுபடுகின்றன. 

மசாஜ் சிகிச்சை

அரும்பாக்கத்தில் உள்ளது சித்த மருத்துவமனை என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  சித்தா மட்டுமின்றி,  ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் இங்கு அளிக்கப்படுகின்றன. மத்திய அரசின் ஆயுஷ் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனை. இதுபோன்ற ஒருங்கிணைந்த இந்திய பாரம்பர்ய  மருத்துவமனை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. அதேபோல் இங்குள்ள மருத்துவ வசதிகளைப் போல் வேறு எங்கும் இல்லை. நாள்பட்ட நோய்கள், தோல் நோய்கள், சைனஸ், பக்கவாதம், சர்க்கரை வியாதிகள் என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். தங்கி சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது. 

சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் செயல்பட்டும் வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் செயல்படும்  அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனையானது சித்த மருத்துவத்துக்கான மத்திய அரசு நிறுவனமாகும். தேசிய அளவில் சித்த மருத்துவத்துக்கென உள்ள மிகப் பெரிய மருத்துவமனை இது. இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஏழு கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கே உள்ளது. சித்த மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புக்கென 6 சிறப்புத் துறைகள் செயல்படுகின்றன. மேலும், எண்ணெய்க் குளியல், வர்மம், ஒத்தடம், புகை போன்ற புற மருத்துவத்துக்கான சிறப்பு மருத்துவப் படிப்புகளும் உள்ளன.

மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், குழந்தையின்மைக்கான சிறப்பு சிகிச்சைகள், கணை, மாந்தம், நவீன மருத்துவத்தால் கைவிடப்பட்ட சொரியாசிஸ் நோய், வெண்புள்ளிகள் போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, வாதம், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறுகள், தோல் நோய், வயிறு குடல் சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. பல், கண் நோய்க்கான மருத்துவமும் முதியோர் மருத்துவப் பிரிவும் செயல்பட்டு வருகிறது. மூளை வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் மூல நோயாளிகளுக்கும் இங்கே சிறப்புச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. தினமும் 2500 முதல் 3000 பேர் வரை சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னை, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கே நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கென சிறப்பு உணவுகள் மற்றும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகின்றன. தற்போது உள்நோயாளிகளுக்காக 300 படுக்கைகள்  உள்ளன.

சித்த மருத்துவமனை

பக்க வாதம், முடக்கு வாதம் உள்ளிட்ட 80 வகையான வாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மசாஜ், வர்மம், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. எச்.ஐ.வி நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடி போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

சென்னை திருவான்மியூரில் இம்ப்காப்ஸ் (Impcops - Indian Medical Practitioners Co-operative Pharmacy and Stores) என்ற கூட்டுறவு மருந்தகம் உள்ளது. கேப்டன் சீனிவாசமூர்த்தி என்பவர்  பட்டம் பெற்ற மற்றும் பாரம்பர்ய மருத்துவர்களை இணைத்து ஒரு கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கினார். 1944-ம் ஆண்டு அவர் தொடங்கிய அந்த நிறுவனம்தான் இம்ப்காப்ஸ். பரம்பரை மருத்துவர்கள் சிலரால் பாதுகாத்து வைக்கப்பட்ட மருந்துகளை கண்டறிந்து அதை நோய் பாதித்தவர்களுக்குக் கொடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதே இந்த கூட்டுறவு பண்டகசாலை. தென்னிந்தியா முழுவதும் இதன் கிளைகள் உள்ளன. 

`இம்ப்காப்ஸ்' அமைந்திருக்கும் வளாகத்திலேயே சில மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன. அங்கே கோசாலைகளும் உருவாக்கப்பட்டு, அவற்றில் கிடைக்கும் பால், நெய் உள்ளிட்டவற்றை மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இம்ப்காப்ஸ் வளாகத்திலேயே மருத்துவமனையும் செயல்படுகிறது.

இதேபோல் தமிழக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் நிலவேம்புக் கஷாயம், தமிழக அரசு நிறுவனமான டாம்ப்கால் (Tampcol) நிறுவனம்தான் தயாரித்து வழங்குகிறது. அந்த நிறுவனம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருப்போரூரில் உள்ளது. டாம்ப்காலின் கூந்தல் தைலம் சிறப்பு வாய்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!