குழந்தைகளின் ஆரோக்கிய குளியலுக்கு இந்தப் பொடி அவசியம்! செய்முறை விளக்கம் | ⁠⁠⁠This powder is useful for children's healthy bath

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (03/01/2017)

கடைசி தொடர்பு:17:47 (03/01/2017)

குழந்தைகளின் ஆரோக்கிய குளியலுக்கு இந்தப் பொடி அவசியம்! செய்முறை விளக்கம்

குளியலுக்கு

காலம் காலமாக, பிறந்த குழந்தைகளைக் குளிப்பாட்ட நம் பாரம்பர்ய பொருட்களால் தயாரித்த குளியல் பொடியையே பயன்படுத்தி வந்தார்கள் நம் முன்தலைமுறைப் பெண்கள். இன்றைய மம்மீஸ்களுக்கு அந்தப் பொடியில் ஆர்வம் இருந்தாலும், 'ஆனா அதை எப்படி தயாரிக்கிறது?' என்ற கேள்வியும் இருக்கிறது. அதைப் பற்றி விளக்குகிறார், இல்லத்தரசி மற்றும் இயற்கை ஆர்வலரான அல்லி. குழந்தையின் குளியலுக்கு அவசியமான ஒன்றை கவனமாக படியுங்கள்.

''இன்றைய இளம் தாய்மார்கள் சிலர், 'குழந்தைக்கு குளியல் பொடி அலர்ஜி ஆயிடாதே' என்று கேட்கும்போது வருத்தமாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்கள் நாட்டின் சூழலுக்கு ஏற்ப தயாரிக்கும் குளியல் சோப்புகளை, அந்த தட்பவெப்பத்தில் இருந்து மாறுபட்ட நம் நாட்டில் வியாபாரத் தந்திரத்துடன் விற்கிறார்கள். சொல்லப்போனால், அவற்றை வாங்கி குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்தான், 'இது நம் குழந்தையின் சருமத்துக்கு நல்லதா?' என்ற கேள்வி வரவேண்டும். நம் நாட்டில் வாழையடி வாழையாக நம் பூட்டிகளும் பாட்டிகளும் பயன்படுத்தி வந்த குளியல்பொடி குறித்து, எந்த சந்தேகமும் தேவையில்லை.

நான் என் பாட்டியிடம் கற்றுக்கொண்ட குளியல் பொடி தயாரிப்பு மற்றும் அதன் அனுபவ பலன்களை, என் மகள், மகளின் மகள் என அனைவருக்கும் கற்றுத் தந்திருக்கிறேன். நீங்களும் கீழே நான் குறிப்பிட்டுள்ள பொருட்களை நாட்டு மருந்துக்கடைகளில் கேட்டு வாங்கி, மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். குழந்தையின் சருமத்துக்கு 100% இயற்கையான பாதுகாப்பு கவசம் இது.

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
ரோஜா இதழ் -  25 கிராம்
சந்தனக்கட்டை - 50 கிராம்
செஞ்சந்தனம் - 50 கிராம்
பாசிப்பயறு - 200 கிராம்
ஆவாரம் பூ இதழ், எலுமிச்சை இலைக்கொழுந்து - தலா 25 கிராம்
வேப்பிலைக் கொழுந்து - 25 கிராம்

மேலே சொன்ன எல்லா பொருட்களையும் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும். அதை மெஷினில் கொடுத்து பொடியாக அரைத்து வாங்கவும். அரைத்த பொடியை வெள்ளை பருத்தி துணியில் சலித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும்.

தினமும் குழந்தையைக் குளிப்பாட்டும்போது, இந்தப் பொடியில் சிறிது எடுத்து, தண்ணீர் சேர்த்துக் குழைத்துக் கலக்கவும். குழந்தையின் கண், காது தவிர மற்ற இடங்களில் குளியல் பொடியை நன்கு தடவி குளிப்பாட்டவும். ஆண் குழந்தைகளுக்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம். அவர்களுக்கான பொடி தயாரிப்பில், கஸ்தூரி மஞ்சளின் அளவை 25 கிராமாக குறைத்துக்கொள்ளலாம்.

இந்தப் பாரம்பர்ய குளியல் பொடியை, மூன்று வயதுவரை குழந்தைகளுக்குப் பயன்படுத்தி வர, சரும தொந்தரவுகள் அண்டாது. மேனி பளபளக்கும். மூன்று வயதுக்கு மேலான பெண் குழந்தைகள், இளம் பெண்கள், இல்லத்தரசிகள் என இந்தப் பொடியை எந்த வயதுப் பெண்களும் தொடர்ந்து பயன்படுத்தி வர, சருமம் அழகுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.''

குழந்தைகளின் உணவைக் கவனித்துகொடுப்பதைப் போலவே குளியலும் அக்கறைக் காட்டுவோம்.

- யாழ் ஸ்ரீதேவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை