Published:Updated:

``மாங்காடு பெண்ணுக்கு, ரத்தம் செலுத்தியதால் ஹெச்.ஐ.வி. பாதிப்பா?" - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் விளக்கம்

ஜெ.நிவேதா

கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்தியதால் ஹெச்.ஐ.வி கிருமி தொற்றிக்கொண்ட சம்பவம், கடந்த சில நாட்களாக, தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

``மாங்காடு பெண்ணுக்கு, ரத்தம் செலுத்தியதால் ஹெச்.ஐ.வி. பாதிப்பா?" - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் விளக்கம்
``மாங்காடு பெண்ணுக்கு, ரத்தம் செலுத்தியதால் ஹெச்.ஐ.வி. பாதிப்பா?" - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் விளக்கம்

சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்தியதால் ஹெச்.ஐ.வி. கிருமி தொற்றிக்கொண்ட சம்பவம், கடந்த சில நாள்களாக, தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மனைவிக்குக் கர்ப்பகாலத்தின்போது, ஹெச்.ஐ.வி கிருமி உள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் பேசினோம்.  ``எங்களுக்கு இரண்டு குழந்தைங்க. போன ஜனவரி மாசம் என் மனைவி ரெண்டாவது தடவையா கருவுற்று  இருந்தா. உடனே மாங்காடு அரசாங்க ஆஸ்பத்திரியில ரெகுலர் செக்அப்புக்குப் போனோம். அஞ்சாவது மாசம் போகும்போது, அவளுக்கு ரத்தசோகை இருக்கிறதா சொன்னதோட, உடனடியா ரத்தம் ஏத்தணும்னு அங்க இருந்த டாக்டர்கள் சொன்னாங்க. அதோட அந்த டாக்டர்களே எங்களை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சாங்க. கீழ்ப்பாக்கத்துல பத்து நாள்கள் ட்ரீட்மென்ட் எடுத்தோம். அப்போ ரத்தம் ஏத்துனாங்க. 

அதுக்குப் பிறகு, எட்டாவது மாசம் செக்அப்புக்காக போகும்போது பிளட் டெஸ்ட் பண்ணச் சொன்னாங்க. அப்போ என் மனைவிக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறதா சொன்னாங்க. உடனே எனக்கு டெஸ்ட் பண்ணி பார்த்தாங்க, ஆனா எனக்கு ஹெச்.ஐ.வி இல்லை. அதுவரைக்கும் நாங்க வெளியில எந்த இடத்துலயும் ரத்தம் தொடர்பா எந்த சிகிச்சையும் எடுக்கலை. சொல்லப்போனா மாங்காடு, கீழ்ப்பாக்கம் அரசாங்க ஆஸ்பத்திரிகளைத் தவிர வேறு எங்கேயும் நாங்க சிகிச்சை எடுக்கலை. அதுக்கான ஆதாரம் எங்ககிட்ட இருக்கு. குழந்தைக்கு இப்போ வரைக்கும் பாதிப்பு இருக்கிறதை உறுதி செய்யலை. எதுவா இருந்தாலும் ஒன்றரை வருஷத்துக்குப்பிறகுதான் சொல்ல முடியும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க, அதனால நாங்களும் அமைதியா இருந்துட்டோம்" என்றார். 

இந்த  குற்றச்சாட்டு குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணியிடம் பேசினோம். 

``மாங்காட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு எங்கள் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியது உண்மைதான். இரண்டு யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த நேரம் அவர்கள், சில பழைய ரிப்போர்ட்டுகளை கையோடு எடுத்து வந்திருந்தனர். அதில், ஹெச்.ஐ.வி கிருமியைக் கண்டறியும் பரிசோதனை முடிவும் இருந்தது. அந்த ரிப்போர்ட்டில் 'ஹெச்.ஐ.வி.' நெகட்டிவ் என்று இருந்தது. உடனே எங்கள் தரப்பில், அந்த முடிவை அடிப்படையாகக் கொண்டு, மேற்கொண்டு அந்தப்பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனை எதுவும் செய்யாமல், தேவையான சிகிச்சை அளித்து  பெண்ணை டிஸ்சார்ஜ் செய்துவிட்டோம். 

இதையடுத்து, எட்டாவது மாதம் அவர்கள் மீண்டும் செக்அப்புக்கு வந்துள்ளனர். அப்போது, பழைய ரிப்போர்ட் எதுவும் அவர்களிடம் இல்லை. எனவே, ஹெச்.ஐ.வி கண்டறியும் பரிசோதனை எங்கள் தரப்பில் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதற்கான சிகிச்சைகளை  தொடங்கினோம். மேலும், அந்தப் பெண்ணுக்கு அடுத்தகட்ட சிகிச்சைகள் அனைத்தும் பாதுகாப்பாக செய்யப்பட்டன. தகுந்த மருந்து, மாத்திரைகளை வழங்கி, பாதுகாப்பான முறையில் பிரசவமும் பார்க்கப்பட்டது. இப்போது குழந்தை நலமாக உள்ளதைப் பார்த்தாலே தெரியும். 

சம்பந்தப்பட்ட பெண், எங்கள் மருத்துவமனையில் செலுத்தப்பட்ட அந்த இரண்டு யூனிட் ரத்தம் மூலமாகத்தான் பாதிப்பு வந்துள்ளதாகப் புகார் கூறுகிறார். நிச்சயமாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே சுகாதாரத்துறைச் செயலாளரிடம் அவர்கள் சார்பில் புகார் அளித்ததையடுத்து, செய்யப்பட்ட விசாரணையில் 'அந்த இரண்டு யூனிட் ரத்தத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை' என்பது அப்போதே உறுதிசெய்யப்பட்டது. இதில் எங்கள் தரப்பு உறுதியாக இருக்கிறது.

'அந்தப் பெண் முதலில் வந்தபோது (நான்காவது மாதத்தில்) ஏன் ரத்தப்பரிசோதனையோ, ஹெச்.ஐ.வி.கான பரிசோதனையோ செய்யவில்லை' என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. அவர்கள் ஏற்கெனவே கொண்டுவந்திருந்த லேப் ரிசல்ட்டை நம்பி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் பரிசோதனை செய்யாமல் இருந்துவிட்டோம். பொதுவாகவே ஒருவர் சமீபத்தில் வேறு எந்த பரிசோதனைக் கூடத்திலும் பரிசோதனை செய்திருந்தால், மீண்டுமொருமுறை பரிசோதனை செய்யச் சொல்லி பரிந்துரைக்க மாட்டோம். மிகச் சமீபத்திய பரிசோதனை என்றால், பெரும்பாலான நேரத்தில் மீண்டும் பரிந்துரைப்பதில்லை. அப்படித்தான் நான்காவது மாதம் அவர்களுக்கு ஹெச்.ஐ.வி டெஸ்ட் எடுக்காமல் விடப்பட்டது. 

எட்டாவது மாதம் அவர்கள் வந்தபோது, பழைய ரிப்போர்ட் எதையும் அவர்கள் முழுமையாகக் கொண்டு வரவில்லை. எனவே, அவர்களிடம் ரிப்போர்ட் எதுவும் சரியாக இல்லை எனக்கூறி, மீண்டுமொருமுறை அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இப்போது அந்தப் பெண் இங்குதான் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருடைய பழைய ரிப்போர்ட்டுகளை ஆராய்ந்து வருகிறோம்.

ஏற்கெனவே அவர் காண்பித்ததாகச் சொல்லப்படும் (நான்காவது மாதத்தில் கொண்டுவரப்பட்டது) பரிசோதனை முடிவு, அரசு சார்பான பரிசோதனைக் கூடங்களிலோ, முறையாக சான்றிதழ் பெற்ற லேப்களிலோ செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. எங்களிடம் அவர்கள் சில ரிப்போர்ட்டுகளைக் காண்பிக்கும்போது, அந்தப் பரிசோதனை நிலையம் குறித்து ஆய்வு செய்யவில்லை என்பது மட்டுமே உண்மை. நோயாளிகள் கொண்டுவரும் பரிசோதனை முடிவுகளின் பின்னணி மற்றும் அந்த நிலையம் குறித்த பின்னணியை ஆராய்வது சாத்தியமில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் மேற்கொண்ட சிகிச்சைகளைத் தொடங்கினோம். எங்கள் தரப்பில் செய்யப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும், முறையாகச் செய்யப்பட்டவை என்று உறுதியாகச் சொல்வேன். குறிப்பாக, ரத்தம் செலுத்தியதில் எந்தத் தவறும் நிகழவில்லை" என்றார்.