Published:Updated:

``தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே...'' - இன்று தந்தையர் தினம்!

கிராபியென் ப்ளாக்

`தன் குழந்தைக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமைதான். ஆனால், அதற்காகத் தன்னுடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வது தீர்வாகாது.

``தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே...'' - இன்று தந்தையர் தினம்!
``தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே...'' - இன்று தந்தையர் தினம்!

வாழ்க்கையில் மதிப்புமிக்க அனுபவங்கள் பல உண்டு. அதில் ஒன்று நல்ல தகப்பனாக இருப்பது. பெரிய பொறுப்புகளையும்  தியாகங்களையும் சுமக்கும் தந்தையர் படும் வலிகள் வெளியே தெரிவதில்லை. குடும்பத்தின் நலனுக்காகத் தன் காயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொள்ளும் உன்னத தந்தையர்கள் நிறைய பேர் உண்டு. அன்புள்ளம் கொண்ட அந்தத் தந்தையரை உயர்த்திச் சொல்லும்விதமாக மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், `தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...’ என்றொரு பாடலை எழுதியிருந்தார். `கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்துக்காக அவர் எழுதிய அந்தப் பாடல் வரிகளை மாலைப்பொழுதில் ரம்மியமான சூழலில் கேட்டால் நிச்சயம் கண்களில் நீர் ததும்பும். அன்புள்ளம் படைத்த அந்தத் தந்தையரில் சுமார் 50 சதவிகிதம் பேருக்கு வேலைசார்ந்த அழுத்தம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  

``தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே...'' - இன்று தந்தையர் தினம்!

`பியூச்சர் ஜெனரலி இந்தியா லைப் இன்ஷுரன்ஸ் கம்பெனி லிமிடெட்' மற்றும் `மார்க்கெட் எக்ஸெல்-மார்க்கெட் ஏஜென்சி ஆராய்ச்சி நிறுவனம்' ஆகியவை இணைந்து நடத்திய அந்த ஆய்வில் இது கண்டறியப்பட்டது. தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து தந்தையரில் பலர் கவலைப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தந்தையர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில், ``தங்களுடைய குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து, ஆளாக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்கான பொருளாதார பலத்தை அடைவதற்காகவும் தங்களது ஆரோக்கியத்தின்மீது கவனம் செலுத்துவதில்லை'' என்பது தெரியவந்துள்ளது.  

``தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே...'' - இன்று தந்தையர் தினம்!

இதுதொடர்பாக ஏழு முக்கிய நகரங்களில் சுமார் 35 வயதுடைய 1,319 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் பட்டம் பெற்று, ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டக்கூடியவர்கள். அதில் 100 பேரில் 19 பேர் மட்டுமே தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்களாம். அலுவலகங்களில் பணியாற்றும் 100 தந்தையர்களில் 49 பேருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றன. 

மேலும், `68 சதவிகித தந்தையர்கள் வாரத்தில் ஆறு நாள்களும் 7-லிருந்து 9 மணி நேரம் வேலை செய்கிறார்கள். நெருக்கடியான வாழ்க்கை முறையால் அவர்களால் தங்களது உடல்நலனில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதன் விளைவாக அவர்களுக்கு உடல் சோர்வு, கவலை ஏற்பட்டு வேலைசார்ந்த அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்’ என்கிறது அந்த ஆய்வு. 

``தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே...'' - இன்று தந்தையர் தினம்!

`தன் குழந்தைக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமைதான். ஆனால், அதற்காகத் தன்னுடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வது தீர்வாகாது. ஆரோக்கியமே உண்மையான செல்வம் என்பதைத் தந்தையர் உணர வேண்டும்.  வேலைசார்ந்த அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொள்ள பழக வேண்டும். விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வெளியே செல்வது அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்’ என்றும் வலியுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.

Vikatan