Published:Updated:

நீலகிரி: பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; இலக்கை எட்டிய முதல் மாவட்டம்!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

பழங்குடிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட 21,800 பழங்குடிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை நீலகிரி பழங்குடிகளையும் வெகுவாக பாதித்தது. எண்ணிக்கை அளவில் மிகக்குறைவாக உள்ள 6 வகையான பழங்குடியின மக்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் பழங்குடிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெரும்பாலான பழங்குடிகள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டியே வந்தனர். இந்த அச்சத்தை களையும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் அரசு தீவிரப்படுத்தி வந்தது. வனத்திலும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வீடுகளுக்கேச் சென்று சுகாதாரத்துறையினர் இரவு பகலாக தடுப்பூசி செலுத்தி வந்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் அசாத்திய முயற்சியால் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பழங்குடிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே பழங்குடிகளுக்கு 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளது நீலகிரி.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இந்த இலக்கை எட்டியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 27,500 பழங்குடிகளில் 21,800 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 21,500 பழங்குடிகளுக்கு நேற்றுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பழங்குடிகளுக்கு இன்று காலை முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளன. நீலகிரியில் பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு,100 சதவிகித இலக்கை எட்டியுள்ளோம்" என்றார் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு