Published:Updated:

`10-ம் வகுப்பு தேர்வுக்காக கொடைக்கானல் வந்த மாணவி!' -அதிர்ச்சிகொடுத்த மருத்துவப் பரிசோதனை #corona

கொடைக்கானல்
கொடைக்கானல்

10-ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக கொடைக்கானல் வந்த சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரம். வெளிநாட்டினர் அதிகம் நடமாடும் பகுதி. தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் நிலையில், கொடைக்கானல் பகுதியில் இதுவரை கொரோனா தொற்று இல்லை. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் தொற்று பரவாமல் பாதுகாப்பான பகுதியாகக் கொடைக்கானல் இருக்கிறது.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தபோதும், கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக சமவெளிப் பகுதியிலிருந்து வரும் நபர்களும் சோதனைக்குப் பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளிகளில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் படித்துவருகிறார்கள்.

கொரோனா
கொரோனா

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்கள். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு அடுத்த மாதம் நடக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, கொடைக்கானல் தனியார் பள்ளிகளில் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்கள் நகருக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள், இ-பாஸ் மூலமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக சென்னை சென்றவர், தேர்வுக்காக இரண்டு நாள்களுக்கு முன் கொடைக்கானல் திரும்பினார். தன் தாயாருடன் வந்தவர், வெள்ளி நீர்வீழ்ச்சி அருகேயுள்ள சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாணவி மற்றும் தாயாரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சென்னையிலிருந்து அவர்களை காரில் அழைத்து வந்த ஓட்டுநர் தனிமைப்படுத்தப்பட்டார். தாயும் மாணவியும் கொடைக்கானலில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், மாணவியின் ரத்த மாதிரி முடிவு இன்று காலை வந்துள்ளது. அதில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மாணவியும் அவரது தாயாரும் ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். தாயாரின் ரத்த மாதிரி சோதனை முடிவு இன்று வரும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு