Published:Updated:

கேரளாவை மிரட்டும் `ஷிகல்லா' தொற்று... சிறுவன் மரணம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ஷிகல்லா பாக்டீரியா
ஷிகல்லா பாக்டீரியா

'ஷிகல்லா' தொற்றால் இறந்த சிறுவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஆறு பேருக்கு ஷிகல்லா பரவியிருப்பது கேரளத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கொரோனா பரவல் நாடெங்கும் இருந்துவரும் நிலையில், `ஷிகல்லா (Shigella)' என்ற பாக்டீரியா கேரளாவில் பரவி வருவது அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குடல் அழற்சியை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோட்டாம்பறம்பு பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஷிகல்லா பாக்டீரியா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இறந்த சிறுவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்களில் ஆறு பேருக்கும் ஷிகல்லா பரவியிருப்பது கேரளத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிறுவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பாக்டீரியா பரவியதாக கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை கம்யூனிட்டி மெடிசின் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனாலும் ஷிகல்லா பாக்டீரியா கோழிக்கோடு பகுதிக்கு எப்படி வந்தது என்று கண்டறியப்படவில்லை.

ஷிகல்லா தொற்றால் சிறுவன் மரணம்
ஷிகல்லா தொற்றால் சிறுவன் மரணம்

கோழிக்கோட்டில் 52 பேருக்கு ஷிகல்லா பாக்டீரியா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறப்படுகிறது. 5 வயதுக்குக் கீழ் உள்ள இரண்டு குழந்தைகள் ஷிகல்லா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்குக் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷிகல்லா பாக்டீரியா கண்டறியப்பட்ட கோட்டாம்பறம்பு பகுதியில் உள்ள தண்ணீர், உணவு வகைகளின் சாம்பிள்கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை ரிப்போர்ட் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் கூறுகையில், "கேரளத்தில் ஷிகல்லா பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புதிது அல்ல, இதற்கு முந்தைய வருடங்களிலும் ஷிகல்லா பாக்டீரியா சில பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிகல்லா, ஈக்கோளி உள்ளிட்ட பாக்டீரியாக்கள் அசுத்தப்படுத்தப்பட்ட தண்ணீர், உணவு ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. எனவே தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். தவறினால் பரவலுக்கு வாய்ப்பு ஏற்படலாம்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

பொதுவாக, மக்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், இன்று மக்கள்தொகை அதிகரித்துட்டதால், மாநகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது. எனவே, தண்ணீரை கொதிக்க வைத்துதான் குடிக்க வேண்டும்.

ஷிகல்லா பாக்டீரியா பரவல் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ முகாம் நடத்திவருகிறோம். மக்களுக்கு இந்த பாக்டீரியா பரவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறோம்.

சுகாதாரத்துறை கூறும் எல்லா வழிமுறைகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். 11 வயதுக் குழந்தை ஷிகல்லா பாதித்து மரணமடைந்ததால் இந்த பாக்டீரியா குறித்து தெரியவந்துள்ளது. வேறு சிலருக்கும் அது பரவி இருந்தது. ஆனால், சமயோசிதமாக நடவடிக்கை எடுத்ததால் மற்றவர்களை காப்பாற்ற முடிந்தது. இந்நோய் குழந்தைகளுக்கு அதிகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் சுமார் 50 பேரின் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு ஷிகல்லா பரவியுள்ளது கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

குடிநீர்
குடிநீர்
மாதிரி படம்

மக்களுக்குச் சொல்லிக்கொள்வதெல்லாம், மிகவும் கவனமாக இருங்கள். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். கிணறுகள் எல்லாம் சூப்பர் குளோரினேஷன் செய்யப்பட்டுவிட்டது. அதிகமானோர் சேர்ந்து வாழும் பகுதிகளில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு