லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஆடாதொடை முதல் நொச்சி வரை... 12 மூலிகைகள்... ஏன்? எதற்கு? எப்படி?

மூலிகை
பிரீமியம் ஸ்டோரி
News
மூலிகை

ஆடாதொடை இலைகள் கசப்புச் சுவையுடன் இருக்கும். இதனால் இதை ஆடுகள் உண்ணாது. ‘ஆடுகள் தொடா இலை’ என்பதே ஆடாதொடை என்று மாறியது

நம் முன்னோர்கள் வீட்டுக் கொல்லையிலேயே வைத்திய சாலையை வைத்திருந்தனர். தலைவலி முதல் குடற்புழு நீக்கம் வரை நிவாரணம் பெற, அவர்களுக்கு அந்த மூலிகைகளின் இலை, தண்டு, வேரே போதுமானதாக இருந்தது. கால மாற்றத்தில் நாம் கொல்லையையும் மூலிகைகளையும் இழந்து நிற்கிறோம்.

இன்னொரு பக்கம், இயற்கை உணவுகளை உண்டு வந்த நாம், இப்போது நிறமூட்டிகள், பிரிசர்வேட்டிவ்கள், ஃபாஸ்ட் ஃபுட் என உணவே நோய்களை உண்டுபண்ணும் காரணிகளாகும் அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் மலச்சிக்கல் தொடங்கி நோய் எதிர்ப்பு சக்தி குறைவு வரை பல உடல்நலக் கோளாறுகளைச் சந்திக்கிறோம். அந்த நோய்களுக்குச் சாப்பிடும் மாத்திரைகளின் பக்க விளைவுகளால் சிறுநீரகப் பிரச்னை, கல்லீரல் செயல் இழத்தல் போன்ற பெரிய நோய்களைத் தேடிக் கொள்கிறோம்.

தலைவலிக்கு மாத்திரையை விழுங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளா மல், சளி, வயிற்றுவலி போன்ற சிறு தொந்தரவுகளுக்கும் மெடிக்கல் ஷாப்புக்கு ஓடாமல், எளிய மூலிகைகளின் கைவைத்தியங்களை பழகிக் கொள்வோம். மேலும், உள்ளுறுப்புகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் நம் வாழ்வோடு ஒன்றிய இந்த மூலிகைகள் கைகொடுக்கும். அவற்றைப் பயன்படுத்தி நம் வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய சிறு சிறு மருந்துகள் நம்மை ஆரோக்கியத்தை நோக்கி நிச்சயம் அழைத்துச் செல்லும்.

நம் வீட்டின் அருகிலேயே கிடைக்கும் மூலிகைகளையும், அவற்றின் பயன்களையும், பயன்படுத்தும் முறைகளையும் இங்கு விளக்குகிறார்கள் சித்த மருத்துவர்கள் விக்ரம் குமார், மு.கார்த்திகேயன் மற்றும் இயற்கை மருத்துவர் தீபா.

ஆடாதொடை முதல் நொச்சி வரை... 12 மூலிகைகள்... ஏன்? எதற்கு? எப்படி?

இந்த இணைப்பிதழில் உங்களுக்காக நாங்கள் தேடித் தேடித் தொகுத் திருக்கும் மூலிகைத் தகவல்கள், இன்றைய அசாதாரண சூழலில் மட்டு மல்ல, என்றைய அசாதாரண சூழலிலும் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுபவையே. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான பொருள்கள் மற்றும் மூலிகைகள் உங்கள் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலுமே கிடைக்கும். அப்படிக் கிடைக்காதவற்றை, அருகிலுள்ள நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கலாம்.

சித்த மருத்துவர் மு.கார்த்திகேயன் வழங்கும் தகவல்கள்...

ஆடாதொடை நுரையீரல் மருந்து!

ஆடாதொடை இலைகள் கசப்புச் சுவையுடன் இருக்கும். இதனால் இதை ஆடுகள் உண்ணாது. ‘ஆடுகள் தொடா இலை’ என்பதே ஆடாதொடை என்று மாறியது. பொது வாக, ஆடாதொடையை டெல்டா மாவட்டங்களில் ஆற்றங்கரை ஓரத்தில் அதிகமாகப் பார்க்க முடியும். ஆடாதொடை முக்கியமான வேலிப்பயிர்.

பயன்கள்

ஆடாதொடை இலைகளில் இருக்கும் ‘வாஸிசைன்’ (Vasicine) எனும் வேதிப்பொருளுக்கு, நுரையீரல் பாதையை விரிவடையச் செய்யும் தன்மை உண்டு. நுரையீரல் தொற்றிலிருந்து ஒருவரை மீட்க இது முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது.

கப நோய்களை நீக்குவதற்கு உதவும்.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல் நோயை சரி செய்ய உதவும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

ஆடாதொடை, அதிமதுரம், சீந்தில், ஏலம், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து, 50 மில்லி தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் பாதியாக வற்றிய பிறகு, வடிகட்டி ஆறவைத்துக் குடிக்கவும். தினமும் 60 மில்லி வரை இந்த மூலிகை நீரைப் பருகி வர, மூக்கில் நீர் வடிதல், தலைபாரம், சளி, வறட்டு இருமல் குணமாகும்.

ஒரு கைப்பிடி அளவு ஆடாதொடை இலைகள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் கடுக்காய்த் தூள் இவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, குடிநீராகப் பயன்படுத்தலாம். சுவாச நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். குளிர்காலங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் உதவும்.

புதிய ஆடாதொடை இலைகள் கிடைக்காதபட்சத்தில், இலைகள் கிடைக்கும்போது காயவைத்துப் பொடித்து வைத்துக்கொள்ளலாம். ஆடாதொடை பொடியைத் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். ஆடாதொடை இலைப் பொடியை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவுக்குப் பிறகு, ஒரு டீஸ்பூன் வாயில் போட்டு சிறிது வெந்நீர் குடித்து வர, ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

ஆடாதொடை மணப்பாகு சளி, இருமலுக்கு அற்புதமான மருந்து. ஆடாதொடை இலை ஒரு கிலோ எடுத்து, அதைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கிலோ இலைக்கு 6 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்து ஒரு லிட்டராக வற்றிய பிறகு, அதனுடன் ஒரு கிலோ பொடித்த பனை வெல்லம் சேர்த்துப் பாகுப் பதத்துக்குக் காய்ச்சவும். இதை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடவும். ஆறிய பிறகு, காற்றுப்புகாத கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தி, ஒரு வருடம்வரை பயன்படுத்தலாம். தேவைப்படும்போது மணப்பாகை எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து மிதமான சூட்டில் குடிக்கலாம்.

3 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு வேளைக்கு 10 மில்லி கிராம் மணப்பாகு கொடுக்கலாம். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு வேளைக்கு 15 மில்லி கிராம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் பருகலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்து இது.

ஆடாதொடை முதல் நொச்சி வரை... 12 மூலிகைகள்... ஏன்? எதற்கு? எப்படி?

பூனை மீசை

சீனா, மலேசியா வரை

பூனை மீசை செடியின் பூக்கள் பார்ப்பதற்கு பூனையின் மீசை போன்று இருக்கும். அதனால் இதைப் `பூனை மீசை மூலிகை' என்று அழைக்கிறார்கள். இதற்கு ‘ராவணன் மீசை’ என்று இன்னொரு பெயரும் உண்டு. ஜாவா நாட்டில் அலங்காரச் செடியாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘ஜாவா டீ’ என்பது மலேசிய தேநீர் கடைகளில் இப்போதும் பிரபலமான பானம். ‘மிசாய் குச்சிங்’ என்ற பெயரில் சீன மருத்துவத்தில் பெரிதும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. ‘மிசாய்’ என்றால் மீசை, ‘குச்சிங்’ என்றால் பூனை. அங்கும் பூனை மீசை என்றே அழைக்கப்படுகிறது.

பயன்கள்

சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை வெளியேற்றும்.

சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் சிறந்த பலனைத் தருகிறது.

சிறுநீரகச் செயல் இழப்பு, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரகக் கற்கள், கீல்வாதம், வாத நோய் மற்றும் அதன் விளைவாக வரும் துணை நோய்களுக்கும் சிறந்த நிவாரணம் தரும்.

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் பூனை மீசை சிறப்பாகச் செயல்படுகிறது.

கல்லீரல் கொழுப்பைக் கரைத்து அதன் செயல்பாட்டை அதிகப்படுத்து கிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

நாள்பட்ட சிறுநீரக நோய் என்று சொல்லக்கூடிய `சிகேடி' (CKD - Chronic Kidney Disease) உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாடினின் அளவு அதிகமாக இருந்தால் சராசரி அளவை நோக்கிக் குறைக்க இது பயன்படுகிறது. அதாவது, உப்புச்சத்தின் அளவு அதிகரித்து இருந்தால் அது ரத்தத்தில் மட்டுப்படும்.

சிறுநீரகப் பிரச்னை தவிர்த்து வாத நோய், ரத்த அழுத்தம், நாவறட்சி, மாதவிடாய்க் கோளாறுகள், பால்வழி பரவும் மேக வெட்டை நோய், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அலர்ஜி, கல்லீரல் வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வைத் தரும். தேவைப்படுபவர்கள் மருத்துவரை நாடி நிவாரணம் பெறலாம்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

பூனை மீசையை தேநீர் வைத்துக் குடிக்கலாம். ஒன்றரை டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்துவிடவும். அந்த நீரில் ஐந்து கிராம் அளவு பூனை மீசை மூலிகையைச் சேர்த்து மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு வடிகட்டி, மூலிகைத் தண்ணீரைக் குடிக்கலாம். இனிப்புச்சுவை விரும்புவர்கள், நீரிழிவு பிரச்னை இல்லை எனும் பட்சத்தில் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் பயன்படுத்தி வர, மேலே குறிப்பிட்ட நோய் நம்மைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள இயலும்.

மூக்கிரட்டை கீரையுடன் சேர்த்து, கஷாயம் வைத்துப் பருகலாம்.

தினமும் பூனை மீசை இலை கிடைக்கிறது என்பவர்கள் தினமும்

ஐந்து இலைகளைப் பறித்து இரண்டு மிளகுடன் சேர்த்து வெற்றிலைபோல் மென்று சாப்பிடலாம்.

சாதிக்காய்

உலக வணிக மதிப்புக்கொண்டது!

உலக அளவில் சாதிக்காய்க்குப் பெரிய வணிகம் உள்ளது. நம் நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகிறது. சாதிக்காயின் சதைப்பகுதிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சுற்றி இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதி, ‘சாதிபத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. சாதிக்காயின் விதைக்கும் அதன் தோல் பகுதிக்கும் மருத்துவ குணங்கள் அதிகம்.

பயன்கள்

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.

சுவாசம் சார்ந்த பிரச்னை, இருமல் போன்ற நோய்களுக்கும் ஏற்றது.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு சிறந்த தீர்வு தரக்கூடியது.

நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிறு பிரச்னைகளுக்கும் மற்றும் மன அழுத்தத்திலிருந்து மீளவும் (Antidepressant) சாதிக்காய் மிகச்சிறந்த மருந்து.

நினைவாற்றலை மேம்படுத்தவும், பதற்றத்தைக் குறைக்கவும் சாதிக்காய்ப் பொடியைப் பயன்படுத்தலாம்.

வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் வயிற்றுப்போக்குகளுக்கும் சாதிக்காய்த்தூள் சிறந்த மருந்து.

ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாட்டால் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதில் சாதிக்காய் செயலாற்றுகிறது.

சாதிக்காயில் உள்ள மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்து, தோல் சுருக்கத்தைத் தடுத்து இளமையான தோற்றத்தைத் தரும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

சாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இந்த அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக சீரகத்தூளை இத்துடன் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். காலை நேர உணவுக்கு முன்பாக ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, நுரையீரல் தொற்று நீங்கும்.

ஒரு சிட்டிகை சாதிக்காய்த்தூளை பசும்பாலில் கலந்து இரவு உறங்கும் முன் அருந்தினால், மன அழுத்தம் நீங்கி, நரம்பு வலிமை அடையும். சீரான தூக்கம் கிடைக்கும்.

குழந்தைப்பேறு இன்மை, விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு சாதிக்காயும், சாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள். சாதிக்காய் லேகியம் மேற்கூறிய குறைபாடுகளுக்கு ஆகச்சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் உள்ளது (சாதிக்காய் லேகியம் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்).

திராட்சை சாற்றுடன் பனைவெல்லம் சேர்த்து, சாதிக்காய்த் தூளைக் கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும்.

வாந்தி உணர்வை நிறுத்த சாதிக்காய்த்தூளை நெல்லிக்காய்ச் சாற்றுடன் சேர்த்துப் பருகலாம்.

பொடித்த சாதிக்காய்த்தூளை ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நல்ல உறக்கம் கிடைக்கும்.

வில்வம்

சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும்!

வில்வத்துக்கு ‘கூவிலம்’ என்ற பெயரும் உண்டு. வீடுகளின் தோட்டத்தில் வளர்வதைக் காட்டிலும் வில்வமரம் கோயில் பிராகாரங்களில் அதிகம் வளர்க்கப்படுகிறது. வில்வ மரத்தின் இலை, காய், கனி, விதை என அனைத்தும் மருந்துகளாகப் பயன்படுகின்றன. வில்வத்தின் பழம் துவர்ப்பு சுவையை பிரதானமாகக் கொண்டது.

பயன்கள்

வில்வ மரத்தின் பழம், குடல் கோளாறுகளைப் போக்க உதவும்.

உடல் சூட்டைக் குறைக்கும்.

மலச்சிக்கலைத் தீர்க்கும்.

உடலுக்கு பலம் தருவதோடு, உடலின் ஆற்றலை மேம்படுத்த உதவும்.

வில்வ இலை நாள்பட்ட தோல் அரிப்பு நோய்களில் சிறந்த பலனைத் தரும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வரும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

வில்வ பழச்சாற்றுடன் சர்க்கரை கலந்து சர்பத் போல சாப்பிடலாம்.

தீராத வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி அளவு வில்வ இலையை நீரில் ஊறவைத்து, எட்டு மணி நேரம் கழித்து அந்த நீரைப் பருகினால் பலன் கிடைக்கும். வாத வலிகள் சரியாகும். உடல் நலம் சீராகும். நீரிழிவாளர்கள் இந்த நீரை அருந்தினால் நோய் கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட ரத்தக் கொதிப்பைத் தீர்க்கும்.

வில்வக்காய்களை ஓட்டுடன் துண்டு துண்டாக உடைத்து வெயிலில் உலர்த்தி, இடித்து, சுத்தமான வெள்ளைத் துணியில் சலித்து சூரணத்தை பத்திரப்படுத்தி வைக்கவும். இரண்டு பெரிய மேசைக்கரண்டி வெந்நீரில் அதைச் சேர்ந்து கட்டியாகக் கூழ்போலச் செய்து ஆறிய பிறகு சாப்பிட... பேதி உடனடியாகக் குணமாகும்.

ஆறு வில்வ இலைகளை ஒரு செம்பு நீரில் ஊற வைக்கவும். ஊறிய நீரை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை தினம் தோறும் குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெறும். உடல் குளிர்ச்சி அடையும்.

வில்வப் பழத்தை உடைத்து, ஓட்டை நீக்கி, பாதி பழத்தை நசுக்கி சாறு எடுத்துக்கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும். அதன்பின் மீதி பழத்தையும் அவ்வாறே அத்துடன் சேர்த்து சூடுபடுத்தவும். பழம் நன்றாகக் கரைந்த பிறகு, நார் களையும் விதைகளையும் வடிகட்டவும். இதை ஆறவைத்து

10 மில்லி நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.

50 கிராம் காய்ந்த வில்வ இலைத் தூளுடன், 10 கிராம் மிளகு சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதைத் தினமும் அரை டீஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட, ஆஸ்துமா பிரச்னைக்கு நிவாரணம் கிடைக்கும்.

வில்வ இலைகளை காயவைத்துப் பொடித்துக்கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வர நீரிழிவு கட்டுக்குள் வரும்.

கருஞ்சீரகம்

வேறு எந்த தாவர விதைக்கும் இல்லாத தனிச்சிறப்பு!

கருஞ்சீரகத்தில் உள்ள ‘தைமோகுயினான்’ (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்த ஒரு தாவர விதையிலும் இல்லை. கருஞ்சீரகம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு உள்ளது. மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், போன்றவையும் அதிகம் உள்ளன.

பயன்கள்

சுவாசப் பிரச்னைகளிருந்து காக்கும்.

குடல் புழுக்களை வெளியேற்றும்.

இதயநோய், புற்றுநோய்களின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

உடலில் உள்ள எலும்பு மஜ்ஜையின் (Bone marrow) உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாமல் தவிர்க்கும். குறிப்பாக, கணையப் புற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும்.

தோல் நோய்கள், அரிப்பு, அலர்ஜி, சொரியாசிஸ் உள்ளவர்களுக்குச் சிறந்த தீர்வு அளிக்கும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

கருஞ்சீரகத்தைப் பருத்தித் துணியில் வைத்து முடிச்சிட்டுக் கட்டிக் கொள்ளவும். இதை அரிசி வேகவைக்கும் பானையில் சேர்த்து அரிசியுடன் வேக வைக்கவும். துணியின் வழியாக சீரகத்தின் தன்மை உணவில் கலக்கும். இந்தக் கஞ்சியை வடிகட்டிக் குடித்தால், உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம், வலி, ரத்தக்கட்டு ஆகியவை சரியாகும். எலும்பு முறிவு ஏற்பட்ட பின்னர், ஏற்படும் ரத்தக்கட்டு இதனால் தீரும்.

வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத் தூளுடன் கருப்பட்டி கலந்து வைத்துக் கொள்ளவும். இதைப் பெண்கள் மாதவிடாய் தேதிக்கு பத்து நாள்களுக்கு முன்பிருந்தே தினமும் காலையில் ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடியாக்கவும். இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இதைத்தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுகளும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும். மலச்சிக்கல் தீரும்.

ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து வெந்நீர், தேன் கலந்து, காலை, மாலை என இரண்டு வேளைகள் குடித்து வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.

நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயப்பொடி, நாவல்பழ விதையின் பொடி, கருஞ்சீரகப்பொடி மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் ஒன்றாகக் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர, பாதங்களில் உண்டாகும் எரிச்சல் குறையும்.

நொச்சி இலைகளைத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, அந்த நீரை வடிகட்டி, கருஞ்சீரகப்பொடி சேர்த்துக் குடிக்க காய்ச்சல் படிப்படி யாகக் குறையும்.

தடைபட்ட மாதவிடாயைச் சரிசெய்ய ஒரு கிராம் கருஞ்சீரகப் பொடியுடன், சிறிது கீழாநெல்லி மற்றும் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.

குடல் புழுக்கள் இருந்தால் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்காது. புழுக்களை வெளியேற்ற, அரை டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன், மூன்று சிட்டிகை கருஞ்சீரகப் பொடி கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.

சித்த மருத்துவர் விக்ரம் குமார் பகிர்ந்த மூலிகைத் தகவல்கள்...

கொடிப்பசலை ஊட்டத்தைப் பரிசளிக்கும்!

கொடிப்பசலைப் பழங்களை நசுக்கினால் சிவப்புச்சாறு போல வரும், அதைக் குழந்தைகள் ‘லிப்ஸ்டிக்’ போல உதடுகளில் பூசி விளையாடுவார்கள். பசலையின் அந்த நிறத்துக்கு அதிலுள்ள ‘ஆந்தோசயனின்’ நிறமி காரண மாகிறது. சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் - ஏ, இரும்புச் சத்து, அமினோ அமிலங்கள் போன்ற சத்துகள் பசலை யில் இருப்பதால், உணவில் தொடர்ந்து சேர்த்து வர ஊட்டத்தைப் பரிசளிக்கும்.

பயன்கள்

இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த விருத்திக்கு உதவும்.

குறைவான கலோரிகள், நிறைவான நுண் ஊட்டங்கள் என வழங்குவதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பசலை சிறந்த பரிந்துரை.

முறையற்ற மாதவிடாய்க் கோளாறுகளை சீராக்கும்.

வயிற்றுப்புண்ணைக் குறைக்கும்.

உடல் சூட்டைத் தணிக்கும்.

இலையை அரைத்து சருமத்தில் தடவ சரும அரிப்பு சார்ந்த பிரச்னைகள் நீங்கும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

பசலைக் கீரையை புளி சேர்க்காமல் சமைத்து நெய் சேர்த்துச் சாப்பிட்டு வர, ஆண்மை அதிகரிப்புக்கான இயற்கை ரெசிப்பியாக அது அமையும்.

ஏப்ரல், மே மாதங்களில் வேனல் கட்டிகள் உண் டாகும். அப்போது பசலையின் இலையை அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவி காயவைத்து குளிக்க, விரைவில் பலன் கொடுக்கும்.

ஒரு டீஸ்பூன் பசலை இலைச்சாற்றுடன், சிறிது வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டுவர வயிற்றுப்புண் நீங்கும்.

முறையற்ற மாதவிடாயை ஒழுங்குபடுத்த, பசலையின் வேரை அரைத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து பருகலாம்.

பசலை இலைச்சாற்றுடன் தேவையான அளவு கற்கண்டு சேர்த்து காலை, மாலை இரண்டு வேளையும் குழந்தைகளுக்குக் கொடுத்து வர நீர்க்கடுப்பு பிரச்னை நீங்கும்.

பசலைக் கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்துச் சாப்பிட்டால் பால்வினை நோயான வெட்டை நோய் சரியாகும். கர்ப்பிணிகள் இதைச் சாப்பிடுவ தால் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

ஆவாரை

கல்லீரல் கவசம்!

‘ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் வரி, ஆவாரை யால் கிடைக்கும் நித்தியத் தன்மையைச் சொல்கிறது. `ஃபிளாவனாய்ட்ஸ்' (Flavonoids), `டானின்ஸ்' (Tannins) போன்ற தாவர வேதிப்பொருள்கள் ஆவாரையில் இருப்பது ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆவாரையில் இருக்கும் எதிர்-ஆக்ஸிகரணி (Antioxidant) கூறுகள் குறித்தும் நிறைய ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன. ஆவாரை இலைகளுக்கு கல்லீரலைப் பாதுகாக்கும் தன்மை (Hepato-protective activity) இருப்பதாக வும் தெரியவந்துள்ளது.

பயன்கள்

ஆவாரையின் வேர், இலை, பூ, காய், பட்டை (ஆவாரைப் பஞ்சாங்கம்) என முழு தாவரத்தையும் உலரவைத்து, பொடித்த சூரணத்தை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துவர, நீரிழிவு நோயின் தீவிரம் குறையும். ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வரும்.

நீரிழிவு நோயின் ஆரம்பநிலை அறிகுறிகளான அதிகப்படியான

தாகம் (Polydipsia), அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyuria), நாவறட்சி, உடல் சோர்வு முதலியவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும்.

உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து சிறுநீரக உறுப்பில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும். வெயிலால் ஏற்படும் சரும நிறமாற்றத்தை சரிசெய்ய உதவும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

உலர்ந்த அல்லது பசுமையான ஆவாரம் பூக்களை மூன்று டீஸ்பூன் எடுத்து, நீரில் இட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். இத்துடன் தேவை யான அளவு பனங்கற்கண்டு சேர்த்து வாரத்தில் மூன்று நாள்கள் குடிக்கலாம்.

துவர்ப்பு - இனிப்புச் சுவையுடன்கூடிய இந்த பானம், கைகால்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க உதவும்.

ஆவாரம் பூவை துவையலாகவோ, வெந்நீரில் கலந்தோ பயன்படுத்த உடலில் தோன்றும் வியர்வை நாற்றம் நீங்கும். உடல் சூடு குறையும்.

ஆவாரம் பூ மற்றும் அதன் பட்டையை சம அளவு எடுத்து நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்க, வாய்ப்புண் குணமாகும்.

உளுந்த மாவுடன் உலர்ந்த ஆவாரை இலைகளை சிறிது சேர்த்து மூட்டுகளில் பற்றுப்போட விரைவில் வீக்கமும் வலியும் குறையும்.

ஆவாரம் பூவுடன் மாங்கொழுந்தை சம அளவு எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்கவும். இந்தத் தண்ணீரை ஆறவைத்துக் குடிக்க, மூல நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

ஆவாரை விதைகளைக் கஞ்சிபோல வேகவைத்துக் குடித்துவந்தால் நீரிழிவால் ஏற்படும் சோர்வு நீங்கும்.

25 கிராம் ஆவாரம் வேர்ப்பட்டை பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து காய்ச்சி கால் லிட்டராக வற்றவிடவும். வாட்டர் பாட்டிலில் ஊற்றிவைத்து நாள் முழுக்க அவ்வப்போது குடித்து வர ரத்தத்தில் `கிரியாட்டினின்' அளவு குறையும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த நீர் சிறந்த மருந்து.

அறுகம்புல்

குடல் குணம் பெறும்!

அறுகம்புல்லானது உடலில் தங்கிய நச்சுகளை நீக்குவது, தோல் நோய்களுக்குத் தீர்வு தருவது, குடல் இயக்கங்களை முறைப்படுத்துவது எனப் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இதிலுள்ள ஒருவகையான புரதக்கூறு, நம் உடலின் நோய் எதிர்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், அழற்சி (Anti-arthritic activity) ஆகியவற்றை அறுகம்புல் சாறு குறைப்பதாகவும் ஆய்வு சொல்கிறது.

பயன்கள்

விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தின் இயக்கத்துக்கு (Sperm motility) தேவையான `ஃப்ரக்டோஸ்' அளவை அதிகரிப்பதற்கு அறுகம் புல் சாறு பயன்படுகிறது.

ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்.

தினமும் காலையில் அறுகம்புல் சாறு குடித்தால் புத்துணர்வுடன் இருக்கலாம்.

மூல நோயைக் குணப்படுத்தும்.

மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பானாகச் செயல்படும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

அறுகம்புல்லை இடித்து சாறு பிழிந்து, இதனுடன் சிறிது பனங்கற்கண்டு கூட்டி தினமும் அரை டம்ளர் குடித்து வர, உடம்பில் தங்கிய நச்சுகளை வெளியேற்றும்.

ஒரு கைப்பிடி அறுகம்புல், ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை இவற்றை நீரில் போட்டு கொதிக்கவைத்து, காய்ச்சி வடிகட்டினால் அறுகன் குடிநீர் கிடைக்கும். இதைக் குடித்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். புத்துணர்ச்சி யுடன் இருக்கலாம்.

அறுகன் குடிநீரோடு சிறிது வெண்ணெய் சேர்த்துக் குடித்துவர, எடுத்துக் கொண்ட மருந்துகளின் விளைவாக உண்டான சிறுநீர் எரிச்சல் குறையும்.

ஒரு லிட்டர் நீரில் அசோகமரப்பட்டை மற்றும் அறுகம்புல் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். அந்தத் தண்ணீர் கால் லிட்டராக வற்றிய பிறகு, அதை ஆற வைக்கவும். இந்த மூலிகைக் குடிநீரைக் குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதிக ரத்தப் போக்கை மட்டுப்படுத்தும்.

அறுகம்புல்லைக் காயவைத்துப் பொடி செய்து, தோசை, இட்லி, அடை போன்ற உணவு வகைகளில் கலந்தும் சாப்பிடலாம்.

ஒரு கைப்பிடி அறுகம்புல்லை அரைத்து, 150 மி.கி காய்ச்சாத ஆட்டுப்பாலில் அதைக் கலந்து தினமும் காலை வேளையில் குடித்து வர, ரத்த மூலம் சரியாகும். நரம்புத்தளர்ச்சி நோய்களும் குணமாகும்.

அறுகம்புல், பெரிய நெல்லிக்காய், புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து ஜூஸ் செய்யவும். இத்துடன் சிறிது மிளகு சேர்த்துக் குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மிகச்சிறந்த பானம் இது.

முடக்கத்தான்

மூட்டுவலி உள்ளவர்களுக்கான மெனு!

முடக்கத்தான் தாவரத்தில் `கேலிகாஸின்' (Calycosin), குவர்செடின்'

(Quercetin), `அபிஜெனின்' (Apigenin), `ப்ரோடோகேடிகுயிக் அமிலம்' (Protocatechuic Acid) ஆகிய ஆரோக்கியத்துக்கான வேதிப்பொருள்கள் உள்ளன. சிறுவர்களுக்கு `பட்டாசுக் காய்’ கொடியாகப் பரவசப்படுத்தும் முடக்கத்தான் முதியவர்களுக்கு வலி நிவாரணி மூலிகையாகக் கைகொடுக்கும். வயோதிகத்தின் காரணமாக உண்டாகும் மூட்டுவலியை கட்டுப்படுத்துவதால், முதியவர்களின் `மெனு'வில் கட்டாயம் இடம்பெற வேண்டிய மூலிகை இது. செலவில்லா மருந்தான இந்த முடக்கத்தான் கீரைக்கு முடக்கற்றான், முடக்கறுத்தான், முடற்கற்றான் என்ற பெயர்களும் உண்டு.

பயன்கள்

மூட்டுவலியைக் குறைக்கும்.

வாத நோய்களுக்குச் சிறந்த தீர்வாக அமையும்.

பசியைத் தூண்டும்.

உடல் பலம் பெறும்.

புத்துணர்ச்சி பெருகும்.

மலச்சிக்கல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு தரும்.

கை கால் வலியைக் குறைக்கும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

முடக்கத்தான் இலைகளை சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிடலாம்.

தோசைக்கு மாவு அரைக்கும்போது, அரிசியுடன் சிறிது முடக்கத்தான் இலைகளையும் சேர்த்து அரைத்து, முடக்கத்தான் தோசைகளாகச் செய்து சுவைக்கலாம்.

முடக்கத்தான் இலைகளை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து டீ போன்று செய்து குடிக்க சோர்வு நீங்கி உடனடியாக உற்சாகம் பிறக்கும்.

முடக்கத்தான் இலைகளுடன் சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் கொண்டு செய்யப்படும் நறுமணம் மிகுந்த முடக்கத்தான் ரசம், மலக்கட்டு, மூட்டுவலி பிரச்னைகளுக்குக் குணம் தரும்.

முடக்கத்தான் இலைகளைக் காயவைத்துப் பொடிசெய்து வைத்துக் கொள்ளலாம். லேசான உடல்வலி, சோம்பல் இருக்கும்போது ஒரு டீஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து பருகலாம்.

முடக்கத்தான் இலைப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் விரைவில் நீங்கும்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை கால் லிட்டர் நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சவும். இந்த எண்ணெயை உள்காயமாக அடிபட்டு வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவ வலி குறையும்.

முடக்கத்தான், வாத நாராயணன் இலைகள், நொச்சி வேர், பேய்மிரட்டி இலைகளை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதை நல்லெண்ணெயோடு சேர்த்து எண்ணெய் போன்று காய்ச்சவும். இந்த எண்ணெயை சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவ வலி குறையும்.

சிறுபீளை

பொங்கல் பூ!

சிறுபீளை மூலிகையைப் `பொங்கல் பூ' என்றும் அழைப்போம். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும்.

பயன்கள்

சிறுபீளையோடு பனைவெல்லம் சம அளவு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்துவர, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் உடனடியாகக் குறையும்.

சிறுபீளை, நெருஞ்சில் இலை, மாவிலங்கப்பட்டை, வெள்ளரி விதை சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீரை அருந்த, சிறுநீர் நன்றாகப் பிரியும்.

சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்படுவதோடு சிறுநீரகக் கற்களை கரைக்கும்.

சிறுநீரகப் பாதையில் உருவாகும் கிருமித் தொற்றுகளை அழிக்கும் தன்மையும் சிறுபீளைக்கு உண்டு.

ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளை அழிக்கும் சக்தியாகவும் சிறுபீளை செயல்படுகிறது.

ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியாடினின் அளவை சிறுபீளை குறைப்பதாக ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது.

உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, உடலில் தேங்கும் கழிவுகளை உடனடியாக வெளியேற்றும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

அரிசிக் கஞ்சியில் சிறுபீளையைச் சேர்த்துக் கொதிக்க வைத்து ‘சூப்’ செய்து குடிக்க உடலுக்கு வலிமை கிடைக்கும்.

பிரசவ நேரத்தை நெருங்கும் கர்ப்பிணிகளின் உடல் பலத்தைக் கூட்டுவதற்காக சிறுபீளைக் கஞ்சி குடிக்கலாம்.

சிறுபீளையை உலர வைத்து, தலைபாரம் உள்ளவர்கள் புகை போடலாம்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் சிறுபீளையைச் சேர்த்து அதைக் கால் லிட்டர் ஆகும் வரை கொதிக்க விடவும். இந்தத் தண்ணீரை தினமும் 50 மில்லி குடித்து வர சிறுநீரகப் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும்.

இயற்கை மருத்துவர் தீபா பகிர்ந்த தகவல்கள்...

தும்பை

ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம்!

‘‘தும்பைச் செடியின் பூ, இலை, வேர் மூன்றும் மருத்துவ குணம் கொண்டவை.

பயன்கள்

பூச்சிக்கடிக்கு மருந்தாகச் செயல்படும்.

சளி, ஜலதோஷம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

அரிப்பு, அலர்ஜி போன்றவற்றுக்குத் தீர்வு கொடுக்கும்.

குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

தும்பை இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பற்று போட அரிப்பு பிரச்னை நீங்கும்.

50 மில்லி தேங்காய் எண்ணெயில் தும்பைச் செடியின் தண்டுப் பகுதியைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறியதும் அந்த எண்ணெயை மூக்கின் மேற்புறம் மற்றும் மார்புப் பகுதியில் தடவ மூக்கடைப் பிலிருந்து நல்ல பலன் கிடைக்கும்.

தும்பை இலை மற்றும் பூவை எடுத்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் ஒற்றைத் தலைவலி குணமடையும்.

தும்பை இலையின் சாறு எடுத்து தண்ணீரில் கலந்து 30 மில்லி வெறும் வயிற்றில் குடிக்க குடல் புழுக்கள் வெளியேறும்.

தும்பை இலையை வேகவைத்துப் புளி சேர்த்துக் கடைந்து சாப்பிட வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

நொச்சி

மிகச் சிறந்த பூச்சிவிரட்டி!

நொச்சி இலைகள் இருக்கும் இடத்தில் கொசு அண்டாது என்பார்கள். நொச்சி மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகப் பயன்படுகிறது. நொச்சி வறட்சி தாங்கி வளரக்கூடிய தாவரமாகும். நொச்சியில் நீர் நொச்சி, கரு நொச்சி, வெண் நொச்சி எனப் பல வகைகள் உள்ளன. கருநொச்சி அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. நொச்சியின் இலை, பட்டை, வேர் என அனைத்துக்கும் மருத்துவ குணம் அதிகம்.

பயன்கள்

ஒற்றைத் தலைவலியைப் போக்கும்.

வயிற்றுப் புழுவை வெளியேற்றி, உடலைத் தேற்றும்.

சுவாசப் பிரச்னைகளை சரிசெய்யும்.

மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்து.

குடல் புழுக்களை வெளியேற்றும்.

பயன்படுத்தும் வழிமுறைகள்

உடலில் தோன்றும் கட்டிகள், கொப்புளங்கள் மீது நொச்சி இலைச் சாற்றை பற்றுப் போட்டால் கட்டிகள் கரையும்.

நொச்சி இலைகளை எடுத்து, ஒரு பருத்தித் துணியில் கட்டி, தலையணையில் வைத்துப் படுக்க மூக்கடைப்பு பிரச்னை தீரும். கழுத்துவலி போன்ற பிரச்னைகளும் குணமாகும்.

நொச்சி வேரை தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி தினமும் காலை ஒரு தேக்கரண்டி குடித்துவந்தால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும். பசியின்மை பிரச்னை தீரும்.

நொச்சியின் வேரை காயவைத்துப் பொடித்துக்கொள்ளவும்.

ஒரு டீஸ்பூன் நொச்சி வேர் பொடியுடன் சிறிது தேன் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.

கொதிக்கும் வெந்நீரில் நொச்சி இலைகளைச் சேர்த்து, அடுப்பை அணைத்து பாத்திரத்தை ஐந்து நிமிடங்கள் மூடிவைத்து விடவும். பின்னர், அதில் ஆவிபிடிக்க சுவாசப் பிரச்னைகள், சளித்தொல்லை நீங்கும்.

ஒரு கைப்பிடி நொச்சி இலையுடன் 50 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சவும். எண்ணெய் சிறிது வற்றியதும் ஆறவைத்து தலையில் தேய்க்கலாம். தலைவலி பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலையுடன் ஒரு டீஸ்பூன் மிளகு, 200 மிலி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக வற்றியதும் ஆறவைத்து பருக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நொச்சி இலையைக் காயவைத்து சாம்பிராணி போன்று தலைக்கு அருகில் வைத்து புகைப்போட நீர்கோத்தல், மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் தீரும்.

சருமப் பிரச்னை உள்ளவர்கள் அந்த இடத்தில் நொச்சி இலையுடன் கற்றாழை ஜெல் சிறிதளவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வர சருமம் குணம் பெறும்.