Published:Updated:

தமிழகத்தில் 11 ஆண்டுகளில் 1,291 பேர் உடலுறுப்பு தானம்!

லட்சுமணன்.ஜி

தமிழகத்தில் இதுவரை 1,291 பேரிடமிருந்து மொத்தம் 7,534 உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன.

தானம்
தானம்

உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13-ம் தேதி உலக உடலுறுப்பு தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உயிர் காக்கும் உறுப்பு தானம்
உயிர் காக்கும் உறுப்பு தானம்

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடலுறுப்புகளைத் தானம் பெறுவது குறித்து தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் காந்திமதியிடம் பேசினோம். ``தமிழக அரசின் சீரிய முயற்சி, ஊக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றால் தமிழ்நாடு, உடலுறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் கடின உழைப்பால் அதிக எண்ணிக்கையில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்பு தானம்

அதன் பயனாக, உடலுறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தமிழ்நாடு தொடர்ந்து நான்காவது ஆண்டாக தேசிய விருதைப் பெற்றுள்ளது. இதற்கு கொடையாளிகளின் குடும்பத்தாரின் உயர்ந்த எண்ணமே முக்கியக் காரணம்.

இறக்கும் தறுவாயில் உள்ள தங்கள் உறவினரின் விலை மதிப்பில்லாத உடலுறுப்புகளைத் தானம் செய்து மற்றவர்களுக்கு உயிர் கொடுக்கின்றனர். மேலும், உடலுறுப்பு தான ஒருங்கிணைப்பாளரின் பங்களிப்பும் மகத்தானது.

2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஜூலை 2019-ம் வரை தமிழகத்தில் 1,291 பேரிடமிருந்து உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. இதயம் - 560, நுரையீரல் - 455, கல்லீரல் - 1,194, சிறுநீரகம் - 2,327, இரைப்பை - 26, சிறுகுடல் - 4, இதய வால்வு- 815, விழித்திரை (கார்னியா) - 1,950, தோல் - 127, ரத்தக்குழாய்கள் - 2, எலும்பு - 46, முதுகெலும்பு மற்றும் திசுக்கள் (Spine Bone & Disc Tissue) - 26, அடிவயிற்று மடல் (Abdominal flap) - 2 என மொத்தம் 7,534 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் காந்திமதி

தமிழகத்தில் ஏறத்தாழ 9000-ம் பேர் பல்வேறு உறுப்புகள் செயலிழந்து மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்கள் பயன்பெற அனைவரும் உடலுறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்து மக்களிடையே உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது" என்றார்.

உடலுறுப்புகளை எரிக்க வேண்டாம், புதைக்க வேண்டாம், மனிதனில் விதைத்துச் செல்வோம்!