Published:Updated:

நெல்லையில் கொரோனா நோயாளிகள் 13 பேர் டிஸ்சார்ஜ்! - நெகிழ்ச்சியில் உறவினர்கள்

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள்

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்ததால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து 14 நாள்கள் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நெல்லை மண்டலத்துக்குச் சிறப்பு அதிகாரியாக கருணாகரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்ட பின்னர் கொரோனா தடுப்புப் பணிகள் வேகம் பிடித்துள்ளன. 

கடையில் கருணாகரன் ஐ.ஏ.எஸ் ஆய்வு
கடையில் கருணாகரன் ஐ.ஏ.எஸ் ஆய்வு

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அம்மா உணவகங்கள், பொது விநியோகக் கடைகள், தற்காலிக காய்கறிச் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிப்பதை வலியுறுத்தி ஆய்வு செய்து வருகிறார்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 55 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 42 வயது இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார். 

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் சென்ற ஆம்புலன்ஸ்
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் சென்ற ஆம்புலன்ஸ்

54 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 13 பேர் குணமடைந்தனர். மார்ச் 30-ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தனர். அவர்களுக்குக் கடைசியாக எடுக்கப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் அனைவரும் குணமடைந்தது தெரியவந்தது.

மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 9 பேர், களக்காடு பகுதியைச்  சேர்ந்த இருவர், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவர் என 13 பேரும் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 

குணம் அடைந்த நோயாளிகள்
குணம் அடைந்த நோயாளிகள்

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவருக்கும் கைதட்டி நன்றி தெரிவித்தனர். மருத்துவப் பணியாளர்களும் அவர்களை கரவோசையுடன் வழியனுப்பினார்கள். சிகிச்சைக்குப் பின்னர் தங்கள் உறவினர்கள் நலம் பெற்றதை அறிந்த உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 13 பேரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் 14 நாள்களுக்குத் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களும் அதைக் கடைப்பிடிப்பதாக உறுதியளித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு