Published:Updated:

காமமும் கற்று மற 12 - பாலியல் உணர்வு சுழற்சி

காமமும் கற்று மற
காமமும் கற்று மற

கூடற்கலை - 12

`பாலில் பழம்போலே இந்தப் பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்தத் தோகை கெஞ்சுவாள்
மறந்து நான் மயங்கவா இதற்கு நான் இணங்கவா...’

  - கவியரசர் கண்ணதாசன்

காமமும் கற்று மற 12 - பாலியல் உணர்வு சுழற்சி

``டாக்டர்... இவர் என் ஆசைகளைப் புரிந்துகொள்வதே இல்லை. நான் விரும்பும் நேரத்தில் நெருங்கினால் ஒத்துழைப்பு தருவதில்லை. ஆனால், அவர் ஆசைப்படும் நேரத்தில், நான் எந்த நிலையிலிருந்தாலும் அவருக்கு இணங்கியே ஆக வேண்டும். இது என்ன நியாயம்?’’ வேதனையைக் கொட்டித் தீர்த்தார் அந்தப் பெண்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட, ஒரே வயதுடைய தம்பதி அவர்கள். அந்தப் பெண், தன் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும், அதற்கு கணவரைச் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்திருந்தார்.

அவருடைய கணவருக்கான சிகிச்சை, கவுன்சலிங்கிலேயே முடிந்து போனது. இப்போது, ரொமான்ட்டிக்கான தம்பதி அவர்கள்.

முன்பெல்லாம், பெண்களோ ஆண்களோ, பெண்களின் பாலியல் உறவுகள், உணர்வுகள் பற்றிப் பொதுவெளியில் பேச மாட்டார்கள். சொல்லப் போனால், `பெண்களுக்கும் பாலுறவுக்கும் தொடர்பேயில்லை’ என்பதுபோல நடந்துகொள்வார்கள். இன்று நிலைமை மாறியிருக்கிறது. பெண்களின் பாலியல் உணர்வுகளும் தேவைகளும் பொதுவெளியில் பேசப்படுகின்றன; சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் அதிகமாகப் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. அனைத்து வயதுப் பெண்களும் தங்களைப் பற்றியும், தங்கள் உடலைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாலியல் பண்பு அல்லது பாலுணர்வு என்றால் என்ன?


`செக்ஸுவாலிட்டி’ என்று சொல்லப்படும் பாலுணர்வு என்பது பாலியல் செயல்பாடுகள் மற்றும் உடலுறவு சார்ந்தது மட்டுமல்ல. மாறாக, பெண்களைப் பற்றிய உணர்வுகள், பிறருடன் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்கிற பார்வை, பாலுறவில் அவர்களுடைய தேவைகள் என்னென்ன என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. ஒரு பெண்ணுக்கு அவருடைய இணை குறித்தும், உறவு குறித்தும் இருக்கும் உணர்வுகள் பாலியல்ரீதியாக திருப்தியடைவதில் முக்கியப் பங்குவகிக்கின்றன. பாலுறவில் பெண்களின் நாட்டமும், பாலுணர்வுத் தூண்டுதலும் மாறுபட்டவை.

பருவமெய்தும் காலகட்டத்தில், சராசரியாக 14 வயது முதல் திருமணத்துக்கு முந்தைய சுமார் 21 வயதுவரையிலும் பெண்களுக்கு பாலுணர்வு அதிகமிருக்கும். அது குறித்த பயம், பாலுறவு குறித்த போதிய அறிவு இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால், அதைத் தன்னிச்சையாக அடக்கிவைத்திருப்பார்கள். திருமணமான புதிதில் அவர்களின் பாலியல் உணர்வுகள் அதிகம் தூண்டப்படும். பின்னர் குழந்தை, குடும்பம் என்று ஆன பிறகு, அவர்களின் சூழல் அவர்களை, பாலுறவுப் பக்கம் அவ்வளவு ஆர்வமாகத் திருப்பாது. அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் கணவர் விரும்பினால், அவரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே பெண்கள் தாம்பத்யத்துக்கு உடன்படுவார்கள். நவீன வாழ்க்கை முறை, அவர்களது சூழல், சமுதாயப் பழக்க வழக்கங்களைப் பொறுத்து இந்த வரையறை மாறுபடும். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், சூழல்கள், வயது, ஹார்மோன் அளவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவை பாலியல் வாழ்க்கையில் பங்குவகிக்கின்றன.

அநேகமாக 30 முதல் 40 வயதுகளில் அதிகபட்சமாக அவர்கள் இன்பத்தைத் துய்ப்பவர்களாக இருப்பார்கள். இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் திருப்திகரமான பாலுறவில் ஒரு பெண்ணால் ஈடுபட முடியும். ஒரு பெண் பாலியல் உறவில் திருப்தியடைவதில் எந்தத் தடங்கல் வந்தாலும், அது ஒரு பாலியல் பிரச்னையாகக் கருதப்படும். அதை `பெண்களின் பாலியல் செயலிழப்பு’ (Female Sexual Dysfunction) என்போம்.

காமமும் கற்று மற 12 - பாலியல் உணர்வு சுழற்சி

பாலியல் உணர்வு சுழற்சி
(Sexual Response Cycle)


ஏன் பாலியல் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் பாலியல் உணர்வு சுழற்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சுழற்சி ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்று என்றாலும், வெவ்வேறு மாற்றங்கள், வெவ்வேறு வேகத்தில் நடக்கின்றன.

ஆசை (மனம் எழுச்சி பெறும் நிலை):

இது, பாலியல் உறவுக்குத் தேவையான `சார்ஜ்.’ பாலியல் செயல்பாடுகள் அதிகரிக்கும்போது, ஆசையும் அதிகரிக்கிறது. இதைத்தான் `மூட்’ (Mood) என்போம். இந்த நேரத்தில், இதயத்துடிப்பு அதிகரிப்பது, மூச்சிரைப்பது, சருமம் சிவந்து போதல் எனச் சில மாற்றங்கள் ஏற்படும்.

தூண்டுதல் (சமநிலையான நிலை): 

அதாவது தொடுதல், காட்சி, ஓசை, சுவை, மணம் அல்லது கற்பனை பெண்ணின் உடலில் மேலும் மாற்றங்களைக் கொண்டு வரும். பெண்ணுறுப்பில் சில திரவங்கள் சுரக்க ஆரம்பித்து, பெண்ணுறுப்பு, லேபியா மற்றும் வல்வா ஆகியவற்றை ஈரப்படுத்துகின்றன. பாலுறவுக்குத் தேவையான உயவை இது ஏற்படுத்தும். பெண்ணுறுப்பு விரிவாகி, க்ளிட்டோரிஸ் பெரிதாகும். மார்பகக் காம்புகள் கடினமாகவும் கூர்மையாகவும் மாறும்.

உச்சநிலை (கடைசிநிலை): 

இந்தநிலையில், பெண்ணுறுப்பைச் சுற்றியிருக்கும் தசைகள் குறிப்பிட்ட இடைவெளியில் சுருங்கி, விரியும். இது ஒருவித இன்பான உணர்ச்சியைக் கொடுக்கும். இதுதான் பாலுறவில் கடைசிநிலை.

ரெசொல்யூஷன் (Resolution): 

பாலுறுப்பு, க்ளிட்டோரிஸ் மற்ற பாகங்கள் அனைத்தும் சாதாரணநிலைக்குத் திரும்பும். அநேகமாக திருப்தியாகவும், அமைதியாகவும், தூக்கம் வருவதுபோலவும் உணர்வார்கள். ஒவ்வொரு பெண்ணும், தனக்கான வேகத்தில் இவற்றில் ஒவ்வொரு நிலையையும் கடக்கிறார். இந்த நிலைகளில் ஒன்றையோ, சிலவற்றையோ அடையாமல் போனாலோ, அடைவதில் பிரச்னை ஏற்பட்டாலோ, முழுமையாக ஏற்படாமல் இருந்தாலோ அது பாலியல் பிரச்னையாகக் கருதப்படும்.

- கற்போம்...

அடுத்த கட்டுரைக்கு