Published:Updated:

சித்த மருத்துவத்தை வளர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன? - வினா எழுப்பிய நீதிபதிகள்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆயுர்வேத மருத்துவத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் சித்த மருத்துவத்துக்குக் கொடுப்பதில்லை?

சித்த மருத்துவத்தை வளர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன? - வினா எழுப்பிய நீதிபதிகள்!
சித்த மருத்துவத்தை வளர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன? - வினா எழுப்பிய நீதிபதிகள்!

டல்நலக் கோளாறுகளுக்கு மருந்துகள் என்ற காலம்போய் இன்றைய நவீன உலகில், மருத்துவ வியாபாரத்துக்காகவே புதிது புதிதாக நோய்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழர்களின் பாரம்பர்ய மற்றும் ஆதி மருத்துவ முறையான சித்த மருத்துவம் கேட்பாரற்ற நிலையிலேயே கிடக்கிறது. 

இந்த நிலையில் சித்த மருத்துவத்தின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கக் கோரி, முருகேசன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்த தீர்ப்பில் மத்திய - மாநில அரசுகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

'தமிழர்களின் பாரம்பர்ய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவது ஏன்?', 'ஆயுர்வேத மருத்துவத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கக்கூடிய முக்கியத்துவம் சித்த மருத்துவத்துக்கு ஏன் கொடுக்கப்படுவதில்லை?', 'சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சி இல்லாவிட்டால் அந்த மருத்துவமுறை பற்றிய அறிவோ, வளர்ச்சியோ சாத்தியமில்லை எனும்போது அரசு ஏன் அதற்குப் போதிய நிதி ஒதுக்குவதில்லை?' என்பன உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

"பெரும் முயற்சிக்குப் பிறகே, சென்னையை அடுத்த தாம்பரத்தில் மத்திய அரசு, தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி முறையான பராமரிப்பின்றி இருப்பது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற நிலையை மாற்றுவதுடன் சித்த மருத்துவத்துறை வளர்ச்சிக்குப் போதுமான நிதியை மத்திய - மாநில அரசுகள்  ஒதுக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது" என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் ஆயுஷ் துறையின் செயலாளரை, நீதிமன்றமே பிரதிவாதியாகச் சேர்த்ததுடன், சித்த மருத்துவம் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு மத்திய - மாநில அரசுகள் விரைந்து பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 

  • கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் சித்த மருத்துவத்துறை வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளன?
  • எந்தெந்த இடங்களில் சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன?
  • சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்குச் சரியாக வழிகாட்டுவதற்குத் தேர்ந்த சித்த மருத்துவ அறிஞர்கள் தமிழகத்தில் உள்ளார்களா?
  • சித்த மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் இருக்கின்றனவா, தமிழகத்தில் சித்த மருத்துவப் பட்டதாரிகள் எத்தனை பேர் உள்ளனர்?
  • சித்த மருத்துவ வளர்ச்சிக்கு மாநில அரசின் செயல் திட்டங்கள் என்னென்ன?
  • சித்த மருத்துவத்தின் அடிப்படையான மூலிகைச் செடிகளை அடையாளம் காண, மத்திய - மாநில அரசுகள் என்னென்ன முயற்சிகள் செய்துள்ளன?
  • சித்த மருத்துவத்துக்குத் தேவைப்படும் மூலிகை வகைகளைப் பாதுகாக்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் எவை?
  • கடந்த 5 ஆண்டுகளில் சித்த மருத்துவ வளர்ச்சிக்காக மத்திய - மாநில அரசுகள் எவ்வளவு நிதியைச் செலவிட்டுள்ளன? என்பதே உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள கேள்விகள்...

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மற்றும் தொல்லியல் பொருள்கள் புதையுண்டுப்போனதைப் போன்று, பாரம்பர்ய சித்த மருத்துவமும் விரைவில் மண்ணுக்குள் புதையுண்டுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பர்யம் மீண்டும் ஒருமுறை மறக்கடிக்கப்படலாம். ஆனால், உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு, அதுபோன்ற நடவடிக்கைகளுக்கு வேகத்தடையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும், சித்த மருத்துவ துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அவர்களின் நம்பிக்கை நிலைக்குமா அல்லது பொய்த்துப்போகுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.