Published:Updated:

`7 மணி நேரம் பப்ஜி விளையாடுவான்!’ - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்

கலிலுல்லா.ச

காலையில் நியூஸ் பேப்பர் போடும் பார்ட் டைம் வேலை இருப்பதால் மட்டுமே அவன் கேமை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவான்.

PUBG Game
PUBG Game

இரவில் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இளைஞர்கள் யாராவது தனியாக அமர்ந்து, ஹெட்போன் மாட்டிக்கொண்டு செல்போன் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அவர்களுக்கு அருகில் செல்வது ஆபத்தானது. ஏனெனில் அவர்கள் எந்த நேரத்திலும் உற்சாகமடையலாம் அல்லது கவலை கொள்ளலாம். ஒரே காரணம் பப்ஜி விளையாட்டு. அதன்மோகம் இன்னும் குறையவில்லை என்பதற்கு உதாரணமாகத்தான் ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Vikatan
Online game
Online game

19 வயதான வனபர்தி, ஹைதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு கை மற்றும் கால் இயங்கவில்லை என்று கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்தார் அவரது தாயார்.

வனபர்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள், `மூளையில் செல்லும் ரத்தம் தடைபட்டதால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது’ என்றும் `இளைஞரின் முழுக் கவனமும் வீடியோ கேமில் இருந்ததால், முறையான உணவையோ, தண்ணீரையோ அவர் எடுத்துக்கொள்ளவில்லை. தூக்கமும் இல்லை. இவையெல்லாம் சேர்ந்து மூளைக்கு ரத்தம் செல்வதில் தடையை ஏற்படுத்திவிட்டது' எனத் தெரிவித்துள்ளனர்.

`நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் வரை மொபைலில் கேம் விளையாடியுள்ளார். இதனால் 4 கிலோ அளவுக்கு உடல் எடை குறைந்துவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்துவரப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, அவருக்கு தலைவலி மற்றும் வாந்தி, உடல் அசதி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன’ என்கின்றனர் அவரது உறவினர்கள்.

Pubg
Pubg
Vikatan

இதுதொடர்பாக இளைஞரின் தாயார் பேசுகையில், ``இரவு 9 மணிக்கு பப்ஜி விளையாட்டை ஆடத்தொடங்கினால், அதிகாலை 4 மணிவரை விளையாடிக் கொண்டிருப்பான். காலையில் நியூஸ்பேப்பர் போடுகின்ற பகுதிநேர வேலை இருப்பதால் மட்டுமே கேமை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவான். கல்லூரியில் இருக்கும்போதுகூட, நேரம் கிடைத்தால் லாக் ஆன் செய்து விளையாடத் தொடங்கிவிடுவான். எங்கள் கிராமத்தில் பொழுதுசாய்ந்ததும் அனைவரும் உறங்கிவிடுவார்கள். ஆனால், வனபர்தி மட்டும் போர்வைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பப்ஜி விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பான். அவனுக்கு உணவு மீதான ஆர்வமும் முழுமையாகக் குறைந்துவிட்டது. லீவு நாள்களில் எல்லாம் ஒருநாள் முழுவதும் வீடியோ கேம் ஆடிக் கொண்டிருப்பான்” என்று வேதனையைத் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் ஏற்கெனவே பப்ஜி விளையாட்டுக்குத் தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.