Published:Updated:

சொந்த ஊருக்குச் சென்றுவந்தவர்களால் தனிமைப்படுத்தப்பட்ட 2 கிராமங்கள்.. பெரம்பலூர் அதிர்ச்சி

பெரம்பலூர்
பெரம்பலூர்

நகராட்சிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்கும் தொடர்ந்து சளி, காய்ச்சல் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் வேலை செய்த இரு வடமாநிலத்தவர்களால் இரண்டு கிராமங்களை அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கும் சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் எம்.ஆர்.எப் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் வட மாநிலத்தவர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள நாரணமங்கலம், விஜயகோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வீடு மற்றும் அறைகள் வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர். இந்த நிலையில், இவர்களில் பலர் சமீபத்தில் சொந்த மாநிலங்களுக்குச் சென்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. அத்தோடு அதில் இருவருக்குத் தொண்டை வலி, கடுமையான காய்ச்சல் அறிகுறி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களை அதிகாரிகள் பரிசோதித்ததோடு இருவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அத்தோடு அவருடன் பழகியவர்களையும் அவர் எங்கெங்கு போய்வந்தார் என்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு அவர்களைத் தனி இடத்தில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த இரண்டு கிராமங்களில் உள்ள வீடுகளையும் மற்றும் அதைச் சுற்றியுள்ளவர்கள் என அனைவரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வி.களத்தூர் காவல்நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
வி.களத்தூர் காவல்நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``வி.களத்தூரில் காவல் நிலையத்தில் ஒரு காவலருக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் அந்தப் பகுதியே லாக் செய்ததோடு ஐந்து நாள்கள் காவல்நிலையத்தை மூடினார்கள். பின்பு ஐந்து நாள்கள் மூன்று வேலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்பொழுதுதான் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அதேபோல்தான் துறை மங்கலம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று வரையிலும் அப்பகுதி லாக்டெளனில் இருக்கிறது.

இந்த நிலையில் நாரணமங்களம், விஜய கோபாலபுரத்தில் வடமாநிலத்தவர்களால் இரு கிராமத்தைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் பகுதியை லாக்டெளன் செய்திருக்கிறோம். அதோடு, இந்தப் பகுதிகளை 14 நாள்கள் கண்காணிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, இப்பகுதி முழுவதும் கிருமிநாசினியைத் தெளித்துவருகிறோம்.

கொரானோ தடுப்பு பணி
கொரானோ தடுப்பு பணி
உ.பாண்டி

தொடர்ந்து, நகராட்சிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்கும் தொடர்ந்து சளி, காய்ச்சல் உள்ளதா வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்திலிருந்து திரும்பி வந்துள்ளனரா என்பது குறித்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரையிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் சளி மற்றும் ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆக இருந்தது. நேற்று ஒருவர் குணமாகி வீட்டுக்குச் சென்றுவிட்டார். தற்போது பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு