Published:Updated:

கொரோனா தடுப்பூசிக்குப் பின் பலியான 23 முதியவர்கள்... நார்வே அரசு சொல்வது என்ன?

தடுப்பூசி
தடுப்பூசி

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல் பலவீனமாக இருக்கும் என்பதால் இந்தத் தடுப்பூசி அவர்களது உடலில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டன. பைசர் – பயோஎன்டெக் (Pfizer and BioNTech) ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசி நார்வே நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதைத் தவிர மாடர்னா (Moderna) என்கிற அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியும் இங்கே பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஆனால், கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாள்களிலேயே நார்வே நாட்டில் 23 முதியவர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பலரது உடல்நிலையும் அங்கே பாதிக்கப்பட்டுள்ளது.

Corona Vaccine
Corona Vaccine
AP Illustration/Peter Hamlin

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல் பலவீனமாக இருக்கும் என்பதால் இந்தத் தடுப்பூசி அவர்களது உடலில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேற்சொன்ன உயிரிழப்புகளுக்கும் பைசர்–பயோஎன்டெக் தடுப்பூசிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்த 23 பேரில் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் பைசர் நிறுவனம் ஐரோப்பா முழுமைக்குமான தனது தடுப்பூசி விநியோகத்தைத் தற்காலிகமாகக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.

'ஏற்கெனவே குறுகிய வாழ்நாளை மட்டுமே கொண்டிருப்பதால் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதால் பெரிதாக நற்பலன்கள் விளையும் வாய்ப்பு குறைவு. எனவே, இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்' என்று நார்வே நாட்டின் பொது சுகாதார நிறுவனம் (The Norwegian Institute of Public Health) தெரிவித்துள்ளது.

பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை டிசம்பர் மாத இறுதி முதல் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அந்நாட்டில் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், வயதானவர்கள் 23 பேர் உயிரிழந்ததை வைத்துப் பார்க்கும்போது யாருக்கெல்லாம் தடுப்பூசி போட வேண்டும் என்பதைக் கவனத்துடன் மருத்துவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் நார்வே நாட்டின் பொது சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

An example of the Pfizer COVID-19 vaccine vial
An example of the Pfizer COVID-19 vaccine vial
AP Photo/Andrew Harnik, Pool

நார்வே நாட்டின் மருந்துகள் ஏஜென்சி (Norwegian Medicines Agency) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் 21 பெண்கள் மற்றும் 8 ஆண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. உயிரிழந்த வயதானவர்களைத் தவிர 9 பேருக்கு மிகத் தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றும், 7 பேருக்கு சற்று தீவிரம் குறைந்த பக்க விளைவுகள் தென்பட்டன என்றும் அந்த ஏஜென்சி கூறுகிறது. இவை தவிர 9 நோயாளிகளுக்கு ஒவ்வாமை, கடுமையான அசௌகர்ய உணர்வு, தீவிரமான காய்ச்சல் போன்றவையும் தென்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு ஊசி போட்ட இடத்தில் கடுமையான வலியும் ஏற்பட்டிருக்கிறது என்று அந்நாட்டின் மருந்துகள் ஏஜென்சி தகவல் வெளியிட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு