Published:Updated:

4 மணிநேர அறுவைசிகிச்சை; 4.5 கிலோ புற்றுநோய்க் கட்டி அகற்றம்! - புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள் சாதனை

Doctors team
Doctors team

புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவரின் இடுப்புப் பகுதியில் இருந்த 4.5 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். 

புதுக்கோட்டை அருகே பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்தவர் தேவி(55). வயிற்று வலியால் அவதியடைந்து வந்த தேவி, வயிறு வலி, வயிறு வீக்கம் காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் குழு ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து பார்த்ததில், இடுப்புப் பகுதியில் கிலோ கணக்கில் ஒரு பெரிய கட்டி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.

Doctors team
Doctors team

அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் என்று மகப்பேறு மருத்துவத்துறை மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து, அந்தத் துறையின் தலைமை மருத்துவர் அமுதா, புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு செப்டம்பர் 9ம் தேதி அறுவைசிகிச்சை மேற்கொண்டது. அவரது, இடுப்புப் பகுதியில் இருந்த 4.5 கிலோ எடையுள்ள அந்தக் கட்டியை அகற்றினர். தற்போது, அந்தப் பெண் நலமுடன் உள்ளார்.

இதுகுறித்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ``அந்தப் பெண்ணின் இடுப்புப் பகுதியிலிருந்து அகற்றியுள்ள கட்டி `ரெட்ரோ பெரிடோனியல் டியூமர்' என்ற புற்றுநோய்க் கட்டியாகும். இது நரம்பிலிருந்து வந்த புற்றுநோய்க்கட்டி என்று திசுப் பரிசோதனையில் தெரியவந்தது. குறிப்பாக, கால்பகுதியிலிருந்து இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெரிய ரத்தக் குழாயான இன்பெரியர் வென காவா உடன் இந்தக் கட்டி ஒட்டியிருந்தது.

Doctors team
Doctors team

கட்டியை அகற்றும் போது, ரத்தக் குழாய்களிலிருந்து ரத்தம் கசிய வாய்ப்பு இருக்கும் என்பதால், ரத்தம் கசிவதைத் தடுத்து நிறுத்துவதற்காக சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்டன. 4 மணி நேரத் தொடர் சிகிச்சையில் ரத்தநாளப் பகுதி சரி செய்யப்பட்டது. கட்டியும் அகற்றப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றால் சுமார் ரூ.3 லட்சம் வரையிலும் செலவாகும். ஆனால், அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு