Published:Updated:

5 மாத குழந்தை டீராவின் சிகிச்சைக்குக் கிடைத்த ரூ.17 கோடி... ஒரு லட்சம் பேர் அளித்த நிதியுதவி!

டீரா
டீரா ( instagram.com/teera_fights_sma/ )

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த 5 மாத குழந்தையை காப்பாற்ற இந்தியா உட்பட உலகம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் 17 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளனர்.

மும்பையில் ஐடி கம்பெனியில் பணியாற்றும் மிஹிர் காமத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. டீரா என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை பிறந்து சில மாதங்களில் குழந்தையின் உடலில் ஏதோ மிகப்பெரிய கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது குழந்தையால் தலையைத் தூக்க முடியவில்லை. குடித்த பால் முழுவதையும் கக்கிக்கொண்டிருந்தது. அதோடு குழந்தையால் உட்காரவும் முடியவில்லை. உடனே குழந்தையை டாக்டர்களிடம் காண்பித்த போது குழந்தைக்கு மிகவும் அபூர்வமான ஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி எனப்படும் ஒரு வகை நரம்பியல் கோளாறு நோய் இருப்பது தெரிய வந்தது.

பெற்றோருடன் டீரா
பெற்றோருடன் டீரா
instagram.com/teera_fights_sma/

இந்த நோயை குணப்படுத்த இந்தியாவில் மருந்து இல்லை. ஒரு மருந்து மட்டும்தான் இதற்கு இருக்கிறது. அதுவும் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது. சிகிச்சைக்கு மட்டும் 16 கோடி செலவாகும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். மிஹிர் தம்பதியிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை.

வைரலாகும் 'டீரா காமத்' உணர்ச்சிப் போராட்டம்... மருந்தின் விலை 16 கோடி... உதவப்போவது யார்?!

உடனே மருத்துவ சிகிச்சைக்கு ஆன்லைனில் நிதி திரட்டும் இம்பேக்ட் குரு மற்றும் கோ-ஃபண்ட்மி ஆகிய ஆன்லைன் கம்பெனிகளின் உதவியை நாடினர். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து நல்லுல்லம் படைத்தவர்கள் தாராளமாக நிதியுதவி செய்தனர். சிகிச்சைக்குத் தேவையான 16 கோடிக்கு 1 கோடி அதிகமாக 17 கோடி ரூபாய் அளவுக்குப் போராடி திரட்டிவிட்டனர். இந்த நிதியை உலகம் முழுவதுமிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வெறும் 90 நாள்களில் நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஆனால் இதில் மேலுமொரு சிக்கல் இருந்தது.

டீரா
டீரா
instagram.com/teera_fights_sma/

அமெரிக்காவில் இருந்து மருந்தை இறக்குமதி செய்வதாக இருந்தால் அதற்கு 6 கோடி ரூபாய் இறக்குமதி வரி கட்டவேண்டும். உடனே குழந்தையின் பெற்றோர் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உதவியை நாடினர். அவர் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதால் ஓரிரு நாட்களில் அம்மருந்தை இறக்குமதி செய்ய பிரதமர் அலுவலகம் கட்டண சலுகை வழங்கியது. இப்போது இம்மருந்து வரும் 24 அல்லது 25ம் தேதி இந்தியா வந்து சேர இருக்கிறது. ஒரு முறை ஊசி போடுவதற்கான மருந்து மட்டும் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இம்மருந்தை செலுத்திய பிறகு தீராவிற்கு வழக்கமாக செய்யப்படும் பிசியோதெரபி சிகிச்சையளிக்கப்படும். அதன் பிறகுதான் தீரா எழுந்து உட்காருவாள். அந்த நன்னாளை அவளுக்கு நிதியுதவி செய்த அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு