Published:Updated:

ஆன்லைன் டெலிவரியில் உணவு ஆர்டர் செய்வோர் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

Representational Image
Representational Image

ஆன்லைனில் உணவு மற்றும் பிற பொருள்களை ஆர்டர் செய்து வாங்கும்போது பின்பற்ற வேண்டிய ஐந்து ஆலோசனைகளை வழங்குகிறார் பொது மருத்துவர் அஸ்வின் கருப்பன்.

உலகையே ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் சில தினங்களுக்கு முன் பீட்ஸா டெலிவரி செய்த நபருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மருத்துவர் அஸ்வின் கருப்பன்
மருத்துவர் அஸ்வின் கருப்பன்

இதையடுத்து அவரது டெலிவரியைப் பெற்ற 72 நபர்களும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தவிர்க்க முடியாத நிலையில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கும் பலருக்கும் இந்தச் செய்தி அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்லைனில் உணவு மற்றும் பிற பொருள்களை ஆர்டர் செய்து வாங்கும்போது பின்பற்ற வேண்டிய ஐந்து ஆலோசனைகளை வழங்குகிறார் பொது மருத்துவர் அஸ்வின் கருப்பன்.

துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

1 தொடர்பில்லாத டெலிவரி (No contact delivery)

Representational Image
Representational Image

பொதுவாகவே இந்த அசாதாரண சூழ்நிலையில் பார்சல்களையும், உணவுப் பொருள்களையும் டெலிவரி செய்ய வரும் நபரை வீட்டிற்கு வெளியிலேயே வைத்துவிட்டுச் செல்லுமாறு கூறலாம். கொரோனா தொற்றானது தொடுதலின் மூலமே அதிகம் பரவுவதால் இந்த நடவடிக்கையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

2. மீண்டும் சூடுபடுத்தி உண்ணவும்

கொரோனா காலத்தில் உணவுப் பொருள்களை வெளியிலிருந்து வாங்குவதைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வாங்க நேர்ந்தாலும் வாங்கிய உணவை சுத்தமான வேறு பாத்திரத்தில் மாற்றி, மீண்டும் சூடுபடுத்தி உண்ணலாம்.

Representational Image
Representational Image

உணவுப் பொருள்களை மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றிய பின்னர் இரண்டு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நாள்களில் சாலட் போன்ற வேக வைக்காத உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் வாங்குவதைத் தவிர்க்கவும்.

3 இணையம் மூலம் பணம் செலுத்துங்கள்

Representational Image
Representational Image

உணவுப் பொருள்களை வாங்கும்போது இணையம் மூலம் பணம் செலுத்துதல் சிறந்தது. பணம் பலரின் கைகளுக்கும் சென்று வருவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கலாம். ஒரு வேளை நேரடியாகப் பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு சரியான தொகையைக் கொடுக்கலாம். இதன் மூலம் சில்லறைப் பணத்தைத் திரும்பப் பெறுவதையும் தவிர்க்க முடியும்.

அண்டை நாடு முதல் அமெரிக்க வரை.. 55 நாடுகளுக்கு HCQ மாத்திரைகள் சப்ளை செய்யும் ஆபத்பாந்தவன் இந்தியா!

4. கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தும் போது கவனம்

உணவுப் பொருள்கள் மற்றும் பார்சல்களை வாங்கும்போது கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்த நேர்ந்தால் உங்கள் கார்டின் பின்னை பொத்தான்கள் மூலம் பிஓஎஸ்ஸில் (Point of sales machine)அழுத்த நேரிடும்.

அந்த பிஓஎஸ் சாதனத்தை எல்லாரும் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இந்தக் கொரோனா வைரஸ் தொற்று தொட்டவுடனயே உங்களைப் பாதிக்காது. அதன் பின் உங்கள் கைகளால் நீங்கள் முகம், மூக்கு, கண், வாய் ஆகிய பகுதிகளைத் தொடும் போதுதான் பாதிக்கும். இதனால் கார்டை உபயோகித்த உடனேயே கைகளை சானிட்டைஸர் அல்லது சோப், தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டால் பிரச்னை இல்லை.

5. பார்சல்களுக்கும் கிருமிநாசினி

உணவுப் பொருள்கள் இல்லாத இதர பார்சலைப் பெற்றவுடன் பார்சலில் இருக்கும் பொருள்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யலாம். பார்சல்கள் மூலம் கொரோனா தொற்று பரவுவதாக இன்னும் உலகளவில் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். தனியாக இருக்கும் வயதானவர்கள் பார்சல்களைப் பெறும் போது கூடுதல் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் .

அடுத்த கட்டுரைக்கு