Published:Updated:

`மதுப் பழக்கத்தை மறக்க பின்பற்ற வேண்டிய 5 உத்திகள்!’ – வழிகாட்டும் மனநல மருத்துவர் சிவசைலம்

மதுவால் மயக்கம்
மதுவால் மயக்கம்

”கொரோனா தடுப்பு நடவடக்கையான ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மதுப்பிரியர்கள், மதுவுக்கு அடிமையானவர்கள்... மதுப்பழக்கத்திலிருந்து தன்னை விடுவிடுத்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பாகக் கருதி கைவிடலாம்” என தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசைலம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் மூடப்பட்டுள்ளதால், மது அருந்துபவர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், மதுபாட்டில்களைப் பதுக்கி பல மடங்கு விலை உயர்த்தி கள்ளச்சந்தையில் விற்பனைசெய்தும் வருகிறார்கள்.

மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடை
மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடை

ரூ.125 மதிப்புள்ள மதுபாட்டில், ஊரடங்கு அறிவிக்கபட்ட நாள்களில் ரூ.300 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதும், மது தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, அதே பாட்டிலை ரூ.600 முதல் 750 வரை 5 மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்துவருகிறார்கள். மதுவுக்கு அடிமையானவர்கள், விலை உயர்வைப் பற்றி யோசிக்கமல் கடனுக்கும், வட்டிக்கும் பணம் வாங்கி குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் கள்ளச்சாரயம், தின்னர், ஷேவிங் லோஷன், வார்னிஷ் போன்ற மாற்று போதைகளைப் பயன்படுத்தி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துவருகின்றன. இந்நிலையில், “தினமும் 2 மணி நேரமாவது டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்” என சென்னையைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடிசெய்தது நீதிமன்றம். இது, மது பிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

டாஸ்மாக் கடை கொள்ளை
டாஸ்மாக் கடை கொள்ளை

இதற்கிடையில், பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் சுவர்கள் துளையிடப்பட்டு, மதுபாட்டில்கள் திருடப்படும் சம்பவங்களும் நடந்துவருகின்றன. ஆனால், இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மதுப்பிரியர்கள், மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப்பழக்கத்திலிருந்து தன்னை விடுவிடுத்துக்கொள்ள கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி கைவிடலாம்” என்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசைலம்.

இதுகுறித்து மனநல மருத்துவர் சிவசைலத்திடம் பேசினோம், “தற்போதைய கொரோனா தொற்று பேரிடரால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், நமது இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். வீட்டில் முடங்கிக் கிடக்கின்றோம். இதனால், பல்வேறு வகையான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம். தற்போதைய ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த தற்காலிக அடைப்பினால், தினமும் மது குடித்துவந்தவர்கள், குடிப் பிரச்னையிலிருந்து விடுபட வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம். மதுகுடிப்பவர்களை குறைவாகக் குடிப்பவர்கள், மிதமாகக் குடிப்பவர்கள், அதிமாகக் குடிப்பவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

சிவசைலம் - மனநல மருத்துவர்
சிவசைலம் - மனநல மருத்துவர்

குறைவாகக் குடிப்பவர்கள், வாரம் ஒருமுறையோ மாதம் ஒருமுறையோ குடிப்பார்கள். மிதமாகக் குடிப்பவர்கள், வாரத்தில் இரண்டு மூன்று நாள்களோ, மாதத்தில் 10 நாள்கள் வரையோ குடிப்பார்கள். அதிகமாகக் குடிப்பவர்கள், தினமும் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதில், தினமும் குடிப்பவர்களே அதிமாக பாதிக்கப்படுவார்கள். தினமும் குடித்துவிட்டு குடிக்க முடியாமல் தவிப்போருக்கு உடலில் அதிகமான நரம்பியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தமிழகத்தில், சுமார் 70 சதவிகிதத்தினர் சாதாரணமாகக் குறைந்த அளவு மது குடிப்பவர்கள்தான். இதில், பெரும்பாலானவர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சிலருக்கு கைகால் நடுக்கம், பசியின்மை, தலைவலி உள்ளிட்டவை ஏற்படலாம். மீதமுள்ள 30 சதவிகிதத்தினர் அதிகமாகக் குடிப்பவர்கள். அவர்களுக்குதான் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மது கிடைக்காத விரக்தியில் அடுத்தவர்களைத் தாக்கவோ, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளவோ செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள், கண்டிப்பாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மதுப்பிரியர்கள், ஓர் ஆண்டில் மதுவுக்காக தாங்கள் செலவுசெய்த தொகையை கூட்டிப்பார்த்தால் வருவாய் இழப்பின் மதிப்பை உணர்வார்கள்.

வேண்டாம் மது
வேண்டாம் மது

அடிமைப்பட்ட இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வந்துவிடலாம் என்று முதலில் நம்பினாலே, நேர்மையான எண்ணங்கள் உருவாகும். தினமும் குடிப்பதால் குடும்பத்தில் சண்டை, பொருளாதார பிரச்னைகள், சமூகத்தில் மதிப்பு குறைதல், உடலுறுப்புகள் பாதிப்பு ஆகியவை ஏற்படும். கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாள்கள் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டவர்கள், அதை அப்படியே தொடர்ந்து கடைப்பிடிக்கும்போது, தானாக புத்துணர்வு ஏற்பட்டுவிடும்.

மதுப்பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைப்பவர்கள், 5 வகை உத்திகளைக் கடைப்பிடிப்பது அவசியம். முதலில், குடிப்பழக்கத்தைக் கைவிட மனத்தை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, குடிக்கும் சிந்தனையை மறக்கும் விதமாக, புத்தகம் வாசித்தல், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுதல் போன்று, சிந்தனைகளை திசைதிருப்ப வேண்டும். மூன்றாவதாக, நீண்டநேரம் தூக்கம் தேவை. நல்ல தூக்கம்தான் மன அமைதியைத் தரும். நான்காவதாக, நம் மனத்தை ஆக்கபூர்வமான வழியில் செலுத்த சின்னச்சின்ன உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.

மதுப் பழக்கம்
மதுப் பழக்கம்

20 முறை மாடிப்படி ஏறி இறங்கலாம். இதனால், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மனதிற்கும் உடலுக்கும் மிக நல்லது. தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள்தான் அதிகம் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, ஐந்தாவதாக தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை சிந்தனைகளை மறந்து தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை, அங்கீகாரம் கிடைக்காது. குடிப்பழக்கத்தைக் கைவிட்டால், குடும்பத்திலும், சமூகத்திலும் நல்ல மரியாதை கிடைக்கும். எனவே, இந்த ஊரடங்கு நாள்களை மதுவை மறக்கும் நாள்களாக நினைத்து மதுவைக் கைவிட வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு