``ஒரு தாய் நினைத்தால் விதியைக்கூட தோற்கடிக்க முடியும்" என்கிறார் 53 வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருக்கும் மந்தாகினி மன்கே. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிட்ட காலத்தில் வயது முதிர்ந்த பெண்கள் தாயாவது பற்றிய செய்திகள் அடிக்கடி வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும், இந்தப் பெண் தாயாகியிருப்பதில் மகிழ்ச்சி கலந்த ஒரு சோக உணர்வு பொதிந்திருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுக்கு தன் மகனைப் பறிகொடுத்த மந்தாகினி, மகன் இறந்த அதே நாளில் இன்னொரு மகனைப் பெற்றெடுத்திருக்கிறார். நாக்பூரைச் சேர்ந்தவர் மந்தாகினி. இவருடைய மகன் அக்ஷய் 27 வயதில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ம் தேதி கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகன் இழந்த சோகத்திலிருந்து மீள, மீண்டும் தன் மகனை உலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
அந்நேரத்தில் 52 வயதான மந்தாகினிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே மெனோபாஸ் ஆகிவிட்டது. அவரின் கணவர் வினோத் ஓய்வுபெற்ற ஆசிரியர். அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரைநோயும் உள்ளது. இதனால் இயற்கையாகக் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். நாக்பூரிலுள்ள செயற்கை கருத்தரிப்பு மருத்துவ நிபுணர் தாஜ்பூரியாவை அணுகினார் மந்தாகினி.

``கடந்த ஆண்டு மே 11-ம் தேதி மந்தாகினி இந்த முடிவை எடுத்தார். ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க எந்தவிதமான மருத்துவ சிகிச்சைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். உடல் எடை உள்ளிட்ட பிற முக்கிய உடல் நிலையும் அவருக்குச் சீராக இருந்தது. இதனால் அடுத்தநாளே அவருக்குச் சிகிச்சையைத் தொடங்கிவிட்டோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதலில் சில பரிசோதனைகளுக்குப் பிறகு, மீண்டும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கான மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டன. அந்த மாத்திரைகளை அவர் உடல் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் செயற்கை கருத்தரிப்பு முறை சிகிச்சையைத் தொடங்கலாம் என்று தீர்மானித்தோம். அதற்குள் மந்தாகினியின் மாதவிடாய் சுழற்சியும் இயல்புக்கு வந்துவிடும். இந்நிலையில் திடீரென்று மந்தாகினி ஜூலை மாதமே செயற்கை கருத்தரிப்பு முறையைத் தொடங்கலாம் என்று வலியுறுத்தினார்.

அப்போது எங்களுக்கு அதற்கான காரணம் தெரியவில்லை. மந்தாகினி கருத்தரித்த பின்னர், 2022 மார்ச் மாதம் தன்னுடைய குழந்தை ஏப்ரல் 15 அல்லது அதற்கு முன்பே பிறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போதுதான் எங்களுக்கு அதற்குப் பின்னால் இருக்கும் காரணமும் தெரிய வந்தது. தன் மகன் இறந்த அதே நாளில் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பியிருக்கிறார் மந்தாகினி.
மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையைக் கண்காணித்தோம். பிரசவத்தின்போது சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் சிசேரியன் பிரசவத்தைத்தான் பரிந்துரைத்தோம். தம்பதியின் முடிவுக்கு ஏற்ப ஏப்ரல் 14-ம் தேதி அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆச்சர்யப்படும்விதமாக, பிறந்தது ஓர் ஆண் குழந்தைதான்" என்கிறார் மருத்துவர் தாஜ்பூரியா.

மந்தாகினியின் 78 வயது தாய் இந்தக் குழந்தை அப்படியே இறந்துபோன தன் மூத்த பேரனின் சாயலிலேயே இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். நினைத்த காரியத்தை முடித்த மந்தாகினி, ``என் மகனை மறுபடியும் இந்த உலகத்துக்கு கூட்டி வந்துவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தக் குழந்தைக்கும் அக்ஷய் என்றே பெயர் வைக்கப்போகிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.