Election bannerElection banner
Published:Updated:

மும்பை: 97 வயதில் கொரோனாவை வென்று நம்பிக்கையூட்டும் முதியவர்!

தீரஜ்லால்
தீரஜ்லால்

மும்பையில் உறவினர்கள் அனைவரும் நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில் 97 வயது முதியவர் ஒருவர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கொரோனா ஏற்படுத்தும் தாக்கம் முதியவர்கள் மீது அதிகம் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா இரண்டாவது அலையில் இளம் வயதினரும் அதிக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்துவருகின்றனர். மும்பையின் தென்பகுதியில் வசிப்பவர் தீரஜ்லால் தேசாய் (97). இவர் குடும்பத்தில் கொரோனா முதல் அலையின்போது ஏழு பேர் கொரோனா வந்து குணமடைந்தனர். எனவே, இரண்டாவது கொரோனா அலையின் தொடக்கத்தில் தேசாய் குடும்பத்தினர் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர்.

தீரஜ்லால் தேசாய்
தீரஜ்லால் தேசாய்

ஆனாலும் மார்ச் மாதம் தீரஜ்லால் தேசாய்க்கு லேசான சளியும் அதைத் தொடர்ந்து காய்ச்சலும் வந்தது. இதனால் குடும்பத்தில் அனைவரும் உஷாரடைந்தனர். லேசான கொரோனா அறிகுறிகளுடன் தேசாய் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொரோனா நோயாளி என்பதால் அவருடன் தங்கியிருக்க குடும்பத்தினர் யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

நிலைமை மோசமடைந்தவுடன் தேசாய் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். குடும்பத்தில் அனைவரும் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர். தேசாயே தான் மீண்டு வருவதை நம்பவில்லை. மருத்துவமனையில் இருந்த தேசாயிடம் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அடிக்கடி போன் மூலம் பேசினர். அவருக்கு ஊக்கம் கொடுத்தனர். டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் தேசாயை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டனர். மொத்தம் 34 நாள்கள் மருத்துவமனையில் இருந்தார். அதில் 9 நாள்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். கடும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவைத் தோற்கடித்து வெற்றிகரமாக வீடு திரும்பினார்.

இது குறித்து தேசாயின் பேரன் மிதுல் தேசாய் கூறுகையில், ``என் தாத்தாவுக்கே தான் திரும்ப வருவோம் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் தொடர்ச்சியாக அவருக்கு போன் செய்து ஊக்கப்படுத்தினோம். கொரோனா பாதித்தாலும், திடமான நம்பிக்கை இருந்ததால் அதிலிருந்து குணமடைந்து வர முடியும் என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுத்திருக்கிறது. இப்போது தாத்தா வீட்டில் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறார். அவர் குணமடைந்து வீடு திரும்பியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில் தாத்தாவின் நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆனாலும் மருத்துவமனை ஊழியர்கள் நம்பிக்கை கொடுத்து தேவையான உணவைச் சரியான நேரத்துக்கு கொடுத்து கவனித்துக்கொண்டனர்" என்றார்.

கொரோனா: செய்வதறியாது தவிக்கிறதா மஹாராஷ்டிரா? - கதிகலக்கும் கள நிலவரம்!

மும்பையில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து கொரோனாவுக்கு 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத இறுதியில் 105 வயது முதியவரும் அவரது 95 வயது மனைவியும் மகாராஷ்டிராவின் லாத்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், மகாராஷ்டிராவில் ஔரங்காபாத் அருகிலுள்ள ஜல்னாவில் 107 வயது மூதாட்டி முதுகுத்தண்டுவட ஆபரேஷனுக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் 10 நாள்களில் அவர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தார் என்பது நம்பிக்கை தரும் செய்தி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு