Published:Updated:

`அந்த ஒரு சொட்டு நாக்குல பட்டதும் ஆஹான்னு சொன்னா..!' - புனே பயில்வான் டீ கொடுத்த பலே அனுபவம்

கடையின் பெயரே கம்பீரமாக இருந்தது! ஆம் தேநீர் கடையின் பெயர் `பயில்வான்’! எவ்வளவு கம்பீரம்! `ஆத்மார்த்தமான சுவையை உணர்ப்போகிறீர்கள்…’ என்றார் தமிழகத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்! அப்படி என்ன புதிதாக சுவையைக் கொடுத்துவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் யோசித்துக்கொண்டிருந்தேன்.

தொடர்ச்சியான நீண்ட பயணங்களின்போது, எவ்வித களைப்பும் ஏற்படாமல் நம்மை உற்சாகமாக வைத்திருக்க மெல்லிசை ஓசையும், வழி நெடுக இயற்கையின் அணிவகுப்பும், பறவைகளின் கூவலும் எந்த அளவுக்கு உதவுகின்றனவோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் உடனடி உற்சாகம் வழங்கவல்லது சுடச்சுட பருகப்படும் தேநீர்... நமது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு தேநீர் ரகங்கள் இருப்பதைப் பார்க்க முடியும். அதில் ஒரு சிறப்பு ரகம்தான் பயில்வான் தேநீர்!

புனேவிலிருந்து அவுரங்காபாத் நோக்கி சென்றுகொண்டிருந்தோம். பயணம் மேற்கொள்ளும்போது, ஆங்காங்கே சாலையோரம் இருக்கும் தேநீர் கடைகளில் சூடாக தேநீர் பருகுவது தனி அனுபவம்தான். உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தரக்கூடிய அனுபவம் என்றே சொல்லலாம்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

அப்படி ஓர் உற்சாகத்தை அனுபவிக்க ஒரு தேநீர் கடைக்குள் நுழைந்தோம். கடையின் பெயரே கம்பீரமாக இருந்தது! ஆம் தேநீர் கடையின் பெயர் `பயில்வான்’! எவ்வளவு கம்பீரம்! `ஆத்மார்த்தமான சுவையை உணர்ப்போகிறீர்கள்…’ என்றார் தமிழகத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்! அப்படி என்ன புதிதாக சுவையைக் கொடுத்துவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் யோசித்துக்கொண்டிருந்தேன்.

நம்மூரைப் போல பாய்லரின் உதவியோடு பாலில் டிகாக்‌ஷனை கலந்து அப்போதைக்கு தேநீர் தயாரித்துக் கொடுக்கும் பழக்கம் அங்கில்லையாம்! ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு சுடுகலனில் வைத்து வழங்கும் முறையே அங்கு புழக்கத்தில் இருந்ததை கவனிக்க முடிந்தது. நம் பகுதியைப்போல பாய்லர் ரக தேநீர் கடைகள் இல்லாததால், `பயணத்தின்போது எங்குமே தேநீர் கடைகளைப் பார்க்க முடியவில்லையே…’ என ஓட்டுநரிடம் விசாரித்தேன்! அப்போதுதான் சுடுகலன் பற்றிய குறிப்பை எனக்கு வழங்கினார் அவர்.

சுடுகலனில் வைக்கப்பட்டிருந்தது தேநீர்! பயில்வான் டீயை ஆவி பறக்க சூடாகப் பிடித்துக் கொடுக்க, எனது உள்ளங்கையினுள் தேநீர் கோப்பை அடைக்கலமானது. பெயரில் கம்பீரம் இருந்தாலும், வழங்கப்பட்ட தேநீரின் அளவில் கொஞ்சம் கூட கம்பீரம் இல்லை! சிறிய கோப்பையில் வழங்கப்பட்ட தேநீரின் அளவோ மிகவும் குறைவு! நமது தேநீர் கடைகளில் கிடைக்கும் தேநீரில் மூன்றில் ஒரு பங்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

`என்னங்க இது… தம்மாத்துண்டு அளவுதானா…’ என பயில்வானைக் கேட்கத் தோன்றியது. அவருக்கு தமிழ் தெரியாதே! இந்தியில் கேள்வி கேட்கும் அளவுக்கு மொழி ஞானமோ எனக்கில்லை. ஓட்டுநரிடம் கேள்வி கேட்பதற்கு முன்னரே முதலில் நாவில்பட்ட தேநீர் துளிகளின் மாயாஜாலச் சுவையில் மயங்கிப் போனேன்.

`அடடா என்ன ஒரு சுவை…’ என பயில்வான் தேநீருக்காக பிரசாரம் செய்ய வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அப்படியொரு சுவை! அளவைப் பற்றி இருந்த கவலையெல்லாம் தேநீரின் ஆவியோடு ஆவியானது! குறைவாக இருந்தால் என்ன தனித்துவமான சுவை தானே முக்கியம்!

பயில்வான் டீ
பயில்வான் டீ
உடல் சூட்டைத் தணிக்கும் ஆயில் மசாஜ்; கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

`உங்க பிரசாரம் எல்லாம் தேவ இல்லங்கோ… எங்களுக்கு ஏற்கெனவே புனேவில் மட்டும் 300 கிளைகள் இருக்கு...’ என்ற பயில்வானின் மைண்ட் - வாய்ஸை ஓட்டுநர் மூலம் கேள்விப்பட `வாவ்’ சொன்னது மனது! இதே பயில்வான் தேநீரை அடுத்த நாள் மும்பையில் தேடியபோது கிடைக்கவில்லை! பயில்வான் டீ, புனேவின் தனித்த அடையாளம்போல!

திகட்டாத இனிப்பு… துல்லிய துவர்ப்பு… மெல்லிய ஏலத்தின் பிரதிபலிப்பு! இதுதான் பயில்வான் தேநீருக்கான எனது பிரசாரம்! `கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல, தேநீரின் அளவு சிறுத்தாலும் சுவையில் எந்தக் குறையுமில்லை! ஒரு கோப்பை தேநீருடன் நமது ஆசை நிச்சயம் அடங்கிவிடாது. இரண்டு கோப்பைகளையாவது பருகினால்தான் நமது தேநீர் தாகம் அடங்கும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீரிழிவு நோயாளர்களுக்கு இந்த பயில்வான் டீ குறித்த விஷயம் தெரிந்துவிட்டால், ரத்தச் சர்க்கரை அளவு விரைவில் அதிகரித்துவிடும் என்பது மட்டும் உண்மை! ஆகவே, நீரிழிவு நோயாளர்கள் பயில்வான் தேநீரைக் குடிக்க முயன்று அதன் சுவைக்கு அடிமையாகிவிட வேண்டாம் என்பது என் அன்பு வேண்டுகோள்!

பயில்வான் தேநீர்… சுவையில் பயில்வான்தான்!

தேநீர் நம்மை அடிமையாக்கக்கூடிய ஒரு பானம் என்றே சொல்லலாம். தேநீர் சார்ந்த பல்வேறு வரலாற்று விஷயங்களை விரிவாகப் பேசினால்தான் தேநீருக்கே மதிப்பு. அது தனி அரசியல்! தேநீர் அரசியலுக்குள் இப்போது நுழைய வேண்டாம்!

உலர்ந்த தேயிலைகளை அப்படியே பயன்படுத்தும்போதுதான் அவற்றின் முழுப் பலன்களை அனுபவிக்க முடியும் என்பது உண்மை! இருப்பினும் எப்போதாவது இது போன்ற வித்தியாசமான தேநீர் ரகங்களை சுற்றுலா செல்லும் இடங்களில் சுவைப்பது புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால், எக்காரணம் கொண்டும் சுவைக்கு அடிமையாக வேண்டாம் என்பது மருத்துவனாக எனது வேண்டுகோள்!

தேயிலை
தேயிலை
அவமதித்த உறவினர்கள்; விடாத தன்னம்பிக்கை; யூடியூப் சேனல் வருவாயில் மருத்துவப்படிப்பை முடித்த இளைஞர்!

பயில்வான் தேநீரைப் பொறுத்தவரையில், அதிலிருந்த ஏலம் மனதை ஆசுவாசப்படுத்தி செரிமான சுரப்புகளைத் தூண்டும் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை. ஏலத்தில் உள்ள நலம் கொடுக்கும் வேதிப்பொருள்கள் நமது உடல் நலனில் அக்கறை கொள்ளும். பாலோடு சேர்த்துக் கொதிக்க வைக்கப்பட்டிருந்தாலும் தேயிலையின் பலன்கள் கொஞ்சம் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், வெள்ளைச் சர்க்கரைதான் பிரச்னையே! பல்வேறு தொற்றாநோய்களுக்கு மிக முக்கியமான எதிரி இந்த வெள்ளைச் சர்க்கரை. நீரிழிவு, உடல்பருமன், இதய நோய்கள் எனப் பலவற்றுக்கும் அடித்தளம் அமைக்கும் திறமை வெள்ளைச் சர்க்கரைக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகப் பனைவெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்டால் பயில்வான் தேநீர் சுவையில் மட்டுமல்ல, மருத்துவ குணத்திலும் பயில்வான் என்று அடித்துச் சொல்லலாம்!

பயில்வான் தேநீர் கடையிலிருந்த பயில்வானிடமும் இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறேன்! பனையின் பெருமை புனேவில் இடம்பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு