Published:Updated:

ஆழ்ந்த தூக்கம், அழகைக்கூட்டும்!

அழகும் ஆரோக்கியமும்

பிரீமியம் ஸ்டோரி

மாதந்தவறாமல் பார்லர் விசிட், காஸ்ட்லியான காஸ்மெட்டிக்ஸ்... இவை எவையும் தராத சரும அழகை செலவில்லாத ஒரு விஷயம் சாத்தியப்படுத்தும். யெஸ்... தூக்கம்.சரும அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் முறையான, போதுமான தூக்கமே அடிப்படை.

தூக்கம் இல்லாவிட்டால் சருமம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும், தூக்கத்துக்கும் சரும ஆரோக்கியத்துக்குமான தொடர்பு பற்றி சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் தரும் பயனுள்ள தகவல்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள்...

தூங்கும்போது நம் உடலின் பல பகுதிகளும் பழுது பார்க்கப்படும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சருமமும் அப்படித்தான். பகல் வேளையில் சுற்றுப்புறச் சூழல் மாசு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், புகை, தொற்று... இப்படிப் பலதையும் நம் சருமம் எதிர்கொள்கிறது. இவற்றிலிருந்து சருமத்தை மீட்டெடுக்க தூக்கம் மிக முக்கியம்.

தூங்கும்போது, அதுவும் இருட்டில் நம் உடலில் சுரக்கும் மெலட்டோனின் எனும் ஹார்மோன், சரும பாதிப்பு களைச் சரிசெய்யக்கூடியது. தவிர, வளர்ச்சிக்குக் காரணமான சில ஹார்மோன்களும் தூக்கத்தில் சுரந்து திசுக்களின் ஆரோக்கியத்துக்கு உதவும். மன அழுத்தத்துக்குக் காரணமான கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பும் இரவில் குறையும்.

ஓர் ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குவோருக்கு, ஏழு - எட்டு மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடும்போது நீரிழிவு வரும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாம்.

 செல்வி ராஜேந்திரன்
செல்வி ராஜேந்திரன்

அடுத்து, சரியான நேரத்துக்குத் தூங்குவதும் முக்கியம். தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாக இரவு உணவை முடிப்பது, ஒரு மணி நேரத்துக்கு முன்தூங்கும் அறையை இருட்டாக்குவது போன்றவை அவசியம். போதுமான தூக்கம் இல்லாதபோது கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பு அதிகமாகி சருமத்தில் பருக்கள், எக்ஸீமா, சோரியாசிஸ் போன்ற பிரச்னைகளுக்குக் காரணமாகும்.

வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது கொடுக்கும் கவனத்தைவிட, இரவு தூங்கும் போது உங்கள் சருமத்துக்கு நீங்கள் இன்னும் அதிக கவனிப்பைக் கொடுக்க வேண்டும். தூங்கும்போது சருமத்தில் எந்த மேக்கப்பும் இருக்கக் கூடாது. ரெகுலராக மேக்கப் போடுபவர்கள், பேபி ஆயில் கொண்டு முகத் திலுள்ள மேக்கப்பைத் துடைத்து எடுத்துவிட்டு, தரமான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். முகத்தைத் துடைத்துவிட்டு, மாயிஸ்சரைசர் தடவ வேண்டும். அது காய்ந்ததும் தூங்கச் செல்லவும். துடைக்க வேண்டாம்.

ஆழ்ந்த தூக்கம்
ஆழ்ந்த தூக்கம்

வறண்ட சருமம் உள்ளவர்கள் எமோலியன்ட் ரிச் மாயிஸ்சரைசரையும், எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் ஜெல் வடிவ மாயிஸ்சரைசரையும் உபயோகிக்கலாம். அதில் நான்-காமிடோஜெனிக் (Noncomedogenic) அல்லது ஆயில்ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 35 வயதுக்கு மேலானவர்கள் இரவில் ஆன்டிஏஜிங் க்ரீம் உபயோகிக்கத் தொடங்கலாம். ரெட்டினால் கலந்த க்ரீம்கள் சிறந்தவை.

கண்களுக்கடியில் சுருக்கங்கள் மற்றும் கருமையைப் போக்க அண்டர் ஐ சீரம் பயன்படுத்தலாம். இவற்றில் நயாசினமைடு (Niacinamide), வைட்டமின் கே மற்றும் ரெட்டினால் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். ஹைலுரானிக் அமிலம் (Hyaluronic acid) இருந்தால் சருமத்தை வறண்டுபோகாமல் காப்பதுடன், உறுதியோடும் வைத்திருக்கும்.

இரவில் போதுமான அளவு தூங்கும்போது கொலாஜென் உற்பத்தி நன்றாக இருப்பதன் விளைவாக சருமம் சுருக்கங்கள் இன்றி இளமையாக இருக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சருமப் பொலிவு கூடும்.கருவளையங்கள் மறையும். கூந்தல் உதிர்வு கட்டுப்படும்.

சரியாகத் தூங்காதபோது வாயின் ஓரங்கள் கீழ்நோக்கித் தொய்வடையும். நெற்றியில் கோடுகள் விழும். கண்கள் வீங்கினாற்போலத் தெரியும். இவை எல்லாம் சேர்ந்து களைப்பான, முதுமையான தோற்றத்தைத் தரும். நன்றாகத் தூங்கும்போது இந்தப் பிரச்னைகள் மறைவதோடு, சருமத்தில் நீங்கள் தடவும் க்ரீம், மாயிஸ்சரைசர் அனைத்தும் நன்றாக உள்ளே ஊடுருவும். இளமைத் தோற்றம் நிச்சயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு