Published:Updated:

சென்னை: 21.5 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா எதிர்ப்பு திறன்... செரோ ஸ்டடி முடிவுகள்!

சென்னை
சென்னை

சென்னையில் தண்டையார்பேட்டை மண்டலத்தில், மிக அதிகமாக 44.2 சதவிகிதம் பேருக்கு கொரோனா வந்து சென்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் வசிக்கும் மக்களில் எத்தனை சதவிகிதத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளார்கள், எத்தனை பேருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாகியுள்ளன என்பதைக் கண்டறியும் நோக்கில் சமீபத்தில் `செரோ பிரிவேலென்ஸ் ஸ்டடி (Seroprevalence study)' என்றோர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பிட்ட ஓரிடத்தில் உள்ள மக்களைத் தோராயமாகத் தேர்வு செய்து அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்டறியும் முறைக்கு `செரோ பிரிவேலென்ஸ் ஸ்டடி' என்று பெயர்.

Representational Image
Representational Image

கொரோனா தொற்றை அடிப்படையாக வைத்து சென்னை மாநகராட்சி ஜூலையில் நடத்திய இந்த ஆய்வில், சென்னையில் வசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், தொற்று ஏற்படாதவர்கள் எனத் தோராயமாக 12,000 மக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த ரத்த மாதிரிகளில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளனவா, ஆன்டிபாடிகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரா அல்லது ஏசிம்ப்டமடிக் நிலையிலிருந்தவரா என்பதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த செரோ ஸ்டடியின் முதல் கட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

`சென்னை மக்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் வந்துவிட்டதா?' செரோ ஸ்டடி சொல்லப்போவது என்ன?

இதில் சென்னை மாநகர பகுதியில், ஜூலை மாதம் வரை 21.5 சதவிகிதம் பேருக்கு கொரோனாவுக்கான ஆன்டிபாடிகள் உடலில் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் ஏறக்குறைய 82.16 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 21.5 சதவிகிதம் பேருக்கு மட்டுமே கொரோனவுக்கான எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் உருவாகியிருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.

Chennai
Chennai
Vikatan

சென்னையில் தண்டையார்பேட்டை மண்டலத்தில், மிக அதிகமாக 44.2 சதவிகிதம் பேருக்கு கொரோனா வந்து சென்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 34.4%, திருவொற்றியூர் மண்டலத்தில் 31.6%, தேனாம்பேட்டை மண்டலத்தில் 29.4%, அண்ணா நகர் மண்டலத்தில் 25.2%, ஆலந்தூர் மண்டலத்தில் 11.1%, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 10.3% பேருக்கு நோய்ப் பரவல் ஏற்பட்டிருப்பது இந்த செரோ ஸ்டடியின் முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மிகக் குறைவாகப் பெருங்குடி மண்டலத்தில் 7.3%, மாதவரம் மண்டலத்தில் 7.1 % பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

``மொத்தத்தில் சென்னையில் வசிக்கும் மக்களில் முக்கால்வாசி பேருக்குக் கூட கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகவில்லை' என்ற தகவலை இந்த செரோ ஸ்டடியின் ரிசல்ட் உறுதிசெய்கிறது. இந்நிலையில் பொருளாதார மற்றும் வாழ்வியல் காரணங்களை முன்னிட்டு லாக்டௌனில் ஏற்பட்டுள்ள தாராள தளர்வுகள் கொரோனாவின் பரவலை மேலும் அதிகரித்து நிலைமையைத் தீவிரமாக்கலாம். அதனால் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருங்கள்" என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும்.

அடுத்த கட்டுரைக்கு