Published:Updated:

`கொரோனா வைரஸைத் தடுக்க அந்தரத்தாமரை ஆய்வு!’ -சுதா சேஷய்யனுக்கு மரபுவழி மருத்துவரின் கோரிக்கை

தங்கதுரை
தங்கதுரை

அந்தரத் தாமரையை ஆய்வு செய்து அதிலிருந்து மருந்து கண்டுபிடித்தால் அது நமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும். நம் நாட்டினுடைய பாரம்பர்ய மரபுவழி மருத்துவம் உலகம் அறியச் செய்வதோடு பாதுகாக்கவும் முடியும்.

உலகமே கொரோனா தொற்று அச்சத்தில் முடங்கிக் கிடக்கிறது. நாளுக்குநாள் தொற்று அதிகரிப்பதோடு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் முதற்கட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதாகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு சேலம் சித்தர் மரபுவழி மருத்துவர் தங்கதுரை, அந்தரத்தாமரையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அந்தரத் தாமரை
அந்தரத் தாமரை

இதுபற்றி சேலம் சித்தர் மரபுவழி மருத்துவர் தங்கதுரை, ''கொரோனா வைரஸ் அழிப்பதற்கு அலோபதி மருத்துவத்தோடு மரபுவழி மருத்துவத்தையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதற்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யனுக்கு முதலாவதாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சித்த மருத்துவத்தில் அனைத்துவிதமான நோய்களுக்கும் மருந்து உண்டு. காலப்போக்கில் சித்த மருத்துவத்தில் நாட்டம் குறைந்ததால் தற்போது கொரோனா வைரஸுக்கு மருந்து தேட வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஆய்வுக் குழுவில் கடுக்காய், கற்பூரவல்லி, திப்பிலி, சித்தரத்தை, அழிஞ்சில், நொச்சி, சீந்தில், கோரைக்கிழங்கு, ஏழிலைப்பாலை, ஆடாதொடை, நீர்பிரம்மி போன்ற மூலிகைத் தாவரங்களை ஆய்வு செய்ததாக அறிந்தேன். எனக்கு சித்த மருத்துவத்தில் 18 வருட அனுபவம் உண்டு. சீனாவில் கொரோனா பரவியபோதே மத்திய, மாநில ஆயுஷ் நிறுவனத்துக்கும் உலக சுகாதார அமைப்புக்கும் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீரைப் பரிந்துரை செய்ய மின்னஞ்சல் அனுப்பினேன். அது மார்ச் மாதம் நடைமுறைக்கு வந்தது. உடலுக்குள் ஊடுருவும் கொடிய கிருமிகளை அழிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் அருளிய பாடலில்...

அழுகிரந்தி குஷ்ட மடர்ந்த கரப்பான்

புழுவுறு மக்கூடு முதற்போகும் - அழகாகும்

மிந்திர நீலக்கருங்க ணேந்திழையே யெப்போழ்து

மத்திரத் தாமரையா லாய். -சித்த வைத்திய பதாற்தகுண விளக்கம்.

சுதா சேஷய்யன்
சுதா சேஷய்யன்

அதாவது அந்தரத் தாமரை அழுகின ரணம், குஷ்டம், கரப்பான், மார்புக்குள் கூடு கட்டுகின்ற நுண் கிருமிக் கூட்டை அழிக்கும் என்கின்றன இப்பாடல் வரிகள். கொரோனா வைரஸ் மார்புக் கூட்டுக்குள் கூடு கட்டும் கிருமி வகையைச் சார்ந்தது. எனவே, இந்த அந்தரத் தாமரையை ஆய்வு செய்ய வேண்டும். அந்தரத் தாமரைக்கு ஆகாயத் தாமரை, குழித்தாமரை என்ற பெயர்களும் உண்டு. இது ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்ற நீர்நிலைகளில் படந்து வளரக்கூடியது. வெங்காயத் தாமரை போல பெரியதாக இல்லாமல் ரோஜா இதழ் அடுக்குகளைப் போல சிறியவையாக இருக்கும்.

இந்த அந்தரத் தாமரையை ஆய்வு செய்து அதிலிருந்து மருந்து கண்டுபிடித்தால் அது நமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும். நம் நாட்டினுடைய பாரம்பர்ய மரபு வழி மருத்துவம் உலகம் அறியச் செய்வதோடு பாதுகாக்கவும் முடியும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு