Published:Updated:

`எனக்கே நான் புதிதாகத் தெரிகிறேன்!' -இளம்பெண்ணை நெகிழவைத்த புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இளம்பெண் ஒருவருக்கு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

சண்முகப்பிரியா சிகிச்சைக்கு முன்னும் பின்னும்
சண்முகப்பிரியா சிகிச்சைக்கு முன்னும் பின்னும்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா(19). கல்லூரியில் படித்துவரும் சண்முகப்பிரியாவுக்கு நீண்ட வருடங்களாகவே பற்கள் முன்தள்ளி முக அழகு குறைந்து காணப்பட்டு வந்துள்ளார். மேலும், உணவையும் மென்று சாப்பிடுவதில் அவருக்குச் சிரமம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைக் கிளிப் மூலம் சரிசெய்யலாம் என்று ஒருவர் கொடுத்த ஆலோசனையின் பேரில், இரண்டு ஆண்டுகளாகக் கிளிப் போட்டு முயன்று வந்துள்ளார். ஆனாலும், எந்த மாற்றமும் தெரியவில்லை. இதனால், மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முகச் சீரமைப்புக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் குழு, எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர்.

மருத்துவர்கள் குழு
மருத்துவர்கள் குழு

அவருக்கு பற்கள் மட்டுமல்லாமல், மேல் தாடையும் முன்தள்ளி இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, உடனே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டனர். தலைமை முக சீரமைப்பு நிபுணர் மருத்துவர் சுரேஷ்குமார் தலைமையில் உதவி மருத்துவர் பாஸ்கர், விஜயகாந்த், திவ்யா மற்றும் மயக்கவியல் மருத்துவர் கனிமொழி ஆகியோர் அடங்கிய குழு சுமார் 3 மணி நேரம் போராடி முகச் சீரமைப்பு சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. சிகிச்சைக்குப் பின்பு சண்முகப்பிரியா நலமுடன் உள்ளார். தன் முகத்தில் நடந்த மாற்றத்தைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம். ``பல் மட்டும் வெளியே தள்ளி இருந்தால், அதற்குக் கிளிப் போட்டுச் சரிசெய்ய முயலலாம். ஆனால், எலும்பே வெளியே தள்ளி இருக்கும்போது, கிளிப் போட்டாலும், அது பயனில்லாத ஒன்றுதான். இவருக்கு ஆர்த்தோ கினதிக் என்ற முன் தாடை முகச் சீரமைப்பு சிகிச்சை கொடுக்க முடிவு செய்தோம். அறுவை சிகிச்சையின்போது, முகத்தில் தழும்புகள் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக, மேல் தட்டின் கீழே உள்ள ஈறு, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, முன் தாடையின் இரண்டு பக்கங்களிலும், எலும்புகளின் சிறுபகுதி வெட்டி எடுக்கப்பட்டன. அதனுடன் இருந்த இரு பற்கள் அகற்றப்பட்டன. பிறகு நடுவில் உள்ள மேல் தாடை எலும்பை உள்ளே தள்ளி 2 பக்கங்களிலும் சிறு தகடு மற்றும் ஸ்க்ரூ மூலம் இணைத்து முகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

முக சீரமைப்புக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் உள்ளது. முதல்முறையாக இங்கு இந்த சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளோம்.
டீன் மீனாட்சி சுந்தரம்

சிகிச்சைக்குப் பிறகு மாணவிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. முக சீரமைப்புக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் உள்ளது. முதல்முறையாக இங்கு இந்த சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளோம். தொடர்ந்து, இதுபோன்று பிரச்னை உடையவர்கள் தயங்காமல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரலாம்" என்றார் உறுதியாக.

மருத்துவர்களின் சிகிச்சை குறித்துப் பேசிய சண்முகப்பிரியா, ``சிகிச்சைக்குப் பின்பு எனக்கே நான் புதிதாகத் தெரிகிறேன். சக தோழிகள் எல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டதாகச் சொல்றாங்க. ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு. டாக்டர்களை என்றென்றும் மறக்க மாட்டேன்" என்றார் உற்சாகத்துடன்.