Published:Updated:

`இரண்டு கர்ப்பப்பைகள்; ஆறு முறை கருச்சிதைவு!'- எட்டு வருடங்கள் கழித்து குழந்தையைப் பெற்றெடுத்த பெண்

குழந்தை
குழந்தை

நிக்கோலாவின் கர்ப்பப்பை பிரச்னையால் அவரால் கருத்தரித்தாலும் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை.

26 வயதான நிக்கோலா கின்னஸ் பிறக்கும்போதே இரண்டு கர்ப்பப்பைகளுடன் பிறந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த இவருக்குக் கர்ப்பப்பையின் வாய், பிறப்புறுப்பு ஆகியவற்றைப் பிரிக்கக்கூடிய மெல்லிய தோலினால் ஆன ஒரு சுவர் இருந்துள்ளது. இதனால் நிக்கோலா தனது மாதவிடாய் நாள்களில் மிகுந்த சிரமங்களைச் சந்தித்திருக்கிறார்.

குழந்தையுடன் நிக்கோலா
குழந்தையுடன் நிக்கோலா
Mercury Press

கர்ப்பப்பையில் உள்ள இந்தச் சுவரை அறுவைசிகிச்சை மூலம் நீக்கலாம் என்று மருத்துவர்களை நாடிச் சென்ற நிக்கோலாவுக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைத்துள்ளது. அந்தச் சுவரை நீக்கினால் நிக்கோலாவின் உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர்கள் அறுவைசிகிச்சைக்கு முன்வரவில்லை. இரண்டு கர்ப்பப்பைகளின் காரணமாக அவருக்குக் குழந்தை பிறப்பதிலும் பிரச்னை உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

`குழந்தையின் உதையை உணர்ந்தேன்!’- இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை பெற்று குழந்தை பிரசவித்த பெண்

சில வருடங்கள் கழித்து 18 வயதில் நிக்கோலாவுக்கு அந்தோணி லட்டா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால், நிக்கோலாவின் கர்ப்பப்பை பிரச்னையால் அவரால் கருத்தரித்தாலும் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை. திருமணமானதிலிருந்து கிட்டத்தட்ட ஆறுமுறை கருத்தரித்துள்ளார் நிக்கோலா. ஆனால், கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு முறையாக இல்லை என்ற காரணத்தால் ஆறுமுறையும் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நிக்கோலா அதீத மன அழுத்தத்துக்குச் சென்றுள்ளார்.

நிக்கோலா-அந்தோணி தம்பதியினர்
நிக்கோலா-அந்தோணி தம்பதியினர்
Mercury Press

எனவே கர்ப்பப்பை அறுவைசிகிச்சைக்காக மீண்டும் மருத்துவர்களை நாடிச் சென்றுள்ளார். இறுதியாக லண்டன் இப்ஸ்விச் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய முன்வந்துள்ளனர். இந்த அறுவைசிகிச்சையில் அவருக்குக் கர்ப்பப்பையில் உள்ள சுவர் நீக்கப்பட்டது.

இந்தச் சிகிச்சை முடிந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு, நிக்கோலா மீண்டும் கருத்தரித்துள்ளார். இம்முறை அவருக்கு இரண்டரை கிலோ எடையுள்ள அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு நிக்கோலா-அந்தோணி தம்பதியினர் `ரெஜி' என்று பெயரிட்டுள்ளனர்.

குழந்தையுடன் நிக்கோலா
குழந்தையுடன் நிக்கோலா
Mercury Press

ரெஜியை தான் பெற்றெடுத்த தருணம் பற்றி நிக்கோலா கூறும்போது, "அம்மாவாக வேண்டும் என்ற எனது கனவை நான் ஒருபோதும் கைவிடவில்லை. அறுவைசிகிச்சை செய்ய நான் தொடர்ந்து போராடினேன். பல போராட்டங்களைக் கடந்து ரெஜியைப் பெற்றெடுத்தேன். ரெஜி என் உலகின் சிறிய அதிசயம்" என்று உணர்ச்சி பெருக்கெடுக்கக் கூறுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு