Published:Updated:

``சாந்தா அம்மாவின் வாழ்நாள் வைராக்கியம் இதுதான்!" - கெளதமி உருக்கம்

``நம் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய போர் வீரராகத்தான் மருத்துவர் சாந்தா அம்மாவை நான் பார்க்கிறேன்." - கெளதமி

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சாந்தாவின் மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தீரா துயரில் ஆழ்த்தியிருக்கிறது. புற்றுநோயாளிகளின் நலனுக்காகவும் சிகிச்சைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட அவர் தனது 94 வயதில் மரணமடைந்துள்ளார். பிரதமர் மோடியில் ஆரம்பித்து ஏராளமான அரசியல் பிரமுகர்கள், பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள் எனப் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கெளதமி
நடிகை கெளதமி

இந்நிலையில், மருத்துவர் சாந்தாவுடன் கடந்த சில வருடங்களாக பயணித்து வந்த நடிகை கெளதமியிடம் பேசினோம். ``மருத்துவர் சாந்தா அம்மாவின் அரும்பணிகள் குறித்து ஏற்கெனவே நான் அறிந்திருந்தாலும், புற்றுநோயால் நான் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகுதான் சாந்தா அம்மாவோடு நெருக்கமாகப் பயணிக்க ஆரம்பித்தேன். புற்றுநோயாளிகளுக்காக `லைஃப் அகெய்ன்' என்ற அறக்கட்டளையை நான் ஆரம்பித்தபோது சாந்தா அம்மா எனக்கு பக்கபலமாக இருந்து வழிகாட்டினார்.

எனக்கு மட்டுமல்ல புற்றுநோய் குறித்து எங்கு விழிப்புணர்வு நடந்தாலும் அது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் மருத்துவர் சாந்தா அம்மாவின் கவனத்துக்கு வராமல் இருக்காது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை முன்னெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு என்னுடைய ஆழமான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறேன். அதேபோல எங்களுடைய அறக்கட்டளை பணிகளுக்கு மருத்துவர் சாந்தா அம்மாவே நேரில் வருகை தந்து ஆதரவளித்திருக்கிறார்.

டாக்டர் சாந்தா
டாக்டர் சாந்தா
செவிலியர்கள் புடைசூழ இறுதி ஊர்வலம் - அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம்

சரியான சிகிச்சை மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலான மருத்துவத்தைத் தேடி எங்களிடம் வந்த புற்றுநோய் நோயாளிகள் பலரை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அவர்களை வாஞ்சையோடு அரவணைத்துக்கொண்டு சிகிச்சை வழங்கியிருக்கின்றனர். இப்படி எத்தனையோ லட்சம் நோயாளிகளுக்கு வாழ்வை மீட்டுக்கொடுத்த சாந்தா அம்மாவின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது. அவர் இன்று இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எழுந்து நிற்க முடியாத சூழலில்கூட சாந்தா அம்மா புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையைத் தொடந்து வந்தார். கொரோனா நேரத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாதது குறித்து வருந்தினார். இறுதிவரை அவரின் ஒவ்வொரு செயலும் புற்று நோயாளிகளின் நலன் கருதியே இருந்தது. இந்தப் பயணத்தில் அவர் ஏராளமான சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புற்றுநோய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் ஆரம்பித்து இன்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை இந்திய அளவில் கவனம் பெறச் செய்திருப்பதன் பின்னணியில் சாந்தா அம்மாவின் அர்ப்பணிப்பான, அப்பழுக்கற்ற, தொய்வில்லாத உழைப்பு இருக்கிறது. யாராக இருந்தாலும் தரமான சிகிச்சையைப் பெறலாம் என்ற அளவுக்கு அந்த மருத்துவமனையை இதுவரை நடத்தி வந்திருக்கிறாரென்றால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க வேண்டும். நாம் வரலாற்றில் போர் வீரர்களைப் பற்றி நிறைய படித்திருக்கிறோம்.

doctor shanta
doctor shanta
`சென்டிமென்ட் செயின்... இறுதிக்கட்ட முடிவுகள்... கடைசி ஆசை!' - மருத்துவர் சாந்தா என்னும் சகாப்தம்

நம் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய போர் வீரராகத்தான் மருத்துவர் சாந்தா அம்மாவை நான் பார்க்கிறேன். கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதுதான் அவர் வாழ்நாள் வைராக்கியமாக இருந்தது. எங்கள் மருத்துவமனையைத் தேடி வரத் தேவையில்லாத நாளுக்காகத்தான் அவர் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார். அவருடைய சாதனைகளை ஒரு பேட்டியில் விவரித்துவிட முடியாது. காலத்தால் அழிக்க முடியாத சேவையைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் சாந்தா அம்மா" என்றார் உருக்கமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு