தங்களுடைய அழகாலும் நடிப்பாலும் மக்களை நேசிக்க வைத்த தேவதைகளுக்கு இது சற்றுக் கடினமான காலம் போலும். நடிகை சமந்தா, தான் `மயோசைட்டிஸ்' (Myositis) நோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும், அது தன் உடலுக்குத் தரும் துன்பங்களையும் சில வாரங்களுக்கு முன்னால் தன்னுடைய சமூக வலைதளம் வழியே பகிர்ந்திருந்தார்.
இதோ, தற்போது நடிகை பூனம் கவுர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில், ``எனக்கு வந்திருக்கிற ஃபைப்ரோமயால்ஜியா (Fibromyalgia) என்ற நோய், என்னுடைய பல திட்டங்களைச் செயல்படுத்துவதன் வேகத்தை தடை செய்துவிட்டது. அது என்னைக் கட்டாய ஓய்வெடுக்கும் நிலைக்குத் தள்ளி விட்டது'' என்று போஸ்ட் செய்திருக்கிறார்.
பூனர் கவுர், ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (NIFT) படித்தவர், மாடலிங் துறையில் நுழைந்தார். தெலுங்குத் திரையுலகில் நாயகியாக நடிக்க ஆரம்பித்த பூனர் கவுர், கன்னடம், மலையாளம், தமிழ் எனத் தென்னிந்திய மொழிகளில் கவனம் ஈர்த்த சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் நடிகர் நரேனுடன் `நெஞ்சிருக்கும் வரை' படத்தில் அறிமுகமானவர், அதன் பிறகு `பயணம்', `உன்னைப்போல் ஒருவன்', விஷாலுக்கு தங்கையாக `வெடி', ஷாமுக்கு ஜோடியாக `6 மெழுகுவர்த்திகள்' போன்றவை, அவர் நடித்தவற்றில் குறிப்பிடத்தக்கவை.
அரசியலிலும் ஆர்வம் உண்டு பூனத்துக்கு. அண்மையில் ராகுல் காந்தி நடைபயணமாக தெலங்கானாவுக்கு சென்றபோது, அவருடன் பூனமும் இணைந்து நடந்தார். அப்போது, பூனம் கவுரின் கரத்தைப் பிடித்தபடி ராகுல்காந்தி நடந்ததைப் பலரும் ட்ரோல் செய்ய, `நான் நடக்கும்போது தவறி கீழே விழ இருந்தேன். அதனால்தான் ராகுல்காந்தி என் கையைப் பிடித்து நடந்தார்' என அவர்களுக்குப் பதிலளித்திருந்தார்.
தற்போது பூனம் கவுருக்கு வந்திருக்கிற ஃபைப்ரோ மயால்ஜியா உடல் சோர்வு, தசை மற்றும் எலும்புகளில் வலி, ஞாபக மறதி, மனநிலையில் திடீர் மாற்றம், அதிகப்படியான தூக்கம் என பல பிரச்னைகளை ஏற்படுத்துமாம்.
தன் உடல்நிலை குறித்த போஸ்ட்டை இன்ஸ்டாவில் பூனம் பகிர்ந்தவுடன், `உங்கள் உடலின் வலியை மனதின் வலிமையால் உதைத்துத் தள்ளுங்கள்', `நீங்கள் ஒரு போராளி; உள்ளுக்குள் வலியிருந்தாலும் வெளியில் அன்பை விதைத்து அதை வெல்லுங்கள்', `நிம்மதியாக உறங்குங்கள்; இந்த பிரச்னை சில காலமே' என்று பலரும் தன்னம்பிக்கை வார்த்தைகளால் தேற்றியிருக்கிறார்கள். நாமும் சொல்கிறோம், உடல் நலம் பெற்று மீண்டு வாருங்கள் பூனம் கவுர்!