Published:Updated:

`அவர்கள் உதாசீனப்படுத்தினர்... இத்தாலி நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது!’- ரஜினிகாந்த் #JanataCurfew

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

'இளைஞர்கள்,பெரியவர்கள் என அனைவரும் மார்ச் 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 19-ம் தேதி பொதுமக்களிடம் உரையாற்றினார். அந்த உரையில், “கொரோனாவை முன்கூட்டியே அறியும் வசதியோ அதற்கு மருந்தோ இல்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். இது, கொரோனாவுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும். அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார்.

மோடி
மோடி

பிரதமரின் இந்த உரை தொடர்பாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடக்கூடாது. பொதுவெளியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் கொரோனா வைரஸ், 12 முதல் 14 மணி நேரம் பரவாமல் இருந்தாலே இந்தியா மூன்றாவது நிலைக்குச் செல்லாமல் தடுத்துவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 22-ம் தேதி #JanataCurfew என்ற பெயரில் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோன்று, இத்தாலியில் கொரோனா வைரஸ் இரண்டாவது நிலையில் இருந்தபோது, அந்த அரசாங்கம் ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு கொடுத்தது. ஆனால், அதை அந்நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதை உதாசீனப்படுத்தினர். அதனால் பல ஆயிரம் உயிர்கள் பலியாகின. அதுபோன்ற நிலைமை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது. அதனால் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் மார்ச் 22-ம் தேதி, ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் தங்களது உயிர்களையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவருகின்றனர். பிரதமர் சொன்னதைப் போல், மார்ச் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அவர்களை நாம் மனதார பாராட்டுவோம். அவர்கள் குடும்பத்தினரின் நலனுக்காக நாம் ஆண்டவனை வேண்டிக்கொள்வோம் ” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு