Published:Updated:

`டெஃபனெட்டா மீட் பண்ணணும்' -வாழ்த்திய ரஜினி... சிலிர்க்கும் சித்த மருத்துவர்!

சித்த மருத்துவரிடம் பேசிய ரஜினி
சித்த மருத்துவரிடம் பேசிய ரஜினி

"ரஜினி படங்களைப் பார்த்து ரசிகனாக மாறியவன் அல்ல நான்" - சித்த மருத்துவர் வீரபாபு.

சித்த மருத்துவர் வீரபாபு

கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளித்து வருவதால், சித்த மருத்துவர் வீரபாபுவை நடிகர் ரஜினிகாந்த் போனில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். கொரோனா நோய் பரவத் தொடங்கிய சில நாள்களிலேயே, களத்தில் இறங்கிப் பணியாற்றத் தொடங்கியவர் வீரபாபு. வெறும் 5 நாள்களில் 69 கொரோனா நோயாளிகளுக்கு நெகட்டிவ் முடிவு வந்ததால் அவரும் பிரபலமானார்.

Siddha treatment
Siddha treatment

வி.ஐ.பி-களுக்கு சிகிச்சை, புழல் சிறைக்கே சென்று சிகிச்சை என்று தொடர் பணியாற்றிக்கொண்டிருந்தவரிடம், சென்னையில் இரண்டு கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ள பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவிட்-19 நோயாளிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு தங்கியிருப்போருக்கு சுத்தமான, ஆரோக்கியமான உணவு வழங்குவது, மருத்துவமனை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தாமல் இயல்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது, இதுவரை உயிரிழப்புகள் ஏற்படாதது போன்ற பல்வேறு தகவல்கள் அவரைப் பற்றி தொடர்ந்து பரவிவந்தன.

பாராட்டிய ரஜினி

இவரின் செயல்பாடுகள் பற்றி கேள்விப்பட்ட ரஜினிகாந்த், அவரை செல்போனில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ரஜினியின் தீவிர ரசிகரான வீரபாபு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ரஜினியின் பிறந்தநாளன்று மணப்பாக்கத்தில் உழைப்பாளி என்ற பெயரில் உணவகத்தைத் தொடங்கினார். வெறும் 10 ரூபாய்க்கு உணவு வழங்கியதால் பிரபலமடைந்த நிலையில், சாலிகிராமத்தில் இரண்டாவது கிளையையும் தொடங்கினார்.

Veerababu
Veerababu

ரஜினியிடம் பேசிய திளைப்பிலிருந்தவரிடம் பேசினோம்:

"என்னிடம் பேசுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக, அவரது வீட்டு லேண்ட்லைனிலிருந்து அழைத்து தகவல் சொன்னார்கள். அந்த நேரம், வார்டில் நோயாளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மாலை 5.45 மணியளவில் பேசினார். வழக்கம்போல் படபடவென்று பேசினார்.

'கொரோனா நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க. ரொம்ப நல்லாவும் பண்றீங்க. நம்ம டெஃபனெட்டா மீட் பண்ணணும். ஊரடங்கு முடியட்டும் மீட் பண்ணலாம்' என்று சொன்னார்.

உழைப்பாளி உணவகத்தையே அவருக்காகத்தான் ஆரம்பித்தேன். உணவகம் தொடங்கியபோது, அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தொடர்புகொண்டு பேசி வாழ்த்தினார். ஆனால், ரஜினியை பார்க்கவோ பேசவோ இதுவரை வாய்ப்பு அமையவில்லை.

ரஜினி படங்களைப் பார்த்து ரசிகனாக மாறியவன் அல்ல நான். சாதாரண நிலையிலிருந்து உழைத்து முன்னேறியவர். பிரதமரே அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கும் வகையில் தன் தகுதியை உயர்த்திக்கொண்டவர். அந்த உழைப்புதான் என்னை ஈர்த்தது. அவர் உழைப்பை பறைசாற்றும் விதமாகத்தான், அவர் நடித்த படத்தின் பெயரான உழைப்பாளியை என் உணவகத்தின் பெயராக வைத்தேன்.

Rajini spoke to Siddha Practitioner
Rajini spoke to Siddha Practitioner
69 பேருக்குக் கொரோனா நெகட்டிவ்... அலோபதியும் சித்த மருத்துவமும் இணைந்ததன் வெற்றி!

என்னுடைய இன்ஸ்பிரேஷனே அவர்தான். அவரே என்னை அழைத்துப் பேசுகிறார் என்றபோது உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது. நோயாளிகள் சூழந்துநின்றதால், என்னால் அதிகம் பேச இயலவில்லை. 'தேங்க் யூ சார்..., தேங்க் யூ சார்!' என்று மட்டும்தான் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேயிருந்தேன்" சிலிர்க்கிறார் வீரபாபு.

அடுத்த கட்டுரைக்கு